இன விகிதாசாரத்திற்கு ஏற்ப அரச தொழில்வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தால் எமது இளைஞர், யுவதிகளுக்கு வேலையற்றதொரு நிலைமை ஏற்பட்டிருக்காது – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Wednesday, December 6th, 2017

நாட்டின் சனத்தொகைக்கு ஏற்ப உலகில் மிக அதிகளவிலான அரச பணியாளர்களைக் கொண்டு விளங்குகின்ற எமது நாட்டில், இன விகிதாசாரத்திற்கு ஏற்ப அரச தொழில்வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்குமானால் எமது இளைஞர், யுவதிகளுக்கு இத்தகைய வேலையற்றதொரு நிலைமை ஏற்பட்டிருக்காது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் பொது நிர்வாக, முகாமைத்துவம், உள்நாட்டலுவல்கள், உள்@ராட்சி மற்றும் மாகாண சபைகள் ஆகிய அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
இந்த நாட்டில், தேசிய நல்லிணக்கம் வலுவாக ஏற்படுத்தப்பட வேண்டிய உண்மையான – நேர்மையான தேவை இருக்குமானால், அனைத்து இனங்களையும், அனைத்துத் துறைகளிலும்; முதலில் சமப்படுத்த வேண்டும்.

இத்தகையதொரு நிலைமை ஏற்படுவதைத் தடுப்பதற்காகவே மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்ஹ பிரேமதாச அவர்கள் ஒரு சுற்றறிக்கையைக் கொண்டு வந்திருந்தார். 1990/15ஆம் இலக்க சுற்றறிக்கை. அதன்படி இன விகிதாசாரத்தின் அடிப்படையிலான அரச தொழில்வாய்ப்புகளை வழங்கியும் வந்தார். அவரது மறைவுக்குப் பின்னால், அந்த சுற்றறிக்கை தூக்கி எறியப்பட்டுவிட்டது.

இயற்கை அனர்த்தமொன்று ஏற்படப் போகின்றதென்றால், அதனை எமது மக்களுக்கு தமிழில் அறிவிப்பதற்குக்கூட ஒரு தமிழ் அதிகாரி வளிமண்டளவியல் திணைக்களத்தில் இல்லாத நிலை. இந்த நாட்டில் தமிழ் பேசும் மக்களது நிலை எந்தளவிற்கு துரதிர்ஸ்டவசமான நிலையில் இருக்கின்றது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாக இல்லையா? எனக் கேட்க விரும்புகின்றேன்.

எனவே, எமது மக்களுக்கான அரசியல் உரிமைக்கான அதிகாரங்களைப் பகிர்வதை காலம் தாழ்த்தி வருவதைப் போல், ஏற்கனவே பகிரப்பட்டுள்ள அதிகாரங்களை வழங்காதிருப்பதுபோல், எமது மக்களுக்கான தொழில் உரிமைக்கான வாய்ப்புகளிலும் காலம் தாழ்த்தப்படக்கூடாது என்பதையே இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

Untitled-6 copy0000

Related posts: