இன, மத சமூகங்களின் ஒன்றுபட்ட ஒற்றுமையே அரசியலுரிமைப் பிரச்சினையின் தீர்வுக்கான திறவுகோலாகும்! ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டில் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, March 20th, 2016

அரசியல் களத்தில் ஒன்றுபட்டு நிற்கவேண்டிய மக்கள் தமக்குள் பகைமையை வளர்த்து மோதிக்கொண்ட வரலாறுகள் இன்னமும் ஆறாத வடுக்களாக நிறைந்துள்ளது. அதிலிருந்து இன்று நாம் மீண்டு வந்துகொண்டிருப்பதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்.

எமது மக்களின் மதங்கள் வெவ்வேனாலும் மனங்கள் இங்கு ஒன்றுதான் உள்ளது. வழிபடும் விதங்கள்  வேறாக இருந்தாலும் பேசும் மொழி ஒன்றே எம்மை ஒன்று சேர்க்கும் இணைப்புப் புள்ளியாகவுள்ளது. வரலாற்றில் என்றுமே யாராலும் அழிக்க முடியாத தமிழ் மொழி என்ற இணைப்பு புள்ளியில் இருந்து நாம் அனைவரும் ஒன்று பட்டு நிமிர்ந்தெழுவோம். என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் எழுச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா உரையாற்றுகையில் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் எழுச்சி மிகு மாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தமை குறித்து நான் அகம் மகிழ்கின்றேன். நேசக்கரம் நீட்டி எம்மையும் இந்த மாநாட்டிற்கு அழைத்தமைக்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பாகவும், எமது மக்களின் சார்பாகவும் எனது நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

எமது மக்களின் மதங்கள் வெவ்வேறு ஆனாலும் மனங்கள் இங்கு ஒன்றுதான். வழிபடும் விதங்கள் வேறாக இருந்தாலும் பேசும் மொழி ஒன்றே எம்மை ஒன்று சேர்க்கும் இணைப்புப் புள்ளி. வரலாற்றில் என்றுமே யாராலும் அழிக்க முடியாத தமிழ் மொழி என்ற இணைப்பு புள்ளியில் இருந்து நாம் அனைவரும் ஒன்று பட்டு நிமிர்ந்தெழுவோம்.

இதே வேளை ஒரே மொழியை நாம் பேசுகின்றவார்களாக இருக்கின்ற போதும் நாம் தமிழர்கள், நாம் முஸ்லிம்கள் என்ற இனத்துவ அடையாளங்களை ஒரு போதும் நாம் இழந்து விடாமல் இருப்பதோடு, நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற அடையாளத்தையும் பாதுகாத்து அதையும் நாம் வெளிப்படுத்த வேண்டும்.

இன மத சமூகங்களின் ஒன்றுபட்ட ஒற்றுமையே அரசியலுரிமைப் பிரச்சினையின் தீர்விற்கான திறவுகோல் ஆகும். அந்த ஒற்றுமைக்காக, அரசியலுரிமை தீர்விற்காக உழைத்துவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அர்ப்பணிப்புகளை நான் மனம் மகிழ்ந்து வரவேற்கிறேன்.

எம் இனிய சகோதரர்களே, ….. இன்றைய நாளில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத் தலைவரான மர்ஹூம் அஷ்ரப் அவர்களை இந்த வரலாற்று வேளையில் நினைவு கூற விரும்புகின்றேன். அண்ணன் அஷ்ரப் அவர்களும் நானும் அரசியல் களத்தில் சகோதர வாஞ்சையோடு ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்களையும், அர்த்தமுள்ள அரசியல் பணிகளையும் முன்னெடுத்த காலச்சூழலை நான் நினைத்துப்பார்க்கிறேன்.

மத்திய அரசுகளுடன் இணக்க அரசியல் வழிமுறையை வெற்றிகரமாக முன்னெடுத்த சாணக்கியத் தலைமையாகவே அண்ணன் அஷ்ரப் அவர்களை நான் பார்க்கிறேன். அந்த வெற்றிடத்தை சகோதரர் ஹக்கீம் அவர்கள் வெற்றிகரமாக நிரப்பி வருவதையிட்டு நான் பாராட்டுகின்றேன்.

தமிழ் மக்கள் அரசியல் உரிமைகளுக்கான போராட்டத்தை ஆரம்பித்தபோது, அதற்கு முஸ்லிம் மக்களும் பங்களிப்பச் செய்தததையும், ஆதரவு தெரிவித்ததையும் நான் மறந்துவிடவில்லை. ஆனாலும,; தவறான திசை வழியில் திருப்பப்பட்ட துப்பாக்கிகள் சகோதர முஸ்லிம் மக்களையும் பலி கொண்டதோடு, கிழக்கில் வன்முறைகளாகவும், வடக்கில் கட்டாய வெளியேற்றமாகவும் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தப்பட்டமை துயரம் தோய்ந்த ஒரு வரலாறாகும்.

அரசியல் களத்தில் ஒன்று பட்டு நிற்க வேண்டிய மக்கள் தமக்குள் பகைமையை வளர்த்து மோதிக்கொண்ட வரலாறுகள் இன்னமும் ஆறாத வடுக்கள் நிறைந்தவை. அதிலிருந்து இன்று நாம் மீண்டு வந்துகொண்டிருப்பதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்.

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை இறுதிவரையும் கண்டித்தும், தஞ்சம் தேடி வந்த முஸ்லிம் சகோதரர்களை புத்தளத்தில் குடியேற்றக் கிராமங்கள் அமைத்துக் குடியேற்றியும் என்னால் முடியுமானதை செய்திருக்கிறேன்.

என் அன்புக்குரிய சகோதரர்களே…. இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு அகச்சுயாதிக்க அலகு வழங்கப்பட வேண்டும் என்பதையும் ஈ.பி.டி.பியின் அரசியல் இலக்கில் பிரதானமான ஒன்றாக நான் வலியுறுத்தி வந்திருக்கின்றேன்.

இலங்கைத் தாய் நாட்டில் தேசிய சிறுபான்மை இனங்களான தமிழ்பேசும் மக்களாகிய நாம், புதிய அரசியலமைப்பின் ஊடாக நமது அரசியல் உரிமைகளையும், நமது மத மற்றும் அடிப்படை உரிமைகளையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாம் ஒற்றுமையாகவும், உறுதியாகவும் எமது அனைத்து உரிமைகளுக்காகவும் அர்ப்பணிப்போடு முயற்சிப்போமேயானால் நிச்சயமாக அந்த இலக்கை அடைந்து கொண்டு, எமது அழகிய இலங்கைத் தாய் நாட்டில் கௌரவத்தோடு வாழ முடியும் என்பதையும் உரிமையுடன் உங்களிடம் வேண்டுகோளாக விடுக்கின்றேன்.

அழிவு யுத்தம் நடந்தபோதும், அதன் பின்னரான நெருக்கடி மிகுந்த காலத்திலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை தலைமையேற்று வழி நடத்தி வரும் எனது சேநமிகு ரவூப் ஹக்கீம் அவர்களையும், அவருடன் இணைந்த அவரது கட்சி உறுப்பினர்களையும் நான் மனம் நிறைந்து வாழ்த்துகிறேன்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களும் தனியே முஸ்லிம் சகோதர மக்களின் உரிமைகளுக்காக மட்டும் உழைப்பவர்கள் அல்ல. பேசும் மொழியாலும், வாழும் வரலாற்று வாழ்விடங்களாலும் ஒன்றுபட்டு நிற்கும் அனைத்து தமிழ் பேசும் மக்களுக்காகவுமே குரல் எழுப்பி வருவதை நான் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.

இதே வேளை இன ஐக்கியம், இன சமத்துவம் என்பவற்றுக்காக நடைமுறையில் செயலாற்றி வருவதையும் நான் வரவேற்கின்றேன்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற பெருவிருட்சம் மேலும் விழுதுகள் இறக்கி, கிளைகள் விட்டு, வேரூன்றி எமது மக்களின் ஆழ்மனங்களில் நம்பிக்கை தரும் நல்லெண்ண விதைகளை

மேலும் விதைக்க வேண்டி நான் வாழ்த்துகிறேன்.

மதிநுட்ப சிந்தனைகள் மக்களை இலக்கு நோக்கி வழிநடத்திச் செல்லட்டும்

Related posts: