இன நல்லிணக்கத்தை பாதுகாக்க அரசு அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டும் – வவுனியாவில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Saturday, June 8th, 2019

இனநல்லிணக்கத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் அரசு உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இனமுரண்பாடுகள் மேலும் வலுப்பெற்று மக்கள் மிகவும் நெருக்கடியான ஒரு சூழலுக்குள் தள்ளப்படுவதை தவிர்க்கமுடியாது போய்விடும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்திற்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக செயலாளர்கள் மற்றும் ஆதரவாளர்களைச் சந்தித்து கலந்தரையாடினார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

எமது கட்சியின் நிலைப்பாடு என்பது பெரும் சவால்களுக்கும் நெருக்கடிகளுக்கும் மத்தியில் எக்காலத்திலும் இன நல்லிணக்கத்தை வளர்த்தெடுப்பதிலும் அதனை பாதுகாப்பதற்காகவுமே; ஓயாது உழைத்துவருகின்றோம்.
அதுமாத்திரமன்று இவ்வாறான நெருக்கடியான சூழ்நிலையிலும் நாம் நிதானமாக செயற்படுவது மட்டுமன்றி எமது கட்சியின் கொள்கை மற்றும் நிலைப்பாடுகளை ஏனைய சக அரசியல் கட்சிகளுக்கும் மக்களுக்கும்; தெளிவுபடுத்தி வருகினறோம்.
வவுனியா மாவட்டத்தை பொறுத்தவரையில் மூவின மக்கள் வாழ்ந்துவருகின்றார்கள். அது மட்டுமன்றி பல சமயங்களை பின்பற்றுகின்ற மக்களும் வாழ்ந்துவருகின்றார்கள். எனவே இம்மாவட்டத்தில் நல்லிணக்கத்தை பாதுகாத்து வளர்த்தெடுக்கவேண்டியது இன்றைய காலச்சூழலில் மிகவும் அவசியமானது.

இதனை புரிந்துகொண்டு அரசாங்கம் இன நல்லிணக்கத்திற்கும் ஒற்றுமைக்கும் பாதகம் ஏற்படாத வகையிலும் உரிய முறையில் சகல மக்களுக்கும் ஏற்றவகையிலும் அவரவர்களது சமய அனுஷ்டானங்களை பின்பற்றுவதற்கும் அவர்களது கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களை பின்பற்றி பாதுகாக்கும் வகையிலும் முறையான நடவடிக்கைகளை வகுத்து அவற்றை நிதானமாக செயற்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் இன நல்லிணக்கத்திற்கு பாதகம் ஏற்படும் வகையில் சூழல்கள் அமையும் என்பது தவிர்க்க முடியாததாகிவிடும்.

எமது கட்சியின் கொள்கை நிலைப்பபாட்டுக்கு ஏற்றவாறு இன நல்லிணக்கத்தை பாதுகாக்கவும் வளர்த்தெடுக்கவும் நாம் எக்காலமும் அர்ப்பணிப்புடன் உழைத்துவருகின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதே நேரம் கிளிநொச்சி மாவட்டத்திலும் கட்சியின் நிர்வாக செயலாளர்கள் மற்றும் ஆதரவாளர்களை சந்தித்து தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக தெளிவுபடுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Related posts:


வாழ்வின் இருப்பே கேள்விக்குறியாக இருந்தபோது கரங்கொடுத்து தூக்கி நிறுத்தியவர் டக்ளஸ் தேவானந்தா - புங்...
இளைஞர்களுக்கு எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கை கொடுக்கும் நல் வழிகாட்டிகளாக செயற்படுங்கள் - தோழர்கள் ம...
சிறந்த ஆரம்பமே ஆரோக்கியமான பலாபலனை தரும் - அதற்கான இலக்கை அடைய உறுதியுடன் பயணியுங்கள் – கட்சியின் வே...