இனவாதம் ஒரு நச்சு விதை : அது எத்தரப்பிலிருந்து முன்னெடுக்கப் பட்டாலும் அதனை அடக்க வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் வலியுறுத்து!

நாட்டில் மீண்டும் இன முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதற்கு சில தீயசக்திகள் முயற்சிக்கின்றன. அவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்க கூடாது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 21 ஆம் திகதி 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
அவர் இதுதொடர்பாக மேலும் உரையாற்றுகையில்
நாட்டில் ஏற்கெனவே தோன்றியிருந்த இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் தற்போது ஒருசில தீய சக்திகளால் மீண்டும் முன்னெடுக்கப்படுவதற்கான முயற்சிகள் ஆங்காங்கே தென்படுவதாகத் தெரிய வருகின்றது. அந்தவகையில், அண்மைக் காலமாக சகோதர இன மக்களாகிய சிங்கள மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்குமிடையே மோதலை ஏற்படுத்துகின்ற வகையில் சில செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.
அவ்வாறே கிழக்கில் சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்குமிடையே மோதல்களை ஏற்படுத்த சில தீய சக்திகள் முனைந்து வருவதாக அறிய முடிகின்றது. எனவே இவ்வாறான செயற்பாடுகளை நான் வன்மையாகக் கண்டிப்பதுடன் இவ்வாறான செயற்பாடுகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய ஏற்பாடுகள் அவசியமாகும் என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றேன்.
இனவாதம் என்பது ஒரு நச்சு விதையாகும். எனவே அது எந்தத் தரப்பிலிருந்து முன்னெடுக்கப்படுவதாயினும் அதனை இரும்புக் கரம் கொண்டே நாம் அடக்க வேண்டும். தவிர, நியாயமான கோரிக்கைகள் என்று வரும்போது அதுதொடர்பில் நாம் மனிதாபிமான ரீதியிலான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியுமென்பதையும் இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|