இனசமூகங்களிடையேயான நம்பிக்கை சிதைக்கப்படுகின்றன – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Wednesday, March 7th, 2018

நாட்டில் அனைத்துத் துறைகளும் பாரிய பிரச்சினைகளுக்கு உட்பட்டே இருக்கின்றன. சமூகங்களிடையே நம்பிக்கைகள் சிதைந்து வருகின்றன. பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியில் காணப்படுகின்றது. அரசியல், ஸ்திரத் தன்மை இழந்து காணப்படுகின்றது. எங்கு பார்த்தாலும் போராட்டங்கள், ஊர்வலங்கள், பகிஸ்கரிப்புகள்.  சட்டம், ஒழுங்கை தங்களது கைகளில் எடுத்துக் கொண்டு, வன்முறைகளில் ஈடுபடுகின்ற வன்முறையாளர்களையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

மக்களின் பிரதிநிதிகளாகவே நாம் இந்தச் சபையினை பிரதிநிதித்துவப் படுத்துகின்றோம். மக்களின் நலன்கள் கருதியே நாம் ஒரு தீர்மானத்தை எடுக்கின்றோம் என்றால், நாம் ஏன் அவை தொடர்பில் எமது மக்களுக்கு தெளிவாக அறிவுறுத்துவதில்லை? என்ற கேள்வியே என்னுள் எழுகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

வலுக்கட்டாயமாகக் காணாமற் போக்கப்படுதலில் இருந்து எல்லா ஆட்களையும், பாதுகாத்தல், பற்றிய சர்வதேசச் சமவாயச் சட்டமூலம் தொடர்டபில் நாடாளுமன்றில் உரையாற்றுகையிலேயே டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

‘வலுக்கட்டாயமாக காணாமற் போக்கப்படுதலில் இருந்து எல்லா ஆட்களையும் பாதுகாத்தல் பற்றிய சர்வதேச சமவாயம்’ என்கின்ற இந்த சட்டமூலத்திற்கு அமைவாக, மேற்படி காணாமற்போனோரைக் கணடறிவதற்கான அலுவலகமும் செயற்படுமா? அல்லது ‘காணாமற்போக்கப் பட்டோரையும்’ கண்டறிவது தொடர்பில் செயற்படுமா? என்பதுதான் எமது மக்களிடையே நிலவுகின்ற கேள்வியாக இருக்கின்றது.

அதாவது, இந்த அலுவலகம் ஆரம்பிக்கப்பட்ட திகதி முதற்கொண்டு அதிலிருந்து எதிர்காலத்தில் காணாமற் போக்கப்படுவோர் தொடர்பில் மாத்திரமே கண்டறியுமா? அல்லது இதற்கு முன்பதாக – கடந்த காலத்தில் காணாமற் போக்கப்பட்டோர் தொடர்பிலும் கண்டறியுமா?  இதற்கு முன்பதாக – கடந்த காலத்தில்  காணாமற் போக்கப்பட்டோர் தொடர்பிலும் கண்டறியும் என்றால், அது எப்போதிருந்து? என்பது தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்தப்படல் வேண்டும்.

பொது மக்களுக்குத் அறிவுறுத்தப்பட்டு, கலந்துரையாடப்பட்டு, மக்கள் தெளிவினைப் பெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். அவ்வாறு இல்லாமல், ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துக்களை முன்வைத்து வருவதால், எமது மக்கள் மத்தியில் தேவையற்ற முரண்பாடுகள் தோற்றுவிக்கப்படுகின்றன.

யுத்தத்திற்குப் பின்னரான காலமானது இனங்களுக்கிடையில் சந்தேகங்களை களைகின்ற, பரஸ்பர  நம்பிக்கைகளை கட்யெழுப்புகின்ற, அதன் ஊடாக பகைமைகளை மறுக்கின்ற தேசிய நல்லிணக்கத்தை, சகவாழ்வினைக் கட்டியெழுப்பி, வலுவாக்கின்ற காலமாக இருத்தல் வேண்டும். அதன் மூலமாகவே இந்த நாட்டின் சமூக, பொருளாதார, ஆரோக்கியமான அரசியல் மேம்பாடு நோக்கிச் செல்ல முடியும்.

மக்களுக்குத் தெளிவுபடுத்தி, முறையான கலந்துரையாடலுக்கு விடப்படாமை காரணமாகவே அரசியல் யாப்பு தொடர்பில் தேவையற்ற சர்ச்சைகள் ஏற்கனவே நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருந்தன. ஆளுக்காள் ஒவ்வொன்று கூறப்போய் தமிழ் மக்கள் தரப்பிலிருந்தும், சிங்கள மக்கள் தரப்பிலிருந்தும் அதற்கு எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன.

எனவே, இந்த சட்டமூலமாகட்டும், காணாமற்போனோரைக் கண்டறிவது தொடர்பான அலுவலகமாகட்டும் இவை தொடர்பிலும் எமது மக்களுக்கு அறிவுறுத்தப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:


பொலிஸாரும் படையினரும் அந்தந்த மாவட்டங்களின் மக்கள் தொகைக்கு அமையவும் இன விகிதாசாரத்தைப் பேணும் வகை...
தேசிய இனங்களின் சமத்துவமும் தேசிய பாதுகாப்பும் இரட்டைக் குழந்தைகளே! – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. ...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டம் வெற்றி: இறால் அறுடைக்கான அனுமதிக்கான அனுமதிகளை வழங்கியது ...