தேசிய இனங்களின் சமத்துவமும் தேசிய பாதுகாப்பும் இரட்டைக் குழந்தைகளே! – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!
Friday, June 7th, 2019உலக வரை படத்தில் ஒப்பிட்டுப்பார்த்தால் அழகிய எங்கள் இலங்கைத்தீவு ஒரு கீரைப்பாத்தி அளவு நாடுதான். ஆனாலும் இங்கு வாழும் குடிமக்களோ, அன்றி தேசிய இனங்களோ எவருக்கும் கிள்ளுக்கீரைகள் அல்ல. எங்கே ஒரு முரண்பாடு வெடிக்கின்றதோ, அங்கே அரசியல் புகுந்து விளையாடும்! எங்கே பதற்றங்கள் நிகழ்கின்றனவோ, அங்கே ஆதிக்க சக்திகளின் கரங்கள் நீண்டு ஆதாயம் தேடும். இவைகளை தகர்த்தெறிய எமக்கு தேவை நாம் அனைவரும் இலங்கையர் என்ற ஒன்றுபட்ட உரிமைக்குரலே! அதற்கு தேவை இங்கு வாழும் தேசிய இனங்களின் சமத்துவ உரிமையே என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
தமிழ் மக்கள் இலங்கையர்களாக வாழ வேண்டும் என்பதற்காக தமிழர்கள் என்ற அடையாளத்தை இழப்பதற்கோ, தமிழர்களாக வாழ வேண்டும் என்பதற்காக இலங்கையர்கள் என்ற அடையாளத்தை இழப்பதற்கோ தயாராக இல்லை. எமது மக்கள் இலங்கையர்களாகவும் அதே வேளையில் தமிழர்களாகவுமே வாழ விரும்புகிறார்கள். வீடு தோறும் இரப்பவர்களுக்கெல்லாம் மாணிக்கம் அள்ளிப் பிச்சை கொடுத்திடும் மாவலி கங்கை நாடெங்கள் நாடே. என்று அன்று பாடிய தமிழ் புலவன் இன்றும் பாடி இலங்கைத்தீவை இதய பூர்வமாக நேசிக்க வேண்டும் என்றால் இங்கு வாழும் தமிழ் தேசிய இனத்தின் அரசியலுரிமைகளுக்கு முதலில் தீர்வு காண வேண்டும். அரசியல் தீர்வும், அபிவிருத்தியும் எமதிரு கண்கள்! இவையிரண்டும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தில் இருந்து தொடங்கி அதை முழுமையாக நடைமுறைப்படுத்தி, அதற்கு மேலதிக அதிகாரங்களை வழங்கி,.. அதிலிருந்து எமது அரசியல் இலக்கு நோக்கி செல்ல வேண்டும். இவைகளையே நாம் ஆரம்பம் முதல் வலியுறுத்தி வந்திருக்கிறோம். காலம் கடந்த அரசியல் ஞானமாக, கண் கெட்ட பின்னர் சூரிய வணக்கமாக,.. இதையே சொல்லளவிலேனும் சகலரும் இன்று என்றுக்கொண்டுள்ளனர். இதை அன்றே எம்முடன் சேர்ந்து ஏற்றிருந்தால் முள்ளி வாய்க்கால் அவலங்கள் கூட இங்கே நடந்திருக்காது… நாம் வகுத்துக்கொண்ட தீர்க்கதரிசனமிக்க அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் ஊடக சுதந்திரம் கூட அன்று மறுக்கப்பட்ட நிலையில்,.. இன்று அந்த ஊடங்களே எமது தீர்க்க தரிசனங்களை பிரதான கட்டுரைகளாகவும், ஆசிரியர் தலையங்கங்களாகவும் எழுதி வருகின்றன. அதற்காக நான் ஊடகங்களுக்கு நன்றி கூறுகின்றேன்..
காலம் மாறி வரும் போது ஊடக உழைப்பாளிகளின் பிரச்சினைகளுக்கும் ஆவன செய்வேன். மாற்றத்தை உருவாக்க மக்களே இன்று தயாராகி விட்டார்கள். மத்தியில் ஆட்சியில் யாரும் அமரலாம். அந்த அரசை எமது மக்களின் அரசியல் நலன்கள் நோக்கி அழைத்து வரும் சக்தி தமிழர் தரப்பிற்கே இருக்கின்றது. இன்று இந்த வரலாற்றுத் தவறை இழைத்தவர்களை தமிழ் மக்கள் இனியும் ஒரு போதும் ஏற்கமாட்டார்கள்.
அரசியல் உரிமைக்குத் தீர்வு! அன்றாட அவலங்களுக்குத் தீர்வு!! அபிவிருத்தி உயற்சிக்குத் தீர்வு!!! இவைகளை இதுவரை எமது அரசியல் பலத்திற்கு ஏற்றவாறு சாதித்த எம் கரங்கள் இனி வரும் காலங்களில் பலப்படும். முன்னரை விடவும் பல மடங்கு இனியும் சாதிக்கும். தேசிய இனங்களின் சமத்துவ உரிமையும் தேசிய பாதுகாப்பும் இரட்டைக்குழந்தைகளே!…
எனவே, முதலில், இந்த நாட்டையும், நாட்டின் அனைத்து மக்களையும் பேணிப் பாதுகாக்கக்கூடிய வகையில் ஏற்பாடுகளை மேற்கொள்ளுங்கள், பொறுப்பில் இருக்கின்றவர்கள் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்குப் பொறுப்பான வகையில் நடந்து கொள்ளுங்கள் .
Related posts:
|
|