இனங்களிடையே பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் தேசிய நல்லிணக்க செயற்பாடுகள் அமைய வேண்டும்! – நாடாளுமன்ற உறுப்பினர்  டக்ளஸ் தேவானந்தா

Tuesday, March 29th, 2016

கடந்த காலங்களில் எமது மக்களின் உணர்வுப்பூர்மான அபிலாiஷகள் தொடர்பில் அவதானம் செலுத்தி, அவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் முழுமையாக எட்டப்படாமையானது எமது மக்களின் பல்வேறு அதிருப்திகளுக்குக் காரணமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், கடந்த காலங்களில் மக்களின் குடும்ப சமூகமய அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அவை போதுமானதாக இன்மையும், இதைத் தாண்டிய வகையிலான புறத் தேவைகள் தொடர்பிலான அபிவிருத்திகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தலும் காரணமாக, எமது மக்களிடையே வாழ்வாதார மற்றும் ஏனைய சில விடயங்கள் தொடர்பிலான அதிருப்தி நிலை ஏற்பட்டுள்ளது.

இத்தகைய அதிருப்தி நிலையைப் போக்கும் வகையிலான ஏற்பாடுகளே இன்றையத் தேவையாக உள்ளது. அந்தவகையில், எமது மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அதனடிப்படையிலான வேலைத் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். இந்த நாட்டில் ஏனைய மக்களதும் எமது மக்களதும் சில பிரச்சினைகள் ஒன்றாக இருந்தபோதிலும், பல பிரச்சினைகள் வேறுபட்டவையாகவே காணப்படுகின்றன. அந்த வகையில், இப் பிரச்சினைகள் இனங்காணப்பட்டு, அவற்றுக்குத் தீர்வினை வழங்கத்தக்கதான வேலைத்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டுமேயொழிய, நடைமுறையிலுள்ள தேசிய திட்டங்களின் மூலமாக மாத்திரம் எமது மக்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்துவிட முடியாது.

கடந்த காலங்களில் இவ்வாறான தேசிய திட்டங்கள் மூலமாகவே எமது மக்களின் பிரச்சினைகளும் அணுகப்பட்டதால்தான், அவை இன்னும் தீராப் பிரச்சினைகளாகத் தொடர்கின்றன. எமது மக்களின் இத்தகைய அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும் என்பதற்காகவே நாம் கடந்த கால ஆட்சிகளில் பங்கெடுத்திருந்தோம். எனினும், அந்த ஆட்சியாளர்கள் யுத்தத்தில் பங்கெடுத்தவர்களாகவும், யுத்தத்தில் வெற்றி கொண்டவர்களாகவும் இருந்ததாலும், குறுகிய அரசியல் பலமே எங்களிடம் இருந்ததாலும் எமது மக்களின் இத்தகைய அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க இயலாது போய்விட்டது.

எனவே, தற்போது அவ்வாறான சூழ்நிலை இல்லாத நிலையில், இனங்களுக்கிடையில் பரஸ்பர புரிந்துணர்வின் அடிப்படையில் தேசிய நல்லிணக்கத்தை நோக்கிய செயற்பாடுகளே அவசியமாகவுள்ளன. இது, இரண்டு தரப்பிலிருந்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகளாகும். எனவே, அதற்கென ஈரினங்களை அடிப்படையிலிருந்து தயார்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Related posts: