இந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Friday, March 22nd, 2019

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தின் கடைகள் தொடர்பில் கடந்த வருடம் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கமைவாக, அங்கு 40 வருடங்களாக வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 35 வர்த்தகர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, அவர்களுக்கு 35 கடைகள் வழங்கப்பட வேண்டுமென உள்ள நிலையில், அங்குள்ள அனைத்துக் கடைகளுக்குமாக தற்போது திறந்த கேள்வி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. இதன் தற்போதைய நிலைமை தொடர்பில் அமைச்சர் அவர்கள் அவரது உரையின்போது தெளிவுபடுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீர்வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

கடந்த வருட வரவு – செலவுத் திட்டத்தில் தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையம் மற்றும் கொழும்பினை இணைத்து யாழ்ப்பாணத்தில் நவீன பொருளாதார மையமொன்று உருவாக்கப்படும் என்றும், நெடுந்தீவு மற்றும் கிளிநொச்சியில் இரண்டு உணவு பதனிடும் நிலையங்கள் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது இன்னமும் உருவாக்கப்பட்டதாக இல்லை. அதேபோன்று இந்த வருட வரவு – செலவுத் திட்டத்தில் மத்திய பொருளாதார மையமொன்றுடன் இணைந்ததாக 10 துணைப் பொருளாதார நிலையங்கள் வடக்கு மாகாணத்தில் தாபிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, ஏற்கனவே கூறப்பட்ட யாழ்ப்பாணத்து நவீன பொருளாதார மையம் உருவாக்கப்படுமா? அது உருவாக்கப்பட்ட பின், அதனுடன் இணைத்து இந்த 10 துணைப் பொருளாதார நிலையங்கள் உருவாக்கப்படுமா? அல்லது, வவுனியா பொருளாதார மத்திய நிலையத்துடன் இணைத்தா 10 துணைப் பொருளாதார நிலையங்கள் உருவாக்கப்படும்? போன்ற கேள்விகள் தொடர்பில் விளக்கங்கள் இல்லாமலேயே இருக்கின்றன. அமைக்கும்போது பார்ப்போம் என்று ஆறுதல் அடைந்து கொண்டு, நெல் கொள்வனவு தொடர்பிலான அரசாங்கத்தின் வினைத்திறனற்ற செயற்பாடுகள் காரணமாக வடக்கு, கிழக்கு விவசாய மக்கள் இம்முறையும் பாரிய பாதிப்புகளை அடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வவுனிக்குளத்தின் கீழ் 1,500 ஏக்கரில் காலபோக நெற்செய்கை மேற்கொண்ட மக்கள் தங்களது அறுவடைகளை நியாய விலைக்கு விற்க முடியாதுள்ளனர். மேலும், முல்லைத்தீவின் கோட்டைகட்டியகுளம், அம்பலப்பெருமாள்குளம் விவசாய மக்களும் மிகக் குறைந்த விலைக்கே தனியார் துறையினருக்கு தங்களது அறுவடைகளை விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அதேபோன்று அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் இம்மாத ஆரம்பம் வரையில் நெல் சந்தைப்படுத்தும் சபை நெல்லினைக் கொள்வனவு செய்யவில்லை என அப்பகுதி விவசாய மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், கிளிநொச்சி மாவட்டத்திலே ஒரு விவசாயியிடமிருந்து தலா 2 ஆயிரம் கிலோ நெல்லினை நெல் சந்தைப்படுத்தல் சபையினர் கொள்வனவு செய்ததாகவும், இதன்போது ஒரு பேக்கில் 50 கிலோ எனத் தெரிவித்து 50.5 கிலோ நெல் கொள்வனவு செய்யப்பட்டு, ஒரு விவசாயியிடமிருந்து 20 கிலோ வீதமாக நெல் மோசடி செய்யப்பட்டுள்ளதாக விவசாய மக்கள் முறையிட்டு வருகின்றனர்.

எனவே, இந்த விடயங்கள் தொடர்பிலும் கௌரவ அமைச்சர் அவர்கள் தனது அவதானத்தைச் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

வவுனியா மாவட்டத்தில் கடந்த யுத்த காலத்தில் அமைக்கப்பட்ட 22 கிலோ மீற்றர் நீளமான மண் தடுப்பணை காரணமாக விவசாய மக்கள் விவசாய செய்கைகளில் ஈடுபட சிரமம் அடைகின்ற நிலை காணப்படுவதால், இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு, உடனடியாக மேற்படி மண் அணையை அகற்றுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

அதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் உட்பட்டதாக சுமார் 14 வரையிலான விவசாயக் குளங்கள் வனவளத் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. இந்த குளங்களை நம்பி சுமார் 1089 விவசாயக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

கிளிநொச்சி மாவட்டத்திலே கமநல சேவை திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட சுமார் 400 விவசாயக் குளங்கள் உள்ள நிலையில், இவற்றில் புனரமைக்கப்பட வேண்டிய குளங்கள் இனங்காணப்பட்டு, பணிகள் ஆரம்பிக்கின்ற தருவாயில் வனவளத் திணைக்களத்தினர் அதனைத் தடுத்து வருகின்ற நிலையும் காணப்படுகின்றது.

இவ்வாறான விடயங்கள் தொடர்பில் வனவளத் திணைக்களத்துடன் கலந்துரையாடி எமது மக்களுக்கு சாதகமான தீர்மானங்களை எட்டுவதற்கு விவசாய அமைச்சு முன்வரவேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும் ஏற்கனவே இந்திய அரசின் உதவியினால் வடக்கு மாகாண கமநல சேவைத் திணைக்களங்களுக்கு வழங்கப்பட்டுள்ள 500 உழவு இயந்திரங்களில் தற்போது 400 உழவு இயந்திரங்களே இருப்பதாகவும், அவற்றில்  பலவும் பழுதடைந்துள்ளதாகவும், மேலும் பல பாவனையின்றி கிடப்பதாகவும் தெரிய வருகின்றது. மேற்படி பழுதடைந்த உழவு இயந்திரங்களை திருத்துவதற்கும், கமநல சேவை திணைக்களத் தேவைகளுக்கான உழவு இயந்திரங்களைத் தவிர ஏனையவற்றை அந்தந்த மாவட்டங்களிலுள்ள விவசாய சங்கங்களுக்கு குத்தகைக்கு விடவும் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டியுள்ளது என்பதையும் இங்கு கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகின்றேன். அதேநேரம், வழங்கப்பட்ட 500 உழவு இயந்திரங்களில் 400 உழவு இயந்திரங்களே இருப்பதாகக் கூறப்படுகின்ற நிலையில், ஏனைய 100 உழவு இயந்திரங்களுக்கு என்னவாயிற்று என்பது தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

Related posts: