இந்து சிவாச்சாரியர்களுக்கு தேவையான அங்கீகாரம் வழங்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!

Saturday, December 5th, 2020

இந்து ஆலய சிவாச்சாரியார்களுக்கு தேவையான அங்கீகாரம் ஏற்படுத்திக் கொடுப்பதுடன் வாழ்வாதார அபிவிருத்தியும் ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் இன்று(05.12.2020) கடற்றொழில் அமைச்சரை சந்தித்த சர்வதேச இந்து மத பீடத்தின் செயலாளர் கலாநிதி சிலஸ்ரீ இராமநாதக்குருக்கள் மற்றும் உப தலைவர் இராமநாத திருச்செந்திநாதக் குருக்கள் ஆகியோருடனான கலந்துரையாடலின் போதே கடற்றொழில் அமைச்சரினால் குறித்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பின் போது, ஆலயப் பணிபுரிகின்ற ஆலய சிவாச்சாரியார்கள் சமூக பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய காலச் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கான அரசாங்க அங்கீகாரத்தினை வழங்கும் வகையில் சமாதான நீதவான் பதவிகளை வழங்கி கௌரவிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிவாச்சாரியார்களின் வாழ்கை தரத்தினை உயர்த்தும் வகையில் முதற்கட்டமாக சுமார் 50 வீடுகளை கொண்ட அந்தணர் குடியிருப்பு தொகுதியையும் அமைத்துக் கொடுக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் கடற்றொழில் அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: