இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு நிரந்தரத் தீர்வு – ஒலுவிலில் மீன்பிடித் துறைமுகத்தை செயற்படுத்த முஸ்தீபு – அமைச்சுசார் ஆலோசனை கூட்டத்தில் திட்டவட்டம்!

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி தொடர்பில் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் புதுடில்லியிலுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சுடன் கலந்துரையாடி விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நேற்று (25.11.2020) இடம்பெற்ற கடற்றொழில் அமைச்சுசார் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டும் என்று முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே கடற்றொழில் அமைச்சர் இதனைக் கூறினார்.
மேலும், இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி விவகாரம் தொடர்பில் தொலைபேசி ஊடாகவும், கொழும்பிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடனும் ஏற்கனவே பல தடவைகள் பேசப்பட்டுள்ளது.
அண்மையில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் ஒன்லைனில் முறையில் இடம்பெற்ற கலந்துரையாடலிலும் இதுகுறித்து கவனம் செலுத்தப்பட்டது.
இடைநிறுத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தொடரப்பட வேண்டும் என அவர்கள் இணங்கியிருந்தபோதும் நடைமுறையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விரைவில் இதற்குத் தீர்வு காணும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன், கிரிந்த மற்றும் ஹம்பாந்தோட்டை மீன்பிடித் துறைமுகங்களின் அபிவிருத்தி பணிகளை விரைவில் முன்னெடுக்குமாறு நாடாளுமன்ற உறுபபினர்களினால் வலியுறுத்தப்பட்ட நிலையில், அமைச்சு ஏற்கனவே அவை தொடர்பாக கவனம் செலுத்தியிருப்பதாகவும், ஹம்பாந்தோட்டை மீன்பிடித் துறைமுகத்தில் கட்டுமானங்களை மேற்கொள்வன் ஊடாக ஸ்திரமான தீர்வொன்றைக் காணமுடியாவிட்டால் மாற்று வழியொன்று தொடர்பில் ஆராய்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜயசேகர குறிப்பிட்டார்.
அதேபோன்று, ஒலுவில் துறைமுகம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதனை மீன்பிடித் துறைமுகமாக மாற்றுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகவும் விரைவில் இதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பிக்க எதிர்பார்த்திருப்பதாகவும் கடற்றொழில் அமைச்சரினால் தெரிவிக்கப்பட்டது.
மேலும், கடந்த அரசாங்கத்தின் காலத்தில் ஹம்பாந்தோட்டை றக்கவவ பிரதேசத்தில் ஆரம்பிக்கத் திட்மிடப்பட்டிருந் கிரப் சிட்டி எனப்படும் நண்டுகளின் நகரம் திட்டத்துக்காகப் பெறப்பட்ட இடம் தொடர்பில் சட்டச்சிக்கல் காணப்படுவதுடன், இதில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்த்து தனியார் துறையுடன் இணைந்து இத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
Related posts:
|
|