இந்திய மீனவர்களின் அத்துமீறலால் வளம் பாதிக்கப்பட்டு கடல் பாலைவனமாகின்றது – டக்ளஸ் தேவானந்தா

Friday, July 7th, 2017

எமது நாட்டில் கடற்றொழிலை இன்னும் விருத்தி செய்ய வேண்டியத் தேவையே காணப்படுகின்றது. இறக்குமதி என்பது அதிகரித்து, ஏற்றுமதித் துறையில் நாம் இன்னும் மிக அதிகமாகவே முன்னோக்கிச் செல்ல வேண்டிய சூழ்நிலையானது இன்றிமையாத ஒன்றாக மாறிவிட்டுள்ளதை நாம் அனைவரும் அவதானத்தில் கொள்ள வேண்டிய தருணத்தில் இருப்பதை மறந்துவிடக்கூடாது.

அந்த வகையில், ஐரோப்பிய ஒன்றியத்திற்கான கடலுணவு ஏற்றுமதியின் அனுமதியினை நாம் மீளப் பெற்றிருக்கின்ற நிலையில், நாம் இத்துறையில் அதீத வளர்ச்சிப் போக்கினை எட்ட வேண்டியுள்ளதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தமட்டில் கடற்றொழில் மேம்பாட்டுக்கான பிரதான தடைகளில் ஒன்றாக இருப்பது, இந்திய கடற்றொழிலாளர்களது அத்துமீறியதும், தடை செய்யப்பட்ட கடற்றொழில் உபகரணங்களைக் கொண்டதுமான தொழில் முறைமையாகும்.

இதனைத் தடுக்கும் வகையில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் கௌரவ மகிந்த அமரவீர அவர்கள் துணிச்சலான பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது. எனினும், இத்தகைய நடவடிக்கைகளையும் மீறி, மேற்படி இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி வடக்கு கடற் பரப்பிற்குள் நுழைந்து, எமது மக்களது வாழ்வாதாரங்களை அபகரிப்பது மட்டுமன்றி கடல் வளங்களையும் சுரண்டி வருவதுடன் எமது கடற்றொழிலாளர்களின் தொழில் உபகரணங்களையும் சேதமாக்கியும், அழித்தும் வரும் செயற்பாடுகள் தொடரவே செய்கின்றன.

தமிழக கடற்றொழிலாளர்கள் பாக்கு நீரினைப் பகுதியில் கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு வருடத்தில் 61 நாட்கள் தடை விதிக்கப்படுகின்றது. இந்த வருடத்தில் இத்தடையானது கடந்த மாதம் 14 ஆம் திகதியுடன் முடிவடைந்து ஒரு வார காலத்திற்குள் 48 கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிய வருகின்றது. கைதில் இருந்து தப்பியோர் இன்னும் இருக்கலாம்.

இது, 61 நாட்களாக கடல்வாழ் உயிரினப் பெருக்கத்திற்கு வழி  விடுவதும், 61 நாட்கள் முடிந்தவுடனேயே பல பாரிய படகுகளில் எமது கடற் பரப்பினை ஆக்கிரமித்து அனைத்தையும் சுரண்டிக் கொண்டு செல்வதுமாகவே தொடர்கின்றது.

இந்த விடயம் தொடர்பாக அண்மையில் இராமேஸ்வரத்தில் வைத்து, கருத்து தெரிவித்திருந்த இந்தியாவின் ஆளுங்கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் அவர்கள், ‘தொப்புள் கொடி உறவு எனக் கூறிக் கொள்ளும் தமிழக கடற்றொழிலாளர்களே தமது வாழ்வாதாரத்தை அழிக்கின்றமை கவலைக்குரியது என இலங்கை வடபகுதி கடற்றொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அத்துடன், தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கைக்கு போதைப் பொருள் கடத்துவதாகவும் அண்மைக்காலமாக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன’ எனத் தெரிவித்திருந்ததை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அந்த வகையில், மேற்படி எல்லை தாண்டிய கடற்றொழில் தொடர்பில் நாம் ஒரு முடிவுக்கு வர வேண்டியுள்ளதை நாம் அனைவரும் அவதானத்தில் கொண்டு செயற்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

Related posts:


நடமாடும் சேவையின்போது பணம் செலுத்தாது தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித மக்களுக்கு அதை இலவசமாக வழங்...
வடக்கில் சட்டவிரோத மணல் அகழ்வு உடனடியாக தடுக்கப்பட வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம்...
மயிலிட்டி மீன்பிடித் துறைமுக காவல் பணியாளர்கள் இருவர் நியமனம் – கடிதங்களை வழங்கிவைத்தார் கடற்றொழில் ...