இந்திய அரசின் உதவியானது தேசிய நல்லிணக்கத்திற்கு மேலும் வலுசேர்க்கும் – டக்ளஸ் தேவானந்தா!
Tuesday, February 28th, 2017இலங்கையில் மீள் எழுச்சி, இனங்களுக்கிடையிலான ஐக்கியம் என்பவற்றை மேலும் உருவாக்கி, தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு சிறந்ததொரு உந்து சக்தியாக அமையக்கூடிய வகையிலான பல்லின மும்மொழி இடர் நிலைக் கல்விப் பாடசாலையொன்றை அமைப்பதற்கு இந்திய அரசு முன்வந்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், பொலனறுவை மாவட்டத்தை மையமாகக் கொண்டு புதிய பல்லின மும்மொழி இடர் நிலைக் கல்விப் பாடசாலையொன்றை அமைப்பதற்கு இந்திய அரசு முன்வந்துள்ளது. அந்த வகையில், பாடசாலை வகுப்பறைகள், ஆய்வுகூடங்கள், நூலகங்கள் மற்றும் அவற்றுக்கான தளபாட மற்றும் உபகரணங்கள் போன்ற அனைத்து வசதிகளையும் மேற்கொள்வதற்கென இந்திய அரசு 300 மில்லியன் ரூபாவினை ஒதுக்கியுள்ளதாகத் தெரிய வருகிறது.
மேற்படி பாடசாலையானது, பல்லின மற்றும் பல்கலாசார சூழலில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் கல்வி பயிலக்கூடிய சூழலை உருவாக்கவுள்ளதாகவும் தெரிய வருகிறது. இது வரவேற்கத்த முயற்சியாகும். இதன் ஊடாக எமது மாணாக்கருக்கிடையே இன ரீதியிலான நல்லிணக்கச் சிந்தனைகளை கட்டியெழுப்புவதன் ஊடாக, தேசிய நல்லிணக்கம் தொடர்பிலான முயற்சிகளுக்கு பாரிய பங்களிப்பினைப் பெற்றுக் கொள்ள முடியும்.
தற்போது எமது பல்கலைக்கழகங்களில் மூவின மாணாக்கரும் கல்வி கற்கின்ற நிலையில், பல்லின மற்றும் பல் கலாசார சூழல் என்பது மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது. எனவே, இதற்கான சூழலை பல்கலைக்கழக மட்டங்களில் ஏற்படுத்த வேண்டும் என நான் உயர் கல்வி அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளேன்.
இந்த நிலையில், இந்திய அரசு இவ்வாறானதொரு முயற்சியை முன்னெடுத்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கது எனத் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இதற்கென எமது மக்கள் சார்பான நன்றியை இந்திய அரசுக்குத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|