இந்தியாவுக்கு கொள்கை உண்டு : கூட்டமைப்புக்கு கொள்கை இல்லை – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Friday, July 26th, 2019

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் இலங்கை வந்தபோது, இதே தரப்பினர் ஓடிப் போனார்கள். அவர் தனது அலுவல்களை இலங்கையில் முடித்துக் கொண்டு போகும்போது, இந்தியாவுக்கு வரும்படி கூறிவிட்டுப் போனார்.அங்கு போனால் அங்குபோய் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டும் என்றா கேட்டிருப்பார்கள்? என்றா நினைக்கிறீர்கள். இருக்காது, தங்களுக்கு அங்கே என்னென்ன சுயதேவைகள் உண்டோ, சொத்துக்களுக்கான பாதுகாப்புத் தேவையோ அவை பற்றிக் கதைத்திருப்பார்கள்.

இந்தியாவில் போய் அரசியல் தீர்வு பற்றிப் பேசினால், என்ன நடக்கும் என்பது இவர்களுக்குத் தெரியும். ஆகவே, வெறுமனே பத்திரிகையில் மட்டும் அறிக்கை விடுவார்கள் – இந்தியா எமது அரசியல் தீர்வுக்கு உதவ வேண்டும் என்று அவ்வளவுதான்.

இந்தியா ஏற்கனவே இலங்கை அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் ஒன்று உயிரோடு இருக்கின்றபோது, அதைவிட வேறொரு தீர்வைக் கொண்டு வருவதற்கு இந்தியா ஒன்றும் இந்தத் தமிழ்த் தரப்பினரைப் போன்று கொள்கை இல்லாத நாடல்ல என்பதை இவர்கள் மறந்தவிடக் கூடாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் மறுசீரமைப்பு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தையே இந்தியா இன்னமும் வலியுறுத்தி வருகின்றது. இந்தியாவில் காங்கிரஸ் கட்சியாக இருக்கட்டும், இப்போது ஆட்சி செய்கின்ற பாரதீய ஜனதா கட்சியாக இருக்கட்டும் அல்லது நாளடைவில் இன்னுமொரு மூன்றாவது அணி ஆட்சிக்கு வந்தாலும், இந்தியாவின் நிலைப்பாடு அதுதான். அதில் ஒன்றும் மாற்றத்திற்கு இடமில்லை.

எனவே, இனிமேலும் இத்தகைய வாத விவாதங்களைக் கொண்டு வந்தும், ஊடக அறிக்கைகளை விட்டுக் கொண்டும் எமது மக்களை ஏமாற்றியது போதும்.

அதிலும், ஒருவர் அடுத்த தீபாவளிக்கு அரசியல் தீர்வு வரும் என்கின்றபோது, இன்னுமொருவர் அதோ, இதோ வெளிவந்துவிட்டது என்று கூறிக் கொண்டிருந்தார். இப்போது அவரும் இதைப் பற்றி கொஞ்சக் காலமாக மூச்சு விடக் காணோம்.

ஆக, பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்து இப்படியே பொய்யிலேயே அரசியல் செய்து கொண்டு, அனைத்துத் துறைகள் சார்ந்தும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களை மீண்டும், மீண்டும் பாதித்துக் கொண்டிருக்காதீர்கள் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

Related posts:

துறைமுகம் அமைக்கப்பட்டால் மக்களின் வாழ்வியல் பறிபோகும் - டக்ளஸ் தேவானந்தாவிடம் கடற்றொழிலாளர்கள் சுட்...
சமூகத்தின் நற் பிரையைகளை வளர்க்கும் களமாக விழங்குவது சனசமூக நிலையங்கள்  – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவ...
வவுனியா விஞ்ஞானன் குளம் மக்களது அடிப்படை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு பெற்றுத்தரப்படும் – டக்ளஸ்...