இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு ஈ. பி. டி. பி. யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

Saturday, May 25th, 2019

இந்திய பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு இலங்கைத்தமிழ் மக்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அன்மையில் நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் உங்களை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி போட்டியிட்ட பாரதிய ஜனதாக் கட்சி அறுதிப்பெரும்பான்மையாக வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும் பெருமைக்குரிய மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கின்றீர்கள். அந்த மகிழ்ச்சியில் எங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். என்று நாடாளுமன்ற உறுப்பினரும் , ஈ. பி. டி. பி. யின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இன்று (24.05.2019) விடுத்துள்ள அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது, பாரத தேசத்தின் பிரதமராக நீங்கள் இருந்தபோது கடந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் இந்தியப் பிரதிநிதியால் இலங்கை மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சனைக்கு 1987ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட இலங்கை, இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும் என்று உரையாற்றியிருந்தார்.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு நடைமுறைச் சாத்தியமான அரசியல் தீர்வுக்கான ஆரம்பமாக 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதிலிருந்து ஆரம்பிப்பதே சரியான வழிமுறையாகும் என்பதையே ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியாகிய நாம் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக வலியுறுத்தி வருகின்றோம்.

இந்த நிலையில் இலங்கைத்தமிழ் மக்களுக்கு பல வழிகளிலும் ஆதரவாக இருக்கும் இந்திய தேசத்தின் பிரதமராக மீண்டும் நீங்கள் வெற்றி பெற்றிருப்பது எமக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் தருகின்றது.

இலங்கையில் தமிழ் மக்கள் அரசியல் உரிமைகள் பெற்று சமத்துவமாக வாழ்வதற்கு 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்ற எமது கோரிக்கையை நிறைவேற்றித் தருவதற்கு நீங்கள் பங்களிப்புச் செய்வீர்கள் என்றும் நம்புகிறேன் என்றும் அந்த வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Related posts: