உரிய அதிகாரங்கள் பகிரப்படும் போதுதான் தேசியப் பிரச்சி னைக்கு தீர்வு காணமுடியும் –  வவுனியாவில் செயலாளர் நாயகம்!

Saturday, September 23rd, 2017

இணைந்த வடக்கு கிழக்கு, அதற்க உரிய அதிகாரங்கள் பகிரப்படும் போதுதான் தேசியப் பிரச்சினைக்கான தீர்வுக்கு முடிவுகட்டமுடியும் என்ற எமது நிலைப்பாட்டில் ஒருபோதும் மாற்றம் ஏற்படப்போவதில்லை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வவுனியா தேக்கவத்தையில் கட்சியின் மாவட்ட அலுவலகத்தை திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் – எமது கட்சியின் கொள்கை நிலைப்பாடான மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற நிலைப்பாட்டிற்கமையவே நாம் செயற்றிட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம். அதனூடாக மக்கள் நலன்சார்ந்த பல்வேறுபட்ட பணிகளையும் அபிவிருத்திகளையும் முன்னெடுத்து யுத்தத்தால் அழிவடைந்த சிதைவடைந்த எமது பகுதிகளையும் தூக்கி நிறுத்திவருகின்றோம்.

இருந்தபோதிலும் எமக்குக் கிடைக்கப்பெற்ற மிகக்குறைந்தளவிலான அரசியல் பலத்தினைக்கொண்டு முடியுமான வகையில் பல செயற்றிட்டங்களை முன்னெடுத்து சாதித்தும் காட்டியுள்ளோம்.

அத்துடன் எதிர்வரும் காலங்களில் எமது கட்சியின் ஊடாகவும் எமது கொள்கையின் நிலைப்பாட்டுக்கு அமைவாகவும் அப்பேற்பட்ட மக்கள் நலன்சார்ந்த பணிகளை முன்னெடுக்கவும் அர்ப்பணிப்புடன் உழைக்கவும் தயாராக இருக்கின்றோம்.

அதனடிப்படையில் வவுனியா மாவட்டத்திலும் எமது கட்சியினூடான மக்கள் பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கும் நோக்குடனேயே இவ் மாவட்ட அலுவலகத்தையும் இன்றையதினம் திறந்துவைத்துள்ளோம்.

குறிப்பாக எமது மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுவரும் இனப்பிரச்சினைத்தீர்வுக்கு இணைந்த வடக்கு கிழக்கு தமிழர் தாயகமாக இருப்பதே பொருத்தமாக அமையும். அத்துடன் மக்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் ஏனைய தேவைப்பாடுகளுக்கும் உரியவகையில் தீர்வுகள் காணப்படவேண்டும் என்பதுடன் அதனோடிணைந்த மக்கள் பலம் எமக்கு இன்றியமையாததாக உள்ளது என்றும் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினர்.

இந்நிலையில் எதிர்காலங்களில் மக்கள் உணர்ச்சிப் பேச்சுக்களுக்கும் உசுப்பேற்றல்களுக்கும் இடங்கொடுக்காது ஜதார்த்த தேவைகளை இனங்கண்டு மக்களுக்கு பணிசெய்யும் எமக்கு ஆதரவுப்பலம் தருவார்களேயானால் அவர்களது வாழ்வில் மாற்றத்தையும் ஏற்றத்தையும் எம்மால் உருவாக்க முடியும் என்பதை ஆணித்தனமாக கூறிவைக்க விரும்புகிறேன் என்றும் தெரிவித்தார்

இதன்போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக செயலாளர் திலீபன், கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related posts:

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் - கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு- பல்வேறு விடயங்கள்...
குற்ற செயல்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் முக்கிய க...
பாசையூர் புனித அந்தோனியர் கடற்றொழிலாளர்களது பிரச்சினைகளுக்கு தீர்வுவழங்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!