இடமாற்றங்கள் தண்டனையாக அமையாது – நாடாளுமன்றில்  டக்ளஸ் எம்பி தெரிவிப்பு!

Friday, July 20th, 2018

கடமைகளின்போது குற்றங்களைப் புரிகின்ற அரச அதிகாரிகளுக்கு, அலுவலர்களுக்கு தண்டனை என்ற வகையில் தூர – அல்லது வேறு இடங்களுக்கு இடமாற்றங்கள் வழங்கப்படுகின்றமை ஒரு தவறான செயற்பாடாகும் என்றே கருதுகின்றேன.; இவர்களை இவ்வாறு இடமாற்றங்கள் செய்வதானது நடைமுறையில் ஏற்றுக் கொள்ள இயலாத ஒரு விடயமாகவே இருக்கின்றது – என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றையதினம் நாடாளுமன்றில் நடைபெற்ற இலஞ்சம ஊழல் திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார்.

மேலம் அவர் தெரிவிக்கையில் –

‘ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கு சிறந்த வழி எதுவெனில், அத்தகைய பணிக்காக அர்ப்பணிப்புடன்கூடிய சுயாதீனமான அமைப்புகளை உருவாக்குவதற்கான சட்டத்தை இயற்றுவதாகும்’ என்றும், ஊழல் எதிர்ப்புக் கொள்கைகள் மற்றும் கொள்கைகளை அமுல்படுத்தலின் மூலமாக இத்தகைய அமைப்புகள் செயற்பட முடியும் என்றும், எந்தவொரு நாட்டினதும் சூழலுக்கு அமைவான நல்லாட்சிக்கு ஊழல் தொடர்பில் அவதானங்களைச் செலுத்துவதற்கு ஒரு நல்ல செயற்பாட்டு மேற்பார்வை அமைப்பு அவசியமாகும்’ என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஊழலுக்கு எதிரான சம்மேளனம் தெரிவித்திருப்பதை இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

எந்தவொரு அரச அதிகாரியையும், அவர்கள் கடமையின் போதே குற்றங்கள் புரிகின்ற நிலையில், அவர்களை இடமாற்றங்கள் செய்கின்றபோது, இந்த அதிகாரிகள் இடமாற்றம் பெற்று செல்கின்ற இடங்களில் இதே குற்றங்களை அல்லது இதைவிட அதிகமான குற்றங்களை செய்யமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கின்றது? எனக் கேட்க விரும்புகின்றேன்.

மறு பக்கமாக, இவ்வாறு தண்டனை பெற்று செல்கின்ற அதிகாரிகள் இடமாற்றம் பெற்று செல்கின்ற இடங்களில் வேண்டா விருப்புகளுடனேயே கடமைகளில் ஈடுபடக்கூடிய மன நிலைமைகளே அதிகமாகும். இந்த நிலையில் மக்களுக்கான பணிகளை இவர்களால் ஒழுங்குற நிறைவேற்றக்கூடியதாக இருக்கப் போவதில்லை.

எனவே, அரச சேவைகளின்போது, குற்றம் புரிகின்றவர்களுக்கு தண்டனை இடமாற்றங்கள் வழங்குவது என்பதை மாற்றி, வேறு தண்டனைகளை – சேவைக் காலக்குறைப்பு – அல்லது சேவை தொடர்பில் புள்ளிகள் இடல் திட்டம் – ஓய்வூதியத்தில் தொகை குறைப்பு – போன்ற ஏதாவதொரு திட்டத்தினைக் கொண்டு வரலாம் என்பது எனது எண்ணமாகும்.

எனவே, இந்த நாட்டில் இலஞ்சம், ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்கு இத்தகைய ஏற்பாடுகள் தொடர்பில் அவதானங்களைச் செலுத்துமாறு கோரிக்கை விடுகின்றேன்.

Related posts:


உருத்திராட்ச மாலை அணிந்த பூனைககள் மக்களை தவறாக வழிநடத்த முற்படுகின்றன - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி....
வரி அறவீடுகள் என்பது நாட்டின் நடைமுறைக்கு சாத்தியமானதாக இருக்க வேண்டும் - டக்ளஸ் எம்பி வலியுறுத்து...
மன்னார் கடற்தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் விஷேட சந்திப்பு!