ஆனையிறவில் உப்பளப் பட்டினத்தை உருவாக்குவதே எனது நோக்கம் – டக்ளஸ் தேவானந்தா

ஆனையிறவில் உப்பளப் பட்டினத்தை உருவாக்குவதே தனது நோக்காக இருந்ததென்றும் அது நிறைவேறாமல் போனது துரதிஷ்டவசமானது என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
பளை மாசார் பகுதியில் மக்களுடன் நேற்றையதினம் (05) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
நாட்டில் நிலவிய யுத்தத்தால் மக்களாகிய நீங்கள் எதிர்கொண்ட அவலங்களையும் துன்ப துயரங்களையும் நான் நன்கறிவேன். அந்த வகையில்தான் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அபிவிருத்தி செய்யும் அதேவேளை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் கடந்த காலங்களில் நாம் அரசுடன் இணைந்து பல்வேறுபட்ட செயற்றிட்டங்களை முன்னெடுத்திருந்தோம்.
அதில் ஒன்றாகத்தான் ஆனையிறவு உப்பளத்தை மீண்டும் புதுப்பொலிவுடன் நிர்மாணிப்பதற்காக முன்னைய அரசில் அமைச்சராக இருந்த வேளையில் அதற்கான செயற்றிட்டங்களை முழு மூச்சுடன் முன்னெடுத்திருந்தோம். அதனடிப்படையில் இவ்வாறான செயற்றிட்டங்களுக்கு ஊடாக இந்தப் பகுதி மக்களது வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் ஆனையிறவு உப்பளத்தை சாதகமான சூழலாகப் பயன்படுத்த முடியுமென நாம் நம்பியிருந்தோம்.
உப்பளத்திற்கு ஊடாகக் கிடைக்கப்பெறும் பொருளாதாரத்தை எமது மக்களுக்கு உரிய முறையில் பயன்பட வேண்டும் என்பதுடன் ஆனையிறவில் உப்பளப் பட்டினத்தை உருவாக்கி அதனூடாக இப்பகுதியில் பெரும்பாலானோருக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக இருந்தது. ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின்னரான இக்காலகட்டத்தில் எமது எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போயுள்ளமை துரதிஷ்டவசமானதாகும்.
மக்கள் சரியானவர்களைத் தமது பிரதிநிதிகளாக தெரிவு செய்யாத பட்சத்திலேயே குறித்த வேலைத்திட்டங்கள் யாவும் தற்போது மந்தகதியில் நடைபெற்று வருவதாக நீங்கள் சுட்டிக்காட்டியுள்ளீர்கள். எனவே எதிர்காலங்களிலும் மக்களுடன் நின்று மக்களுக்குச் சேவை புரிபவர்களை தமது பிரதிநிதிகளாக மக்கள் தெரிவு செய்யும் பட்சத்திலேயே அவர்களது பகுதிகள் மட்டுமல்லாது அவர்களது வாழ்வாதாரமும் பொருளாதாரமும் மேம்பாடடைய முடியும்.
இதனிடையே கடந்த காலங்களில் நாம் எடுத்துக் கொண்ட அரசியல் நிலைப்பாட்டை இன்றைய தமிழ் அரசியல்வாதிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இன்றுள்ள அமைதிச் சூழலுக்காக எமது மக்கள் அளவிட முடியாத தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் செய்துள்ளார்கள். இவ்வாறான தியாகம் அர்ப்பணங்கள் ஊடாக கிடைக்கப்பெற்ற அமைதிச் சூழலை ஒவ்வொருவரும் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியமானதாகும் என்றும் தெரிவித்தார்.
அத்துடன் மக்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் ஏககாலத்தில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.
Related posts:
|
|