ஆட்சி அதிகாரம் எமது கரங்க ளுக்குக் கிடைக்கப்பெற்றால் பாகுபாடுகளுக்கு இடமளிக்கப்போவதில்லை – மட்டு மாநகரில் டக்ளஸ் தேவானந்தா!

எமது கைகளுக்கு மட்டக்களப்பு மாநகர சபையின் ஆட்சி அதிகாரங்கள் கிடைக்கப்பெற்றால் பாகுபாடான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட டக்ளஸ் தேவானந்தா குறித்த பகுதி பலநோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
கடந்தகாலங்களில் உள்ளூராட்சி மன்றங்களூடாக மக்களுக்கு சேவை செய்வதற்கான முழுமையான சந்தர்ப்பங்கள் எமக்குக் கிடைத்திருக்கவில்லை. இதனால் இங்கு வாழும் மக்களுக்கு எமது கட்சியினூடாகச் சேவைகளைச் செய்ய முடியாது போனது.
இந்த நிலையில்தான் நாம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வடக்கு மாகாணம் மட்டுமல்லாது கிழக்கு மாகாணத்திலும் போட்டியிடத் தீர்மானித்துள்ளோம்.
இங்கு மக்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள் இலகுவாக தீர்வுகாணப்படக்கூடிய சூழ்நிலை காணப்பட்டாலும் அவற்றுக்கு சரியான முறையில் தீர்வுகள் காணப்படாதுள்ள நிலைமையே காணப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்ட மக்களின் முழுமையான அதரவுப்பலத்துடன் இம்மாவட்டத்திலுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களினதும் ஆட்சி அதிகாரங்களை நாம் கைப்பற்றுவோமானால் இங்குவாழும் மக்களது அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிச்சயம் பாகுபாடுகள் அற்றவகையில் தீர்வுகள் கண்டுதருவோம்.
இதுவிடயத்தில் அச்சப்படத்தேவையில்லை என்றும் தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா வீணைச்சின்னத்தைக் கொண்டதான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வெற்றியை உறுதி செய்து உங்களதும் உங்கள் பகுதிகளினதும் அபிவிருத்தியையும் தேவைப்பாடுகளையும் பெற்றுக்கொள்ளுங்கள் என்றார்.
Related posts:
|
|