ஆட்சியில் பங்கெடுத்துள்ள கூட்டமைப்பு அதிகாரத் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகின்றது – ஈ.பி.டி.பி தெரிவிப்பு!

Saturday, February 2nd, 2019

வடக்கு கிழக்கில் சரியான அரசியல் தலைமைத்துவம் இல்லாத நிலையில் எமது தமிழ் மக்களின் அனைத்து விடயங்களிலும் அநாவசியமான இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாகவும், கோரிக்கைகள் மற்றும் தேவைகளுடன் இருக்கும் மக்கள் குறிப்பாக கைம்பெண்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதாக அறியமுடிகின்றது. அவ்வாறான செயற்பாடுகளை கண்டிப்பதுடன் அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று ஈ.பி.டி.பி விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது –

பொய்யான வாக்குறுதிகளை வழங்கி தமிழ் மக்களின் வாக்குகளை அபகரித்தார்கள் தற்போது மத்திய ஆட்சியாளர்களுக்கு கட்டளையிட்டு வடக்கு கிழக்கில் அபிவிருத்தியை செய்யப்போவதாகவும், வேலை வாய்ப்புகளை வழங்கப்போவதாகவும் தெரிவித்துவரும் இவர்கள் அரச அதிகாரிகளுக்கு இடையூறாக செயற்படுவதுடன், மக்களை மிரட்டுகின்ற விதமாகவும் செயற்படுவதுடன், தமது தலைமைகளை பயன்படுத்தி மக்களுக்கு கிடைக்கப்பெறும் வேலை வாய்ப்புகளைத் தடுக்கவும், அபிவிருத்திப் பணிகளை நிராகரிக்கவும் முடியும் என்றும் கூறிவருதாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் எமது கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

பிரதமரின் விஷேட திட்டமான ‘கிராம எழுச்சி” (கம்பெரலிய) என்ற திட்டத்தை அமுல்படுத்துவதிலும், பயனாளிகளின் தெரிவிலும் பாரபட்சங்களும், புறக்கணிப்புகளும் இடம்பெறுவதாகத் தெரியவருகின்றது.

அரசோடு இணைந்து செயற்படுவதானது, தேவையுள்ள மக்களின் கோரிக்கைகளை நிராகரிப்பதற்கோ, கோரிக்கைகளை புறக்கணிப்பதற்கோ, அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதற்கோ அல்ல என்பதை தற்போது அரசுடன் இணைந்து இணக்க அரசியல் நடத்தும் தமிழரசுக் கட்சியினரும், அவர்களோடு இணைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் புரிந்து கொள்ளவேண்டும்.

நாம் ஒருபோதும் ஆட்சியாளர்களை ஏவிவிட்டு அதிகாரத் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதில்லை. நாம் இணக்க அரசியல் வழிமுறை ஊடாக நேரடியாகவே ஆட்சியில் பங்கெடுத்ததுடன், அபிவிருத்தி மற்றும் வேலை வாய்ப்பு விடயங்களை நாமே கையாண்டோம். குறிப்பாக வேலைவாய்ப்பு வெற்றிடங்களை அந்தந்த மாவட்டங்களில் வாழ்கின்ற மக்களுக்கே பகிர்ந்தளித்தோம். எம்மிடம் முன்வைக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளுக்கு முடியுமான விரைவில் உரிய தீர்வுகளையும் பெற்றுக்கொடுத்தோம்.

நாம் அரசியல் பேதங்களை பாராட்டியதில்லை. எல்லோரையும் எமது மக்களாகவே கருதிச் செயலாற்றியிருக்கின்றோம். பெண்களைத் தலைமையாகக் கொண்டுள்ள குடும்பங்கள் எதிர்கொண்ட பல பிரச்சனைகளுக்கு அவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தாத வகையில் தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்துள்ளோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆட்சியில் நேரடியாக பங்கெடுத்து, எமது மக்களுக்கும், அவர்களின் வாழ்வியலுக்கும் பொறுத்தமான வகையில் சேவைகளை முன்னெடுக்காமல், ஆட்சியாளர்களுக்கு உத்தரவிட்டு எமது மக்களின் தேவைகளை தீர்க்கப்போவதாக கதை கூறுகின்றார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்டளைகளை ஏற்று மத்திய அரசு செயலாற்றுவது உண்மையானால் இவர்களால் தமிழ் மக்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஏன் தீர்வைக் காணமுடியாது.
தேர்தல்கள் நெருங்கும்போது அரசுக்கு எதிராக முணு முணுக்கத் தொடங்குவார்கள். எமது மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்காமல், அரசை நம்பினோம், அரசு எம்மை ஏமாற்றிவிட்டது என்று சாக்குபோக்குகளைக் கூறி தப்பித்துக்கொள்வதற்கே முயற்சிப்பார்கள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:


பதவிச் சுகபோகத்துக்காகவே வடக்கு முதலமைச்சர் பதவி நீடிப்புக் கோருகின்றார் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்....
எமக்கான புதிய முகவரிகள் உருவாகின்றன. - தங்கம் வென்ற வீராங்கனைக்கான வாழ்த்து செய்தியில் அமைச்சர் டக்ள...
வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை முன்னேற்றுதல் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் அவதானம் – துறைசார் அதிகாரிக...