அவலத்தில் வாழும் மக்களின் துயரம் துடைக்கும் ஆண்டாக புதுவருடம் பிறக்கட்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் வாழ்த்துச் செய்தி!

Tuesday, January 1st, 2019

இழப்புக்களிலிருந்து எழுவதற்கும், துயரங்களிலிருந்து மீள்வதற்கும் ஒவ்வொரு வருடமும் பிறக்கும் புத்தாண்டிலாவது புது வழிவகை பிறக்கும் என்றுதான் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி அவர்களை எதிர்காலம் மீதான நம்பிக்கையுடன் வாழவைக்கவேண்டும் என்றுதான் நாமும் ஓய்வின்றி உழைக்கின்றோம் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விடுத்துள்ள புதுவருட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, அரசியல் சதிகாரர்களின் சதியினாலும், எமது பயணத்திற்கு முட்டுக்கட்டைபோடும் மக்கள் விரோதிகளாலும் தமிழ் மக்களின் நம்பிக்கைகள் தொடர்ந்து சிதறடிக்கப்பட்டு வருகின்றது.

பொங்கலுக்குத் தீர்வு, தீபாவளிக்குத் தீர்வு என்று கூறிக்கொண்டே தமிழ் மக்களை வீதிகளில் நிறுத்தியவர்களாலேயே, தமிழ் மக்களின் இழப்புக்களும், துயரங்களும் தீர்க்கப்படாத தொடர்கதையாகத் தொடர்கின்றது.

தமது சுயலாபங்களுக்காக தமிழ் மக்களின் உரிமைகளையும், உரித்தான நலன்களையும் பகடைக்காயாக பயன்படுத்தி தரகு அரசியல் செய்துவருவோரை நிராகரித்து, ஒரு விநாடி கிடைத்தாலும் அதை தமிழ் மக்களின் நலனுக்காகவும், தமிழர் நிலத்தின் மீள் எழுச்சிக்காகவும் பயன்படுத்துவோம் என்று மக்கள் சேவை செய்துவரும் எமது கரங்களை பலப்படுத்தி எதிர்காலச் சவால்களை வெற்றி கொள்வோம் என்பதே புதுவருடத்தில் எமது மக்களின் குறிக்கோளாக இருக்கவேண்டும்.

ஒவ்வொரு வருடத்திலும் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் மட்டும் சுமந்திருந்தால் போதாது, அதை வெற்றிகொள்ளும் புதியபாதையும் அவசியமாகும்.

போலியாக தமிழ்த் தேசியம் பேசுவோரை நிராகரித்து, நடைமுறைச்சாத்தியமானதென நாம் காட்டும் புதியபாதையில் தமிழ் மக்கள் மேலும் அணிதிரண்டு எமது கரங்களைப் பலப்படுத்தினால், மலரும் புத்தாண்டானது, எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் ஆண்டாகவும், துயரங்களை துடைத்தெறிகின்ற ஆண்டாகவும், தீர்வில்லாமல் தொடரும் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வுகளை பெற்றுக்கொள்கின்ற ஆண்டாக அமையும் என்று நம்புகின்றேன் என்றும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது புதுவருட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

12 copy

Related posts:

வடக்கு - கிழக்கில் போதுமான தாதியர்கள் நியமிக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கோரிக்கை!
விழித்துக் கொண்டதால் நான் பிழைத்துக் கொண்டேன்: கட்சி உறுப்பினர்கள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ்!
கோணாவில் மாற்றுத் திறனாளிகள் காப்பகத்தின் தேவைப்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

கல்வித் துறை தனியார் மயப்படுத்தலை நோக்கி நகர்கின்றதா - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!
மலையக மக்களின் உரிமைப் போராட்டம் முடிவற்றுத் தொடர்கின்றது - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட...
அந்நியச் செலாவணி ஈட்டலுக்கான வழிவகைகள் இறுக மூடப்பட்டு கிடக்கின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. ச...