அர்ப்பணிப்போடும் உழைக்கும் அரசியல் தலைமைகளை தெரிவுசெய்யவதனூடாகவே  மக்கள்  மேம்பாட்டை காணமுடியும் – டக்ளஸ் தேவானந்தா

Wednesday, June 15th, 2016

எதிர்காலங்களில் மக்கள் பொய்யான வாக்குறுதிகளுக்கும் உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கும் இடங்கொடுக்காது தமது வாழ்வாதாரத்தை முன்னெடுக்கும் பொருட்டு உண்மையோடும் நேர்மையோடும் அர்ப்பணிப்போடும் உழைக்கும் அரசியல் தலைமைகளை தெரிவுசெய்ய வேண்டும் என்பதுடன் அதனூடாகவே மேம்பாட்டை காணமுடியும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமைச் செயலகத்தில் கிளிநொச்சி – பூநகரி மக்கள் பிரதிநிதிகளுடன் இன்றையதினம் (15) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

மக்களுக்கு சரியான வழியைக்காட்டி அதனூடாக எதிர்காலத்தை வளமானதாக்கிக்கொள்ளும் பொருட்டு அர்ப்பணிப்புடன் சேவை செய்பவர்களே சிறந்த மக்கள் சேவகனாக இருக்க முடியும். அந்தவகையில் நாம் எமது மக்களுக்கு சரியான வழியைக்காட்டி அவர்களது எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் நடைமுறை யதார்த்த வழிமுறையிலான பாதையினூடாக மக்களை வழிநடத்துகின்றோம்.

அந்தவகையில் மக்கள் சரியான அரசியல் தலைமைகளை தெரிவு செய்வதனூடாகவே தமது பகுதிகளின் அபிவிருத்திகளை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும்.

கடந்தகாலங்களில் நாம் இணக்க அரசியலினூடாகவும் அரசுடனான நல்லுறவினூடாகவும்  முடியுமானவரையில் அபிவிருத்திகளை முன்னெடுத்துள்ளோம். இவற்றை பொறுக்கமுடியாத தமிழ் அரசியல் தலைமைகள் நாம் அரசுடன் இணைந்து இணக்க அரசியலை முன்னெடுத்ததை துரோகத்தனமானதெனக் கூறி எமக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு பிரசாரங்களை முன்னெடுத்திருந்தனர்.

இதன் காரணமாக அவர்கள் தேர்தல்களில் வெற்றிபெற்றிருந்தபோதிலும் இன்று எதையும் செய்துமுடிக்கத்தக்க வல்லமையோ ஆற்றலோ இல்லாதவர்களாகவே காணப்படுகின்றனர்.

குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்படக்கூடியதான பல்வெறு அபிவிருத்தி சார்ந்த செயற்றிட்டங்களை முன்னெடுக்கமுடியாதவர்களாக இருக்கின்றனர்.

அதனடிப்படையிலேயே பூநகரி பகுதியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளாகிய நீங்கள் என்னிடம் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு இலகுவான தீர்வை பெற்றுத்தரக்கூடிய நிலைமை அவர்களுக்கு இருக்கின்ற போதிலும் அவர்கள் எதையும் செய்யாதிருப்பதானது மக்கள் மீதான  அவர்களது அக்கறையற்ற தன்மையையே எடுத்துக்காட்டகின்றதென டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார்.

இச்சந்திப்பில் பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மக்கள் தமது பகுதிகளின் தேவைப்பாடுகள் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் எடுத்து விளக்கினர்.

இதில் நீண்டகாலமாக புனரமைக்கப்படாத நிலையிலுள்ள குளங்களின் புனரமைப்பு பணிகளின் அவசியம், வீட்டுத்திட்டம், குடிநீர் வசதி, மின்சாரம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பூர்த்திசெய்வது தொடர்பில் தாம் எதிர்நோக்கம் இடர்பாடுகளை இதன்போது தெளிவுபடுத்தினர்.

முக்கியமாக அங்குள்ள கிணறுகளில் பெறப்படும் நீர் உவர் நீராக உள்ளதனால் அதனை மக்கள் குடிப்பதற்கு பாவிக்கமுடியாத நிலையில் அங்குள்ள குளங்களை புனரமைபு செய்வதனூடாக தாம் குடிநீரை இலகுவாக பெற்றுக்கொள்ளமுடியும் என்றும் அதற்கேற்றவகையில் குளங்களின் புனரமைப்பு பணிகளின் அவசியம் குறித்து  இங்கு வலியுறுத்தினர்.

இதேபோன்று   குறித்த பிரதேச செயலர் பிரிவில் முன்னெடுக்கப்பட வேண்டிய முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் விசேட கவனம் செலுத்தப்பட்டு ஆராயப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது வடக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் கிளிநொச்சி மாவட்ட செயலாளருமான தவநாதன், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்ட  செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) மற்றும் கட்சியின் பூநகரி பிரதேச நிர்வாக செயலாளர் அமீன் ஆகியோர் உடனிருந்தனர்.

 2

 

Related posts:


இரணைதீவில், மீன்பிடிக்கவும், பண்ணைகளை அமைக்கவும் விதிக்கப்பட்ள்ள தடை நீக்கப்பட வேண்டும் - டக்ளஸ் தேவ...
நீருக்கான தட்டுப்பாடு நிலவும் நமது நாட்டில் இயற்கை நீர் வளங்களை வெளிநாட்டு நிறுவனத்திற்கு தாரைவார்ப்...
யாழ்ப்பாணத்தில் 39 ஆலங்களின் புனருத்தாபனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நிதியுதவி வழங்கி வை...