அர்த்தமுள்ள வகையில் மீள்குடியேற்றம் செய்யாது இந்தியாவிலிருப்பவர்களை எந்த நம்பிக்கையில் அழைப்பது? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்பி கேள்வி!

Thursday, March 14th, 2019

இந்தியாவில் இருந்து இலங்கை திரும்புகின்ற அகதி மக்கள் தொடர்பிலான பிரச்சினைகள் பற்றி கூற வேண்டியுள்ளது. குறிப்பாக இவ்வாறு இலங்கை திரும்பியவர்களில் சுமார் 2400 குடும்பங்கள் வவுனியா மாவட்டத்தில் செட்டிக்குளம், வவுனியா வடக்கு உள்ளிட்ட பிரதேச பிரிவுகளில் மீளக்குடியேற்றப்பட்டுள்ளனர். இருந்தும் இம் மக்களின் அடிப்படை வசதிகள் இன்னும் பூர்த்தி செய்யப்படாமலேயே உள்ளதாக அம் மக்கள் தொடர்ந்தும் முறையிட்டு வருகின்றனர்.

இவ்வாறாதொரு நிலை இருக்கின்ற போது, இந்தியாவில் இருக்கின்ற ஏனைய அகதி மக்கள் எந்த நம்பிக்கையில் மீள இலங்கை திரும்புவார்கள்? என்ற கேள்வி எழுகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி, இளைஞர் அலுவல்கள் அமைச்சு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

கிளிநொச்சி மாவட்டத்திலே இரணைதீவில் குடியேறியுள்ள மக்கள் இன்று அடிப்படை வசதிகள் ஏதுமின்றி அவதியுறுகின்றனர். குடிநீருக்கு தட்டுப்பாடு, மின்சார வசதிகள் முழுமையாகவே கிடையாது. தற்காலிக கொட்டில்கள் அமைத்து வாழகிறார்கள். மருத்துவ வசதிகள், சுகாதார வசதிகள் எதுவுமில்லை.

அண்மையில் கௌரவ பிரதமர் அங்கு சென்றிருந்தபோது, கௌரவ பிரதமரிடம் இரணைதீவு மக்கள் முகங்கொடுத்து வருகின்ற பிரச்சினைகள் தொடர்பில் அங்கிருந்த எந்தவொரு அரசியல்லாதியும் ஒரு வார்த்தைகூட கூறியிருக்கவில்லை என அம் மக்கள் குறைபட்டுக் கொள்கின்றனர்.

அதேபோன்று, கிளிநொச்சி மாட்டத்திலே ஜெயபுரம் கிராமத்தில் வாழுகின்ற சுமார் 135 குடும்பங்கள் வாழ்வாதாரங்களை மேற்கொள்வதற்கான அனைத்து வழிகளும் தடுக்கப்பட்ட நிலையில் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். இம் மக்கள் முன்னர் அங்கு விவசாய செய்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இன்று அந்தக் காணிகள் வனவளத் திணைக்களத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ளன. இம் மக்கள் நன்னீர் மீன்பிடியில் அப்போது ஈடுபட்டிருந்தனர். இன்று அந்த தேவன்குளம் தூர்ந்து போயிருக்கிறது. அன்று அம் மக்கள் மரமுந்திரிகைத் தோட்டத்தில் தொழில் செய்தனர். இன்று அத் தோட்டம் இராணுவத்தினரால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் தங்களது சொந்த நிலத்தைக் கோரி இன்று இரண்டு வருடங்களாக வீதியில் இறங்கி போராட்டத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்படித்தான் எமது மக்களது வாழ்க்கை முன்பு ஊர், ஊராக இடம்பெயர்ந்து கழிந்தது. இப்போது ஊரிலிருந்து கொண்டே சொந்த இடங்களில் குடியேற முடியாமல் கழிந்து கொண்டிருக்கின்றது.

எனவே, குறிப்பாக, கடந்த கால யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு, பத்து ஆண்டுகள் கழிந்தும் நிம்மியாக வாழ இயலாமல் பாதிக்கப்பட்டு வருகின்ற எமது மக்களுக்கு இந்த மீள்குடியேற்ற, புனர்வாழ்வளிப்பு மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சின் மூலமாக முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகளை துரிதமாக முன்னெடுத்து, எமது மக்களை கைதூக்கிவிட முன்வாருங்கள் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.


காணி விடுவிப்பில் அரசின் செயற்பாடு மந்தமானது - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!
தமிழரின் மாற்றுக் கருத்துக்கு மதிப்பளித்தது இந்திய அரசு - இந்திய விஜயம் தொடர்பில் செயலாளர் நாயகம் டக...
மக்களுக்கு ஏமாற்றங்களை வழங்காது அனைவரும் ஒத்துழைப்புடன் சேவை செய்ய வேண்டும் - அதிகாரிகளுடனான சந்திப்...
யுத்தம் எம்மீது திணிக்கப்பட்டதே அன்றி அதை நாம் வலிந்து கையிலெடுக்கவில்லை – ஊடக சந்திப்பில் டக்ளஸ் எ...
நான் பிரச்சினைகளை முன்வைப்பது தீர்வு தேவை என்பதற்காகவே – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!