அரசை பாதுகாக்கும் கூட்டமைப்பு எச்சரிக்கைவிடுப்பது வேடிக்கை – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, March 12th, 2019

ஐ.நா பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு ஏற்கனவே தேவையான கால அவகாசம் இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் அரசுக்கு கால அவகாசம் வழங்கப்படுவதற்கு துணைபோவதுடன், இலங்கை அரசின் நீதி மறுப்புக்கு நியாயம் கற்பித்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், மறுபக்கமாக ஐ.நா.தீர்மானத்தையும், பரிந்துரைகளையும் செயற்படுத்த இலங்கை அரசு ஆரம்பகட்ட நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும் அதில் முன்னேற்றங்கள் எதுவும் காணப்படவில்லை என்று ஐ.நா  ஆணையாளர் வெளியிட்டிருக்கும் அறிக்கையை வரவேற்றும், இலங்கை அரசுக்கு இது இறுதிச் சந்தர்ப்பம் என்றும், ஐ.நா பரிந்துரைகளை நிறைவேற்றத் தவறினால் அரசு பாரதூரமான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் சம்மந்தன் தெரிவித்திருப்பது பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகின்ற செயற்பாடாகும். என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அந்த செய்திக் குறிப்பில் அவர் மேலும் தெரிவத்திருப்பதாவது –

இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுவது அதன் கபடத்தனமான இரட்டை அரசியல் நிலைப்பாட்டையே வெளிப்படுத்தியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தயவிலேயே தற்போதைய அரசாங்கம் இருக்கின்றது என்றால், ஏற்கனவே ஐ.நா மனித உரிமை ஆணையகத்தினால் பரிந்துரைக்கப்பட்டு, இலங்கை அரசினாலும் இணை அணுசரனை வழங்கப்பட்டுள்ளதான அந்த அறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு கூட்டமைப்பு விரும்பியிருந்தால், கடந்த நான்கு ஆண்டுகளில் அதைச் செய்து முடித்திருக்க வேண்டும்.

யுத்தத்தினாலும், மோசமான மனித உரிமை மீறல்களினாலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நம்பத்தகுந்த நீதிப்பொறிமுறை ஊடாக போர்க் குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் விசாரிக்கப்பட்டு தமக்கு நீதியும், பரிகாரங்களும் வழங்கப்பட வேண்டும் என்று கடந்த பத்து ஆண்டுகளாக காத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

இந்த நிலையில் தாம் கூறுகின்ற ஆட்சியாளர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களித்தால், தம்மை வெற்றிபெறச் செய்தால், சர்வதேச தலையீட்டுடன் சர்வதேச நீதிப் பொறிமுறையூடாக யுத்தக் குற்றத்தையும், மனித உரிமை மீறல்களையும் விசாரணை செய்து நீதியைப் பெற்றுத்தருவதாகவும், நிரந்தரமான அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவதாகவும், சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்து தருவதாகவும், அரச படையினரிடமுள்ள தமிழ் மக்களின் காணிகளை முழுமையாக மீட்டுத் தருவதாகவும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை விசாரித்து உண்மையை வெளிக்கொண்டுவருவதாகவும் தமிழ் மக்களுக்கு தொடர்ந்து வாக்குறுதியளித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எவ்விதமான முன்னெடுப்பையும் இதுவரை எடுக்கவில்லை.

தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்று அணுகுவதற்கும், தீராப்பிரச்சனைகளாக இவை இருப்பதற்கான நோக்கத்தோடு அணுகுவதற்கும் வேறுபாடுகள் இருக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ, தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீராப்பிரச்சனைகளாக இருந்தாலே, அதைத் தீர்த்துத் தருவதாக வாக்குறுதிகள் வழங்கி தேர்தல்களில் வாக்குகளை அபகரிக்கலாம் என்று கருதுவதாலேயே ஒருபக்கம் அரசுக்கு முண்டு கொடுத்துக்கொண்டு, மறுபக்கமாக அரசுக்கு எச்சரிக்கை விடுப்பதுபோல் காட்டிக்கொள்கின்றனர்.

அரசுக்கு முண்டு கொடுப்பதற்கான முழுமையான சலுகைகளை அனுபவித்துவரும், சம்மந்தனும், ஏனைய கூட்டமைப்பினரும் என்னதான் எச்சரிக்கையான அறிக்கைகளை வெளியிட்டாலும் அவர்கள் ஒருபோதும் அரசுக்கு எதிராக செயற்படப்போவதில்லை என்ற உறுதியான நம்பிக்கையிலே இலங்கை அரசு தமிழர் விடயத்தை மெத்தனப்போக்கோடு அணுகிவருகின்றது என்றும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related posts:


ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதில் நாம் மேலும் முன்னோக்கிச் செல்ல வேண்டும்  - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம...
சிறுமி சங்கீதாவின் கண்ணீருக்கு மனிதாபிமான நீதி வேண்டும் - நாடாளுமன்றில் எம்.பி டக்ளஸ் தேவானந்தா கோரி...
உருவாகியிருக்கும் அமைதியான சூழலை பாதுகாத்து வலுப்படுத்த முனைபவர்களின் கரங்களை மக்கள் வலுப்படுத்த வேண...