அரசியல் பொதி சர்வஜன வாக்கெடுப்புக்குவிடப்பட்டால் தீர்ப்பு சாதகமா? பாதகமா?

புதிய அரசாங்கத்தின் ஆட்சியிலும், தென் இலங்கை அரசியல்வாதிகளும், மதகுருமார்களும் கலவரத்தை ஏற்படுத்தும் வகையான கருத்துக்கள் முன்வைக்கப்படுவதும், அவ்விதமான அணுகுமுறைகளும் தொடருமாக இருந்தால் அது மீண்டுமொரு பாரிய இன முரண்பாட்டுக்கே வழி வகுக்கும்.
இனங்களுக்கிடையே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுவதாக கூறப்பட்டபோதும்,அந்த செயற்பாடுகள் தமிழ், முஸ்லிம் மக்கள் உணறுகின்றவகையிலோ, அவர்களையும் போதியளவு பங்காளிகளாக உள்வாங்கியதாகவோ முன்னெடுக்கப்படுவதாகத் தெரியவில்லை.
தேசிய நல்லிணக்கமானது அனைத்து இன மக்களின் பங்களிப்புடனும், அதை அவர்கள் உணறுகின்றவிதமாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் அந்த செயற் திட்டத்தின் இலக்கை நாம் எட்ட முடியும்.
இனங்களுக்கிடையே தேசிய நல்லிணக்கமானது அனைத்து இனமக்களையும் உள்ளடக்கிய பலமான அடித்தளத்தில் கட்டியெழுப்பப்படும்போதே,இந்த நாட்டில் புரையோடிப் போயிருக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு நம்பிக்கையானதும்,நிலையானதுமான தீர்வொன்றை ஏற்படுத்த முடியும். இவ்விடயத்தில் பெரும்பான்மைச் சிங்கள மக்களுக்கு கூடுதல் பொறுப்பு இருக்கின்றது என்பது புரிந்து கொள்ளப்படவேண்டும்.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றைக் காணவேண்டுமாக இருந்தால், நாம் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்ற சாத்தியமான வழிமுறையான, இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதில் ஆரம்பித்து இறுதித் தீர்வு நோக்கி முன்னேற வேண்டும்.
மாகாணசபை முறைமையானது இலங்கையின் அரசியல் யாப்பில் இருப்பதுடன், இலங்கை மக்கள் அனைவரும் அதனை அனுபவித்தும் வருகின்றனர் என்பதால், தேசிய இனப்பிரச்சினைக்கு 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை ஆரம்பமாகக் கொள்வதற்கு யாரும் மறுப்புத் தெரிவிக்கப்போவதில்லை.
13ஆவது திருத்தச் சட்டத்தைவிடவும் அதிகூடிய அதிகாரங்களை முன்னாள் ஜனாதிபதிகளான பிறேமதாஸா, மகிந்த ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் முன்வைத்திருந்ததாகவும், அதைவிடவும் உயரிய தீர்வுப் பொதி ஒன்றை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் முன்வைத்தார் என்றும்,தமிழ் மக்களின் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் அவர்கள் கூறிவருகின்றார்.
அவ்வாறு அதிகூடிய தீர்வுப் பொதியையும், உடன்படிக்கையையும், அறைகுறைத் தீர்வுகள் என்று தட்டிக்கழித்தவர்கள் யார்? என்பதையும்,எதிர்க்கட்சியுடன் சேர்ந்து எரித்து மகிழ்ந்தவர்கள் யார்? என்பதையும் சம்பந்தர் மறந்திருக்கலாம். தமிழ் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வொன்றைக் காண்பதற்கு அல்லது தீர்வு நோக்கி முன்னேறுவதற்கு அரசியல் ரீதியாக கிடைக்கப்பெற்ற நல்ல வாய்ப்புக்களை நிராகரித்ததும், புறக்கணித்ததும், இதே சம்பந்தன் கோ~;டியும், அவர்களின் தலைமைகளும்தான் என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது.
தற்போது கூட புதிய அரசியலமைப்பு ஏற்படுத்தப்படுவதன் ஊடாக தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றைக்காண்பதற்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக நம்பப்படுகின்ற நிலையில்,அரசுடன் இணக்க அரசியல் நடத்தும் சம்பந்தன் குழுவினர் ஆக்கபூர்வமான நகர்வுகளைச் செய்யாமல், அந்த வரைபை சர்வஜன வாக்கெடுப்புக்கு விட வேண்டும் என்று கூறியிருக்கின்றனர். தென் இலங்கையில் பேரினவாதம் மீண்டும் தலை தூக்குகின்ற நிலையில், தீர்வு வரைபு சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்பட்டால்,நிச்சயமாக வரைபுக்கு பாதகமான நிலைமையே ஏற்படும் என்பது சர்வ நிச்சயமாகத் தெரிந்தும், அதையே சம்பந்தன் குழுவினர் கோருகின்றனர் என்றால், இவர்களுக்கு உண்மையிலேயே தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வொன்று கிடைக்க வேண்டும் என்பதில் விருப்பமில்லை என்றே தெரியவருகின்றது.
தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வொன்று கிடைக்கக்கூடாது என்று இனவாதிகள் விரும்புவதற்கும்,தீர்வுக்குத் தடையாக செயற்படும் போலித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் முன்னெடுப்புக்கும் வேறுபாடுகள் இல்லை.
ஊடகப் பிரிவு
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி
Related posts:
|
|