அரசியல் கலாசாரங்கள் மாற்றப்பட வேண்டும்  – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Monday, February 19th, 2018

1994ஆம் ஆண்டில் நாம் இந்த உயரிய சபையிலே காலடி எடுத்து வைத்தவர்கள். அக்காலம் தொடக்கம் இன்று வரை நான் தொடர்ந்தும் இந்தச் சபையினை எமது மக்கள் சார்பில் பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றேன். இந்தக் காலகட்டத்திற்குள் அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் எனக்குக் கிடைத்திருந்தன. நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும் அமைச்சர் என்ற வகையிலும் நான் எனது கடமைகளை – பொறுப்புகளை மிகவும் நியாயமான முறையில் இந்த நாட்டிலே வாழுகின்ற அனைத்து மக்கள் சார்பாகவும் என்னால் இயன்ற வரையில் நிறைவேற்றியுள்ளேன் என்றே கருதுகின்றேன்.

அந்த வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தத்தமது பொறுப்புக்களையும் கடமைகளையும் உணர்ந்து கொள்வது என்பது மிகவும் அவசியமானதொரு விடயமாகும். எமது நாட்டில் தொடர்ந்தும் நிகழ்ந்து வருகின்ற பல்வேறு சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன என்பதையும் இங்கு தெரிவித்தாக வேண்டும் – என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவையின் இறுதி வரைவு தொடர்பான விவாதத்தில் இன்றையதினம் கலந்துகொண்ட உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில் –

குறிப்பாக, எமது நாட்டைப் பொறுத்தவரையில் அரச பாடசாலைகளில் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்வதிலிருந்து, அரச நிறுவனங்களுக்கு பணியாளர்களை சேர்த்துக் கொள்வது வரையில் அரசியல்வாதிகளின் தலையீடுகள் தொடர்வதாகவே நாளாந்த ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறான அரசியல் கலாசாரங்கள் மாற்றப்பட வேண்டும். எங்களைத் தெரிவு செய்கின்றவர்களாக எமது மக்களே உள்ளனர். எனவே நாங்கள் எமது மக்களின் நலன்களிலிருந்தே தீர்மானங்களை எடுத்து, செயற்பட வேண்டுமே அன்றி எமது மக்களை மறந்துவிட்டல்ல என்பதனை நாம் நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் எமது மக்களால் தெரிவு செய்யப்பட்டு தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் எமது மக்களை மறந்து செயற்பட்டிருந்த பலர் இன்று தமது எதிர்கால அரசியல் இருப்பு தொடர்பில் சிந்திக்கவே இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இத்தகையவர்களால் எமது மக்களுக்கென ஏற்படுத்தப்பட்ட பயன்பாடுகள் எதுவுமற்ற நிலையில் வீணடிக்கப்பட்ட காலகட்டத்துக்குள் தள்ளப்பட்டுள்ள எமது மக்கள் வெறும் எதிர்பார்ப்புகளை மட்டுமே சுமந்தவர்களாக இன்னமும் வாழ்ந்து வருகின்றனர்.

Related posts:

புதுக்குடியிருப்பு பலநோக்கு கூட்டுறவு சங்க தலைமை அலுவலகம் மீள்பொலிவுற நடவடிக்கை எடுக்கப்படும் - டக்ள...
அடையாள அட்டை வழங்கும் வேலைத் திட்டத்தை இலகுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா அவையி...
இந்தியாவூடாக கிடைக்கும் ஆரோக்கியமான விடயங்களை மக்களுக்கானதாக்கிக் கொள்வது அவசியம் - அமைச்சர் டக்ளஸ் ...