அரசியல் உரிமைகளை வென்றெடுக்க உறுதியுடன் உழைப்போம் – டக்ளஸ் தேவானந்தா!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போலியான அரசியலை தமிழ் மக்கள் தற்போது தெரிந்து கொண்டு கூட்டமைப்பு மீது அதிருப்தி கொண்டிருக்கின்றார்கள். மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றக் கூடியவர்களாக ஈ.பி.டி.பியாகிய நாமே இருந்து வருகின்றோம் என்ற யதார்த்தத்தை மக்கள் தற்போது ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
அவரது முகநூல் பதிவில் மேலம் தெரிவித்துள்ளதாவது –
உரிமைக்கான போராட்டத்தின் பெயரால் உயிர்களையும், உடமைகளையும், உறவுகளையும் எமது மக்கள் இழந்திருக்கின்றார்கள். கடந்த காலங்களில் தமிழ்த் தலைமைகள் என்று கூறிக்கொண்டவர்கள் கிடைக்கப்பெற்ற வாய்ப்புக்களையும்,
சந்தர்ப்பங்களையும் சரிவரப் பயன்படுத்தியிருந்தால் எமது மக்கள் இத்தனை அழிவுகளையும், இழப்புக்களையும் சந்தித்திருக்க மாட்டார்கள். எமது மக்களுக்கு உரிமைகளுடன் கூடிய ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டிய பொறுப்பு எனக்கும் இருக்கின்றது.
ஆரம்ப கால ஆயுதப் போராளிகளில் நானும் ஒருவன் என்ற வகையிலும், போராட்டங்களை முன்னெடுத்தவன் என்ற வகையிலும் எனது பொறுப்பை தார்மீகக் கடமையாகவே ஏற்றுக் கொண்டிருக்கின்றேன்.
எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கும் அந்த இலக்கு நோக்கிய பயணத்தில் என்னுடன் உறுதியாகவும், விசுவாசமாகவும் சேர்ந்து உழைக்க முன்வருகின்ற தோழர்களை இணைத்துக்கொண்டு தொடர்ந்தும் பயணிக்கத் தயாராக இருக்கின்றேன்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு மக்கள் வழங்கிய அரசியல் அதிகாரத்திற்கு அமைவாக, தற்துணிவோடும், எமது மண்ணையும், மக்களையும் புரிந்து கொண்ட உணர்வோடும் பல்வேறு மக்கள் நலப்பணிகளை கடந்த காலங்களில் முன்னெடுத்திருக்கின்றோம்.
நாளாந்தம் ஆயிரக்கணக்கில் மக்கள் எமது அலுவலகம் நோக்கி நம்பிக்கையோடு அணிதிரண்டு வந்திருக்கிறார்கள் என்றால் நாம் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுகின்றவர்களாகவும், அவர்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்கின்றவர்களாகவும், நடைமுறைச்சாத்தியமான வழியைக் காட்டுகின்ற அரசியல் செயற்பாட்டாளர்களாகவும் இருந்து வருகின்றோம்.
அப்படி நாம் மக்களுக்கு செய்த அர்ப்பணமான சேவைகளை அரசியல் சுய லாபங்களுக்காகவோ, வாக்குகளுக்காகவோ செய்யவில்லை. அதாவது அணி திரண்டுவந்த மக்களிடம் நாம் செய்த சேவைகளை அரசியல் மயப்படுத்த வில்லை. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முன்னெடுத்த செயற்பாடுகளும், வகுத்துக் கொண்ட கொள்கையும், அரசியல் நிலைப்பாடும் சரியானவை என்பதையும், காலத்திற்குப் பொருத்தமானவை என்பதையும் வரலாறு இன்று நிதர்சனமாக்கி இருக்கின்றது.
இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற போர்வைக்குள் ஒழிந்து கொண்டு தமது பாவக்கரங்களையும், அழுக்கு வரலாறுகளையும் கழுவ முற்படுகின்றவர்களைப்போல் நாமும் எமது மக்களின் அவலங்கள் கண்டு அன்று ஒதுங்கி இருந்திருந்தால் முள்ளிவாய்க்கால் அவலங்கள்போல், யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் மனித அவலங்கள் நடந்து முடிந்திருக்கலாம்.
அன்று எமது மக்களின் அவலங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் இன்று போலியான தமிழ்த் தேசியம் பேசிக்கொண்டு எமது மக்களின் வாக்குகளை அபகரித்து தனிமனித பதவிகளையும், அரசியல் சுகபோகங்களையும் அனுபவித்துக்கொண்டு, மக்களின் பிரச்சினைகளை தீராப்பிரச்சினையாக தொடர்ந்தும் வைத்திருக்கவே முயற்சிக்கின்றார்கள்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முன்னிறுத்தும் தமிழ்த் தேசியம் என்பது தமிழ் மக்களை பாதுகாப்பதாகவும், கலைகலாசார பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாப்பதாகவுமே இருக்கின்றது. அதாவது எமது தமிழ்த் தேசிய நிலைப்பாடானது மனித உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பைப்போல் (நல்ல கொலஸ்ரோல்) இருக்கின்றது.
ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறுகின்ற தமிழ்த் தேசியமானது மனித உடலுக்கு தீங்கை விளைவிக்கும் கெட்ட கொழுப்பைப்போல்(கெட்ட கொலஸ்ரோல்) தமிழ் மக்களை அழித்திருப்பதுடன், எல்லாவற்றையும் இழந்த நிலையில் எமது மக்களை ஏதிலிகளாக்கியிருக்கின்றது. அத்தகையவர்களுடன் நாம் இணைந்து கொண்டு நாமும் தமிழ் மக்களை ஏமாற்றும் அரசியலை முன்னெடுக்கலாம் என்று நான் ஒருபோதும் சிந்தித்தது கிடையாது.
எமது அரசியல் வழிமுறையும், எமது நடைமுறைச்சாத்தியமான செயல்முறையுமே சரியானது என்பதை இன்று வரலாறு நிரூபித்துள்ளது. எமது அரசியல் வழிமுறையை இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பின்பற்றியிருந்தாலும், எமது செயல்முறையை அவர்கள் பின்பற்றாமல் சுய நலத்துடனேயே செயற்படுகின்றார்கள்.
நாம் மத்திய அரசுகளுடன் இணக்க அரசியல் நடத்தியபோது தமிழ் மக்கள் நன்மைகளைப் பெற்றுக் கொண்டார்கள்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நடத்தும் இணக்க அரசியலுக்கூடாக கூட்டமைப்பு உறுப்பினர்கள் மட்டுமே நன்மைகளைப் பெற்றுக் கொள்கின்றார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போலியான அரசியலை தமிழ் மக்கள் தற்போது தெரிந்து கொண்டு கூட்டமைப்பு மீது அதிருப்தி கொண்டிருக்கின்றார்கள். மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றக் கூடியவர்களாக ஈ.பி.டி.பியாகிய நாமே இருந்து வருகின்றோம் என்ற யதார்த்தத்தை மக்கள் தற்போது ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.
எனவே நாம் எமது கட்சிக் கட்டமைப்பை மேலும் பலப்படுத்தி வட்டார ரீதியாக மக்களை அணிதிரட்டும் அரசியல் பணியை முன்னெடுக்க வேண்டும். வட்டார ரீதியாக மக்களை சந்திக்க நானும் உங்களுடன் வருவதற்கு தயாராகிவிட்டேன். மக்களின் ஆதரவோடு, உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும், அதனோடு சேர்ந்தவர்களும் அமோக வெற்றியைப் பெற்றுக்கொள்ள நாம் அனைவரும் உறுதியோடு உழைக்க வேண்டும். நாம் செல்லும் பயணம் வெல்லும் என்ற உறுதியுடன் எமது இலட்சியத்தை வென்றெடுக்க உறுதியெடுப்போம். என்றும் கூறினேன்.
Related posts:
|
|