அரசியல் அபிலாசைகளுக்காக தமிழ் தலைமைகளுடன் இணைந்து பயணிக்கத் தயார் – அமைச்சர் டக்ளஸ் பகிரங்க அழைப்பு!
Sunday, January 3rd, 2021எமது மக்களின் வாழ்வை வளப்படுத்த வேண்டுமாயின் அரசியல் தலைமைகள் எமக்கிடையிலான வேறுபாடுகளை களைந்துவிட்டு மக்களின் அபிவிருத்திச் செயற்பாடுகளில் ஒன்றிணைவது அதிகளவான பலனை மக்களுக்கு வழங்கும் என்று அனுபவ ரீதியாக நம்புகின்றேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
தேசிய நாளிதழ் ஒன்றிற்கு அண்மையல் இடம்பெற்ற யாழ். மாநகர சபைக்கான முதல்வர் மற்றும் நல்லுர் பிரதேச சபைக்கான முதல்வர், தவிசாளர் தெரிவில் மணிவண்ணன் அணியினருக்கு ஆதரவளித்து தமிழ் அரசியல் பரப்பில் ஒர் அதிர்வினை ஏற்படுத்தியுள்ளீர்களே? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –
ஆதரவு கொடுத்துதை நான் பெரிய விடயமாகப் பார்க்கவில்லை. எமது மக்களினுடைய நலன் சார்ந்து நின்றுதான் சிந்திக்கின்றேன். எனவேதான் அண்மைக்காலமாக இதுதொடர்பான அழைப்பினை பகிரங்கமாக வெளிப்படுத்துவது மட்டுமன்றி நடைமுறையிலும் வெளிப்படுத்தி வருகின்றேன்.
குறிப்பாக உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான அண்மைய வரவு செலவுத் திட்ட விவகாரத்தினை பார்த்தீர்களாயின் எமது கட்சியின் ஆட்சியில் இல்லாத உள்ளூராட்சி மன்றங்களின் வரவு செலவுத் திட்டங்களை எதிர்ப்பது என்று கட்சியின் அரிசியல் ரீதியான தீர்மானத்தினை மேற்கொண்ட போதிலும் ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களிலும் அதிகாரத்தில் இருக்கின்றவர்களின் கடந்த காலச் செயற்பாடுகள் மற்றும் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து தீர்மானிக்கும் அதிகாரத்தினை சம்மந்தப்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கே வழங்கியிருந்தேன்.
அதனடிப்படையில் யாழ். மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபை ஆகியவற்றின் வரவு செலவுத் திட்டங்கள் தொடர்ச்சியாக இரண்டு தடவைகள் தோற்கடிக்கப்பட்டதன் காரணமாக புதியவர்களை தெரிவு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது.
இதன்போது இளையவர்கள் – புதியவர்கள் ஆர்வமுடன் முன்வந்திருந்த நிலையில் ஒரு சந்தர்ப்பத்தினை வழங்கிப் பார்க்கலாம் என்ற அடிப்படையில் மணிவண்ணன் அணியினருக்கு ஆதரவினை வழங்கி அவர்களுக்கு வாய்;ப்பை வழங்கி இருக்கின்றோம். அவ்வளவுதான்.
இதனிடையே அனைவரும் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். மணிவண்ணன் அணியினருக்கும் எமது கட்சியின் சம்மந்தப்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் ஏற்பபட்டிருக்கக் கூடிய உடன்பாடு என்பது கொள்கை ரீதியான உடன்பாடோ அல்லது தேர்தலை இணைந்து எதிர்கொள்வதற்கான உடன்பாடோ கிடையாது. சம்மந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை செயற்படுத்துவதற்கான ஓர் ஒத்துழைப்பு. இதேபோன்ற ஒத்துழைப்பினையே கடந்த தடவை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் வழங்கியிருந்தோம். ஆனால் அவர்கள் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.
உள்ளூராட்சி மன்றங்கள் என்பது முழுக்க முழுக்க மக்களுக்கான அடிப்படைத் தேவைகளையும் அபிவிருத்திகளையும் ஏற்படுத்துவதற்கான அதிகாரங்களை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் கொண்ட கட்டமைப்பு. அங்கே அரசியல் ரீதியான சிந்தனைகளுக்கு எந்தவிதமான தேவையும் கிடையாது. கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற சில தரப்புக்கள் தங்களுடைய இயலாமைகளை மறைப்பதற்காக உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பாக மக்களை தவறாக வழிநடத்தியிருந்தன.
எனவே உள்ளூராட்சி மன்றங்களைப் பொறுத்தவரையில் அதற்கு இருக்கக் கூடிய அதிகாரங்களை புரிந்து கொண்டு மக்கள் நலச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு யார் முன்வந்தாலும் எமது ஒத்துழைப்பினை வழங்குவோம்.
சமூகத்தின் மீது அக்கறையுள்ளவர்கள் – சமூக நலன் சார்ந்து சிந்திக்கும் பக்குவமுள்ள ஊடகவியலாளர்கள் என்று பலரும் சாதகமான கருத்துக்களை பொது வெளிகளில் முன்வைத்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பேய்க்கு வாழ்கைப்பட்டால் பேயாகத் தான் வாழ வேண்டும் என்பது போன்ற நிலையில் இருக்கின்ற அரசியல் தலைவர்கள் சிலர் தனிப்பட்ட ரீதியில் என்னுடன் தொடர்பு கொண்டு தங்களுடைய சாதகமான கருத்துகளை தெரிவித்து வருவதோடு என்னுடைய இதுபோன்ற செயற்பாடுகளுக்கு தமது மானசீகமான ஆதரவு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேபோல இது தொடர்பில் வெளியாகின்ற விமர்சனங்கள் தொடர்பில் நான் அக்கறை கொள்வதில்லை – நான் அறிந்தவரையில் இந்த விடயத்தில் கஜேந்திரன் அணியினைச் சேர்ந்த சிலர்தான் எதிரான விமர்சனங்களை முன்வைத்து வருவதாக தெரிகின்றது. அவ்வாறான கருத்துக்களை நான் என்றைக்குமே கவனத்தில் கொள்வதில்லை.
அதேபோல ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை என்றும் சர்வதேச நீதிமன்றம் என்றும் தமிழ் மக்களுக்கு கதை விட்டுக் கொண்டிருகின்றவர்கள். தங்களுடைய கட்சியின் தலைவர் அண்ணன் குமார் பொன்னம்பலம் கொலை தொடர்பான வழக்கு விசாரணைகளை நடத்த விரும்பாமல் கைவிட்டு விட்டனர்.
ஏனெனில் குறித்த வழக்கு விசாரணைகளை தொடர்ந்தும் நடத்தினால் குறித்த கொலைக்கும் புலிகளுக்கும் இருக்கின்ற தொடர்புகள் மாத்திரமல்ல குமார் அண்ணனுக்கு இருந்த தொடர்புகளும் பலவீனங்களும்கூட வெளிவந்து விடும் என்பதும் அவர்களுக்குத் தெரியும்.
எனவே இவர்களுடைய கோசங்களும் கருத்துக்களும் தங்களுடைய ஊத்தைகளை மறைப்பதற்கான முக மூடிகளாகவே நான் கருதுகின்றேன். என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|