அரசியல்வாதிகளை மக்கள் துரத்தியடிப்பது மக்களின் அரசியல் தெளிவையே காட்டுகின்றது – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Friday, June 28th, 2019

மக்கள் உணவை கையில் எடுக்கும் போது இருக்கின்ற விலை வாயில் போடுவதற்குள் அதிகரித்து விடுகின்றது. இப்படி மக்கள் அன்றாடம் உண்பதற்கே வழி தேடிக் கொண்டிருக்கின்றபோது சீன சிகரெற்றுகள் பற்றி வாத விவாதங்களை நடத்திக் கொண்டிருக்கின்றீர்கள். உணவின்றி 11 மாதக் குழந்தை தென்பகுதியிலே இறந்துவிடுகின்ற பரிதாபங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

பிள்ளைகளை பராமரிக்க முடியாமல் தாய் தனது இரண்டு சிறு பிள்ளைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்கின்ற பரிதாபங்கள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன.

போதை வஸ்து ஒழிப்பு பற்றி பேசப்பட்டு வரும் நிலையில் போதை வஸ்துகளுக்கு அடிமையாகாத சுமார் 1500 பாடசாலை மாணவர்கள் பாடசாலை மட்டங்களில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளிவருகின்றன.  

இத்தகைய மக்களது அன்றாடப் பிரச்சினைகள் எல்லாவற்றையும் மூடி மறைத்துக்கொண்டு இது எந்த நாடு? என்பது பற்றி நீங்கள் பட்டிமன்றம் நடத்துவதிலேயே காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறீர்கள். 

எதை விற்றேனும் தாம் மட்டும் வயிற்றை நிரப்பினால் போதும் என்ற கொள்கை வீட்டுக்கும் உதவாது நாட்டுக்கும் உதவாது!

ஒரு வகையில் இன்று இந்த நாட்டு மக்களிடத்தே தெளிவான அரசியல் சிந்தனைக்கு நீங்கள் வழியேற்படுத்திக் கொடுத்திருக்கிறீர்கள். அண்மையில் புகையிரதத் திணைக்களத்தினரின் பணிப் பகிஸ்கரிப்பு நாட்களில் இந்த நாட்டு மக்கள் தெரிவித்திருந்த கருத்துக்கள் அதற்கு சான்று பகர்கின்றன. நாங்கள் இட்ட புள்ளடி இன்று எங்களுக்கு எதிராகவே செயற்படுகின்றது’ என மக்கள் கூறுகின்றனர். 

இதே அரசியல் தெளிவினை இன்று எமது மக்களும் பெற்றிருக்கிறார்கள் என்பதற்கு அரசாங்கத்துடன் தரகு அரசியல் நடத்துகின்ற தமிழ்த் தரப்பு அரசியல்வாதிகள் எமது மக்களால் துரத்தப்படுகின்ற சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

எனவே பொது மக்கள் பாதுகாப்பு என்பதுடன் பொது மக்களது வாழ்க்கை தொடர்பிலும் சற்றேனும் சிந்திக்க வேண்டும். வாக்குகளை நம்புகின்ற நீங்கள் அதை வழங்குகின்ற மக்களையும் நம்ப வேண்டும்.   வாக்குகளுக்காக அடிப்படைவாதக் குழுக்களையும் இனவாதக் குழுக்களையும் நம்பி மீண்டும் இந்த நாட்டில் முரண்பாட்டு மோதல் நிலைமைகளை உருவாக்க முயற்சிக்க வேண்டாம் எனக் கேட்டுககொள்கின்றேன்.

என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழான பிரேரணை தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டபின் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts:


கித்துள் கள்ளினை வீடு வீடாக விற்பனை செய்து வீடுகளை மதுபான சாலைகளாக மாற்றுவதற்கு திட்டங்கள் ஏதும் உண்...
கொரோனாவை எதிர்கொண்டது போல ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச நாடாளுமன்ற தேர்தல் தொடர்பிலும் சரியான முடிவை எடு...
கடற்றொழில் அமைச்சின் செயற்திட்டங்கள் மக்களை நோக்கியதாக முழுமையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது – நாட...