அரசியல்வாதிகளைப்போல் அரச நிறுவனங்களும் பயனற்றதாக இருந்துவிடக் கூடாது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Wednesday, March 13th, 2019

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக் கொண்டு பெயருக்கு வாய் வீரம் பேசிக் கொண்டு, எமது மக்களது நிதியை வீணடித்துக் கொண்டு, எமது மக்களுக்கு கடுகளவேனும் பயனில்லாத வகையில் இருக்கின்ற தமிழ்த் தரப்பினர் போல் இந்த அரச நிறுவனங்களும் இருந்துவிடக் கூடாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற ஜனாதிபதி, பிரதமர், சுயாதீன ஆணைக்குழுக்கள் உள்ளடங்கலாக 22 நிறுவனங்கள் தொடர்பிலான 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் மதிப்பீட்டின் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இன்றைய நிலையில் செயற்பாடற்ற அல்லது மக்களுக்கு எவ்விதமான பயன்களும் கிடைக்காத நிறுவனங்களை வைத்துக் கொண்டு பராமரித்துக் கொண்டிருப்பதைவிட, அவற்றுக்கான ஒரு தொகை பணியாளர்களை நியமித்து, ஊதியம் உட்பட அனைத்தச் சலுகைகளுக்காகவும் மக்கள் நிதியினை வீண் விரயம் செய்து கொண்டிருப்பதைவிட, இந்த நாட்டை பொருளாதார ரீதியில் தூக்கி நிறுத்த வேண்டிய துறைகள் வலுப்படுத்தப்பட வேண்டியுள்ளன. தூக்கி நிறுத்தப்பட வேண்டிய மக்கள் இருக்கின்றனர்.

இந்த வரவு – செலவுத் திட்டத்திலே எதிர்பார்க்கின்ற வருமானத்தைவிட இரட்டிப்பான செலவுகளை நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நிங்கள் எதிர்பார்க்கின்ற வருமானத்தை எப்படி நீங்கள் ஈட்டப் போகிறீர்கள்? என்பது உங்களுக்கும் கேள்விக்குறியாகவே இருக்க வேண்டும்.

பல்வேறு கடன் திட்டங்களை நீங்கள் அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். அதனூடாக எமது மக்களையும் கடன்காரர்களாக்கிவிட்டு, நீங்கள் எதிர்பார்க்கின்ற செலவுகளை மேற்கொள்வதற்கும் மேலும் கடன் வாங்கப் போகிறீர்கள்.

மறுபக்கத்தில் மக்களிடமிருந்து வரிகளை எதிர்பார்க்கின்றீர்கள். அறவிடுகின்றீர்கள். மக்களுக்கு என்ன வருமானங்கள் இருக்கின்றன, வரிகளை செலுத்தி, அன்றாட உணவைத் தேடிக் கொள்வதற்கு? என்பது பற்றி நீங்கள் ஆராய்வதாக இல்லை.

கடன்களையும் வரிகளையும் தவிர்த்து வேறு என்ன வருமான வழிகளை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு நடைமுறைச் சாத்தியமான பதில் கிடையாது என்றே நினைக்கின்றேன்.

நேற்று இரவிலிருந்து எரிபொருட்களுக்கான விலை உயர்த்தப்பட்டிருக்கின்றது. இன்று முதல் உணவுப் பொருட்களிலிருந்து, பஸ் கட்டணங்கள் என மீண்டும் ஒரு சுற்று விலை உயர்வுகள் இந்த நாட்டில் தொடரும் என நினைக்கக் கூடியதாக இருக்கின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: