அரசியலமைப்புப் பேரவையின் அமைப்பை மீள் பரிசீலித்தல் வேண்டும் – நாடாளுமன்றில்டக்ளஸ் எம்பி சுட்டிக்காட்டு!

Thursday, February 21st, 2019

2015ஆம் ஆண்டு மே மாதத்தில் அமுலுக்கு வந்த 19வது அரசியல் யாப்புத் திருத்தமே தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. இத் திருத்தத்தின் பிரகாரம் “நாடாளுமன்ற சபை” என்பது “அரசியலமைப்புப் பேரவை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

19ஆவது திருத்தத்தின்படி, 09 ஆணைக் குழுக்களின் உறுப்பினர்களின் பெயர்களை விதந்துரைக்கும் கடமை அரசியலமைப்புப் பேரவைக்கே இருக்கும். அத்துடன், பிரதம நீதியரசர் உட்பட்ட உயர் நீதிமன்ற நீதியரசர்களையும் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் உட்பட்ட நீதியரசர்கள், நீதிச் சேவை ஆணைக்குழு உறுப்பினர்கள் என்பதுடன், சட்டமா அதிபர், கணக்காளர் நாயகம், பொலிஸ்மா அதிபர், ஓம்பூட்ஸ்மன், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஆகிய 5 பதவிகளுக்கான பெயர்களை ஜனாதிபதி நியமனம் செய்வதற்கு முன்னதாக யாப்பு பேரவை அங்கீகாரம் வழங்குவது அவசியம். இந்த 19வது திருத்தத்தில் புதிதாக இரண்டு விடயங்கள் உள்ளன.

அரசியலமைப்புப் பேரவையின் விதப்புரையை அல்லது அங்கீகாரம் பெற்ற ஒரு நபரை 14 நாட்களுள் ஜனாதிபதி நியமனம் செய்யாமல் இருப்பாராயின், அந்த நபர் நியமனம் பெற்றவராகவே கருதப்படுவார். அத்துடன் அரசியலமைப்புப் பேரவையின் விதப்புரையையோ அல்லது அங்கீகாரத்தையோ பெற்ற எந்த நபரையும் பதவி நீக்குவதாயின் அது நாடாளுமன்றத்தில் 2ஃ3 அங்கீகாரத்தைப் பெற்றே நீக்க முடியும். மேலும் மே மாதம் 2015 முதல் ஜனவரி 2019 வரை அரசியலமைப்புப் பேரவை என்ற பெயருடன் இருந்த போதும் அதனுடைய செயற்பாடுகள் தொடர்பான காரணங்களை நாம் ஆராய வேண்டும என ஈழ மக்கள்ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் நாடாளுமன்றில் நடைபெற்ற அரசியல் யாப்பு தொடர்பான விவாதத்தில் கலந்தகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
அரசியலமைப்புப் பேரவை உறுப்பினர்களாக,
(1) பிரதம மந்திரி
(2) சபாநாயகர்
(3) எதிர்க்கட்சித் தலைவர்
(4) ஜனாதிபதியால் நியமிக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்
(5) பிரதம மந்திரியும் எதிர்க்கட்சித் தலைவரும் “ஒருமித்து” நியமிக்கும் ஐவர். அவர்களுள் இருவர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும்.
(6) நாடாளுமன்றத்தில் ஏனைய கட்சிகள் சேர்ந்து நியமிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்.
இவர்களே அந்த யாப்பு பேரவையின் உறுப்பினர்கள் ஆவார்கள்.

நான் மேலே குறிப்பிட்ட காலப்பகுதியில் எதிர்க்கட்சிப் பதவியில் இருந்தவர்களும் அரசாங்கத்தில் சேர்ந்தவர்களாகச் செயற்பட்டு “எதிர்க்கட்சி” என்பதற்குப் புதிய அர்த்தம் கொடுத்தார்கள்.
ஒத்தூதுவது ஆளும் கட்சிக்கு! ஒட்டுக்கட்சியாக ஒட்டியிருந்ததே எதிர்க்கட்சி ஆசனத்தில்!! உலகில் எங்குமே நடந்திருக்காத விசித்திரமான அரசியல் நாடகம் இது.

கண் மூடி, கை கட்டி, வாய்; பொத்திக்கொண்டு வாக்குறுதி வழங்கிய மக்களுக்கு கண் கட்டி வித்தை காட்டும் இவர்களா தமிழ்த் தேசியத்தை உச்சரிக்க தகுதி உடையவர்கள்?.. அதைத்தான் ஒருமித்து இருத்தல் என்று அவர்கள் கொள்கை விளக்கம் கொடுத்து வருகிறார்கள்.

அவர்கள் “ஒருமித்து சும்மா” இருந்த கட்சிதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனப்பெயரிடப்பட்டு இருக்க வேண்டும். அவர்கள் “சும்மா” இருந்தது அரசாங்கக் கட்சியில்தான். அத்தோடு, நாடாளுமன்றத்தில் இருந்த சிறு கட்சிகளின் பிரதிநிதியும் அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டிருந்தார். ஒட்டுமொத்தமாக ஜனநாயகத்துக்கு சவால் விட்டுக் கொண்டு ஒரு பக்கத்தில் 09 பேரும் மறுபக்கத்தில் ஒருவருமே அரசியலமைப்புப் பேரவையில் இருந்தனர். இத்தகைய வலையமைப்பு முறையில் செயல்பட்ட அரசியலமைப்புப் பேரவை சாதித்தது என்ன?

மேலும், எந்த ஓர் ஆணைக்குழுவின் உறுப்பினரையும் அரசியலமைப்புப் பேரவையின் அனுமதியில்லாமல் ஜனாதிபதி அகற்ற முடியாது என்ற கர்வத்தினால், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதியின் செயற்பாட்டுக்கு எதிராகத் துணிந்து வழக்குத் தாக்கல் செய்ய முந்திருக்கிறது. நல்ல காலம், இந்த அரசியலமைப்புப் பேரவையில் மாற்றங்கள் ஏற்படும் போல் தெரிகிறது. அல்லது, நாடே நாசமாகிவிடும். அன்று பேராசிரியர் வில்சன் எதிர்வு கூறிச்சென்ற வார்த்தைகள் உண்மையாகி விடாமல் பாதுகாக்க வேண்டும்.

அரசியலமைப்புப் பேரவையின் அமைப்பை மீள் பரிசீலித்தல் வேண்டும். எதிர்க்கட்சி என்பது அரசாங்கத்துடன் “ஒருமித்து” இருக்கும் கட்சியாக இருத்தல் ஆகாது என்ற யாதார்த்தத்தை இனியாவது நடை முறைக்கு கொண்டு வர வேண்டும். ஜனாதிபதியால் நியமனம் பெறும் அனைவரும் சுயாதீனமாக இயங்குவதற்கான செயற்பாடுகள் அவசியம்.

Related posts:

வடக்கில் சில தமிழ் அரசியல் வாதிகளால் மணலுக்கான செயற்கைத் தட்டுப்பாடு  ஏற்படுத்தப்பட்டுள்ளது - செயலாள...
அரசுடனான நல்லுறவைப் பேணி மக்களுக்கான செயற்றிட்டங்களை முன்னெடுக்க முடியும் என செயல் வடிவில் காட்டியவ...
மனதாபிமான முறையில் ஓர் அரசியல் தீரமானம் எடுத்து, தடுத்து வைத்திருக்கின்ற அரசியல் கைதிகளை விடுதலை செய...