அரசினால் முன்னெடுக்கப்படுகின்ற திட்டங்களுக்கு தமிழ் மொழியிலும் பெயரிடப்பட வேண்டியது அவசியமாகும் – டக்ளஸ் தேவானந்தா பிரதமரிடம் வலியுறுத்தல்!

Friday, January 27th, 2017
அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகின்ற பொது மக்களுக்கான பல்வேறு உதவித் திட்டங்கள் மற்றும் வேலைத் திட்டங்கள் என்பவற்றுக்கு தனிச் சிங்கள மொழியில் மாத்திரம் பெயரிடுவதால், தமிழ் மொழி மூலமான மக்கள் அதனை உணர்வுப்பூர்வமாக ஏற்று பயனடைவதில் ஈடுபாடுகள் குறைந்தே காணப்படுகிறது. சிங்கள மொழிப் பரிச்சயம் அற்ற மக்கள் இவ்வாறானத் திட்டங்களைப் புரிந்துகொள்ள இயலாமல், இத்திட்டங்கள் தங்களுக்கு அந்நியமானவை என்று கருதுகின்ற நிலையே இருந்து வருவதால், அதனை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் எழுத்த மூலமாக பிரதமருக்கு அறிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், மேலும் தெரிவிக்கையில், சிங்கள மொழியில் இவ்வாறானத் திட்டங்களுக்கு பெயரிடுவதுடன், அதன் அர்த்தத்தை தமிழ் மொழியிலும் பிரகடனப்படுத்தினால், தமிழ் மொழி மூலமான மக்கள் அதனை உணர்ந்து, அதன் பயன்பாட்டினை முழுமையாக அடைவார்கள் என நான் நம்புவதுடன், கடந்த காலத்திலும் எமது முயற்சியினால் இவ்வாறு பல திட்டங்களின் பெயர்கள் தமிழ் மொழியிலும் பிரகடனப்படுத்துள்ளதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
உதாரணமாக, திவிநெகும – (‘வாழ்வின் எழுச்சி’) – பிம் சவிய –(‘நிலச் சக்தி’ ) – கர்மாந்த பியச –(‘கைத்தொழில் நுழைவாயில்’) போன்றவற்றைக் குறிப்பிட முடியும். தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான எமது பயணத்தில் இவ்வாறான ஏற்பாடுகள் அவசியமாகும் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.
அந்த வகையில், தற்போது முன்னெடுக்கப்படுகின்ற ‘நெனதிரிய’ எனும் பாடசாலை மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்புத் தொகை வழங்கும் திட்டத்திற்கு ‘அறிவூக்கம்’ எனும் தமிழ் மொழியிலான பதத்தையும் பயன்பாட்டுக்காக  இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
8-4-1024x768

Related posts: