அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்டக் காணியில் தற்காலிக நெற்செய்கை சிறந்த விளைச்சலால் மகிழ்ச்சியில் மக்கள்!

கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பிரதேச கரும்புத்தோட்டக் காணியில் தற்காலிகமாக மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்செய்கை சிறப்பான பலனைத் தந்துள்ளது. இதனால், காணிகளைப் பெற்றுக்கொண்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஒரு சில தனியாரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்துவந்த கரும்புத்தோட்டக் காணியை, அந்தப் பகுதி மக்களின் வேண்டுகோளுக்கமைய, கடற்றொழில் அமைச்சரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான டக்ளஸ் தேவானந்தா விடுவித்து, மீண்டும் கரும்புச் செய்கையை ஆரம்பிக்கும் வரையில் தற்காலிகமாக காலபோக நெற்செய்கையை மேற்கொள்வதற்காக காணிகற்ற மக்களுக்கு பகிர்ந்தளிக்க பணித்திருந்தார்.
இதன் பிரகாரம், கண்ணகைபுரம், ஸ்கந்தபுரம், அக்கராயன், கோணாவில், ஆனைவிழுந்தான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த காணிகளற்ற மக்களுக்கு சுமார் 150 ஏக்கர் காணி இம்முறை காலபோக நெற்செய்கைக்காக தறகாலிகமாக வழங்கப்பட்ட நிலையிலேயே அது இவ்வாறு சிறப்பாக விளைந்து காட்சி தருகிறது.
நெற்செய்கைக்காக காணிகள் வழங்கப்பட்ட மக்களுக்கு அதற்கான பசளையை வழங்கும் ஏற்பாடுகளையும் செய்யுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கமநல சேவைகள் உதவி ஆணையாளரைப் பணித்து அதற்கான நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றில் முதல் தடவையாக நெற்செய்கையில் ஈடுபட காணிகளைப் பெற்றுக்கொண்டு முயற்சியில் இறங்கிய அந்தப் பகுதி மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் மேற்கொண்ட முயற்சியால் நெல் சிறப்பாக விளைந்துள்ளது.
கரும்புத்தோட்டக் காணி எனப்படும் சுமார் 196 ஏக்கர் காணி 1965 முதல் 1983 வரையான காலப்பகுதியில் கரும்புச்செய்கை மேற்கொள்ளப்பட்டு சர்க்கரை மற்றும் பாணி உற்பத்தியும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
1983 இன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட நெருக்கடிச் சூழல் காரணமாக இந்த முயற்சி கைவிடப்பட்ட நிலையில் அந்தக் காணி பல தரப்புக்களினதும் கைமாறி, இறுதியாக ஒரு சில தனியாரின் ஆதிக்கத்தின்கீழ் கடந்த 2016ம் ஆண்டு முதல் இருந்து வந்தது.
இந்த நிலையிலேயே, கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொறுப்பேற்ற பின்னர் அந்தப் பகுதி மக்கள் அவரிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய அதனைத் தீர விசாரித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்களின் கோரிக்கையின் நியாயத்தன்மையைப் புரிந்துகொண்டு காணியை விடுவித்து பிரதேச பொதுமக்களிடம் கையளித்திருந்தார்.
நீண்டகாலமாக பல்வேறு அரசியல் தரப்புக்களிடமும் வேண்டுகோள் விடுத்தும் நிறைவேற்றப்படாத தமது கோரிக்கையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிறைவேற்றியதையடுத்து, விரைவில் இந்தக் காணியில் மீண்டும் கரும்புசெய்கையை ஆரம்பித்து பாரிய சீனித் தொழிற்சாலை ஒன்றையும் அமைக்கும் முயற்சியில் காணியைப் பொறுப்பேற்ற பிரதேச அமைப்புக்கள் ஈடுபட்டுள்ளன.
அதுவரையில் தற்காலிக ஏற்பாடாகவே இம்முறை காலபோகத்துக்கு நெற்செய்கையில் ஈடுபட காணிகளற்ற பிரதேச மக்களுக்கு காணியைப் பகிர்ந்தளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|