அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கை – யாழ் – கிளிநொச்சி இடையே அடுத்த வாரம்முதல் விசேட புகையிரத சேவை முன்னெடுப்பு!
Sunday, July 3rd, 2022யாழ்ப்பாணத்துக்கும், கிளிநொச்சிக்கும் இடையிலான விசேட புகையிரத சேவையொன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் அடுத்த வாரம் ஆரம்பிக்க ஏற்பாடாகியுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு அரச அலுவலகங்களில் பணியாற்றுவதற்காகச் சென்றுவரும் நூற்றுக்கணக்கான அலுவலர்களின் நன்மை கருதி ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்ட இந்தப் புகையிரதசேவையைத் தொடங்குவது தொடர்பாக புகையிரதசேவை அதிகாரிகள் நேரில் வந்து ஆராய்ந்தனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் பணியாற்றும் அரச அலுவலர்கள் மற்றும் யாழ் பல்கலைக்கழகத்தின் அறிவியல்நகர் வளாக விரிவுரையாளர்கள், பணியாளர்கள், மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்தச் சேவையை ஆரம்பிப்பதற்கான கோரிக்கை கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் ஊடாக, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்தக் கோரிக்கையை போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இரண்டு வாரங்களில் இந்தச் சேவையை ஆரம்பிப்பதற்கான இணக்கத்தைப் பெற்றிருந்தார்.
இதனையடுத்து, இந்தப் புகையிரதசேவையை ஆரம்பிப்பது தொடர்பாக ஆராய்வதற்காக புகையிரதத் திணைக்களத்திலிருந்து வருகை தந்திருந்த பிரதி பொது முகாமையாளர் ஏ.டி.ஜி.செனவிரத்ன, யாழ்ப்பாண புகையிரத நிலைய அதிபர் பிரதீபன், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஸ்ரீமோகன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மேலதிக இணைப்பாளர் கோடீஸ்வரன் றுஷாங்கன் ஆகியோருடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார்.
அதன்பின்னர், அமைச்சரின் இணைப்பாளர் றுஸாங்கனுடன் இணைந்து புகையிரதத்தில் கிளிநொச்சிக்குப் பயணமான பிரதிப் பொது முகாமையாளர், அங்கு வட பிராந்திய புகையிரத சேவைகள் பணிப்பாளர் விசுந்துர மற்றும் கிளிநொச்சி மாவட்ட புகையிரத நிலைய அதிபர் சிகாமணி ஆகியோருடனும் மேலும் கலந்துரையாடல்களை நடாத்தினார்.
தொடர்ந்து, அவர்களுடன் இணைந்து கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்குச் சென்ற அவர், அங்கு மாவட்டச் செயலாளர் றூபவதி கேதீஸ்வரன் அவர்களைச் சந்தித்து புகையிரதசேவைக்கான ஏற்பாடுகள் பற்றிக் கலந்துரையாடல்களை நடாத்தினார்.
இதன்பின்னர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது வேண்டுகோளுக்கு அமைவாக அடுத்த வாரமே யாழ்-கிளிநொச்சி புகையிரத சேவையை ஆரம்பிக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்த அவர், விரைவில் புகையிரதசேவை ஆரம்பிக்கும் திகதியை அறியத்தருவதாகவும் தெரிவித்துள்ளார்.
காங்கேசன்துறையிலிருந்து கிளிநொச்சி அறிவியல்நகர் வரையில் நடாத்தப்படவுள்ள இந்தச் சேவையின் மூலம் அரச அலுவலர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது-
Related posts:
|
|