அமைச்சர் டக்ளஸின் நடவடிக்கையினால் கல்முனை கடற்றொழிலாளர்களின் அச்சம் நீக்கப்பட்டது!

Thursday, September 10th, 2020

கல்முனைக் கடற் பிரதேசத்தில் எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படவில்லை என்று நாரா எனப்படும் நீரியல் வள ஆராய்ச்சி நிறுவனம் நிறுவனத்தின் ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

அண்மையில் எண்ணெய் தாங்கிக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினை அடுத்து கல்முனை கடற் பரப்பில் சந்தேகத்திற்கிடமான எண்ணெய்ப் படிமங்கள் பிரதேச கடற்றொழிலாளர்களினால் அவதானிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தது.

இதனால், பிரதேச கடற்றொழிலாளர்கள் தொழிலுக்கு செல்வதை தவிர்த்து வந்த நிலையில் குறித்த விடயம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதனையடுத்து நாரா நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் நவரட்ணராஜா தலைமையிலான அதிகாரிகளுடன் அவசர கலந்துரையாலை நடத்திய அமைச்சர், உடனடியாக கல்முனை கடற் பிரதேசத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு விபத்திற்கு உள்ளான கப்பலில் இருந்து வெளியேறிய ஏதாவது பதார்த்தங்கள் கடல் நீரில் கலந்துள்ளதா என்பதை கண்டறியுமாறு அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், நாரா நிறுவனத்தினால் பெரிய நீலாணையில் இருந்து ஒலுவில் வரையிலும், அதேபோன்று பொத்துவில், பனாமா, திருக்கோவில் ஆகிய கடற்பிரதேசங்களிலும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

குறித்த ஆய்வுப் பணிகள் 32 கடல் மைல் தூரம் வரை மேற்கொள்ளப்பட்டதுடன் குறித்த கடற்பிரதேசத்தில் இருந்து பிடிக்கப்பட்ட மீன்களை ஆய்வுக்கு உட்படுத்தி அவற்றிலும் எந்தவிதமான மாற்றங்களையும் அவதானிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ள நாரா நிறுவனத்தின் அதிகாரிகள், பிரதேச கடற்றொழிலாளர்கள் வழமை போன்று தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் எனவும் தெரிவித்தனர்.

Related posts: