அமுத சுரபி இருக்க ஏன் பிச்சைப்பாத்திரம் ஏந்த வேண்டும்? – டக்ளஸ் தேவானந்தா

13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை ஓர் ஆரம்பமாகக் கொண்டு, அதற்கு மேலதிக அதிகாரங்களை ,விசேடமான அதிகாரங்களை சமச்சீரற்ற அதிகாரங்களை வழங்குவதன் மூலம் அரசியலுரிமைப் பிரச்சினைக்கான தீர்வினை நோக்கிச் செல்லலாம் என்பதையே நாம் ஆரம்பம் முதல் வலியுறுத்தி வந்திருக்கின்றோம்.
ஆனாலும், அதை சக தமிழ்க்கட்சித் தலைமைகள் அன்று ஏற்றிருக்கவில்லை. காலம் கடந்தாவது சக தமிழ் கட்சிகள் 13 வது திருத்தச்சட்டம் குறித்து பேசவும் அதன் நடைமுறைகளில் பங்கெடுக்கவும் வந்திருக்கின்றன. அந்த வகையில், எமது வழிமுறை நோக்கி அவர்கள் வந்ததை நாம் வரவேற்கின்றோம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது –
அரசியல் ரீதியாக உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் அரசியல் தீர்வொன்றை விரும்பி நிற்கும் எமது தமிழ் பேசும் மக்களின் சார்பாகவும், அபிவிருத்தி மற்றும் சகல வாழ்வியல் உரிமைகளுக்காகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் எமது மக்களின் சார்பாகவும் எனது கருத்துக்களை இந்த அதியுயர் சபையில் நான் முன்வைக்கின்றேன்.
கையிலே அமுதசுரபி ஒன்றை வைத்துக்கொண்டு பிச்சைப்பாத்திரம் கொண்டு அலைவது போல்,.. 37 அதிகாரங்களை கொண்ட மாகாணசபை அதிகாரத்தையே நடைமுறைப்படுத்த விரும்பாமலும், முடியாமலும் எமக்கு ஒன்றும் கிடைக்கவில்லை என்று பிச்சைப்பாத்திரம் ஏந்தித் திரிகிறார்கள்.
கையில் கிடைத்திருக்கும் மாகாண சபை அதிகாரத்தை நடைமுறைப்படுத்த முடியவில்லை. புதிய அரசியலமைப்பு குறித்து யோசனைகளை முன்வைத்துக்கொண்டு திரிகிறார்கள். நாமும் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை வரவேற்கின்றோம்.
அதற்கான எமது யோசனைகளையும் முன்வைத்திருக்கிறோம். அரசாங்கம் முன்னெடுக்கும் நல்லெண்ண முயற்சிகளை நாம் ஆதரித்தும் வரவேற்றும் வருகின்றோம்.
ஆனாலும் 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாதவர்கள் புதிய அரசியலமைப்பின் பிரகாரம் உருவாகும் தீர்வை எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகின்றார்கள் என்பதே எனது கேள்வியாகும் என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|