அன்னலிங்கம் ஐயாவிற்கு என் இறுதி மரியாதை!

Wednesday, July 5th, 2017

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், மக்களுக்கும் அரசியல் மற்றும் தெளிவுபடுத்தல் வகுப்புக்களை நடத்தி பெரும்பங்காற்றிய அன்னலிங்கம் ஐயா காலமான செய்தி அறிந்து மிகுந்த துயரமடைந்தேன்.

ஈழ விடுதலை இயக்கத்திலும், ஈரோஸ் இயக்கத்திலும் முழு ஈடுபாட்டுடன் நாங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கையில் எங்களுடன் இணைந்து மக்களை அணிதிரட்டுவதிலும், உறுப்பினர்களை தத்துவார்த்த ரீதியாக நெறிப்படுத்துவதிலும், விடுதலைப் போராட்டத்தில் முன்னோடியாக செயற்பட்ட அன்னலிங்கம் ஐயா, திருகோணமலை மண்ணிலிருந்து விடுதலைப் போராட்டத்திற்கு தம்மை அர்ப்பணித்தவர்களில் முன்னோடியாகத் திகழ்ந்தார்.

ஈரோஸ் அமைப்பின் தளச் செயற்பாட்டுப் பணியை பொறுப்பேற்று நான் செயற்பட்ட காலத்தில், ‘ தத்துவார்த்த சிந்தனைகளே புரட்சிக்கான படையை வழி நடத்த வேண்டும்’ என்ற எமது நிலைப்பாட்டை உறுப்பினர்களின் மனதிலும், மக்கள் மனதிலும் பதியச் செய்வதில் அன்னலிங்கம் ஐயா தனது ஆற்றலை வெளிப்படுத்தியவர்.

ஈரோஸ் அமைப்பு நடத்திய ‘தர்க்கீகம்’ பத்திரிகை தாங்கிவந்த மாக்சீய, லெனீனிச தத்துவார்த்தக் கருத்துக்களை அன்னலிங்கம் ஐயா மக்களுக்கும் உறுப்பினர்களுக்கும் இலகு மொழியில் போதித்தவர்.

அக்காலப்பகுதியில் என்னுடன் தோழர் அன்னலிங்கம் ஐயா அவர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துக்களும், தூர நோக்கச் சிந்தனையுடனான கலந்துரையாடல்களும் இன்னும் என் மனதில் பசுமையாக பதிந்திருக்கின்றன.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் உன்னதமான பங்களிப்பைச் செய்த அன்னலிங்கம் ஐயா அவர்களுக்கான எனது இறுதி மரியாதையை செலுத்துவதுடன் அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது உறவுகளுக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.


பருத்தித்துறை நரசிம்மர் கோவிலடி பகுதியில் அமைக்கப்பட்ட குடிநீர் தாங்கியை டக்ளஸ் தேவானந்தா மக்களிடம்...
உணர்வுகள் மதிக்கப்படும்  என்று நம்புகின்றேன் - டக்ளஸ் தேவானந்தா!
அரச தொழில்வாய்ப்புகளில் இன விகிதாசாரம் பேணப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா
அரசியல் அதிகாரங்கள் எம்மிடம் இருந்தபோது மக்களுக்காக நாம் சாதித்துக் காட்டியவை ஏராளம் – ஊடக சந்திப்பி...
அமெரிக்க இராணுவப் படைத்தளம் வட – கிழக்கில் அமையப் போகின்றதா? - டக்ளஸ்; எம்.பி. கேள்வி!