அனுராதபுரம் சிறையில் சந்தேகநபர் தாக்குதல் பின்னணியில் அரசியல் காரணங்கள் உண்டா? சபையில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Tuesday, July 4th, 2017
அனுராதபுரம் சிறைச்சாலையில் சந்தேக நபர் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் சில சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவே மக்கள் மத்தியில் உணரப்பட்டு வருவதை இந்தச் சபையின் அவதானத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன். மேற்படித் தாக்குதல் செயற்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிய வருகின்ற நிலையில், இதன் பின்னணியில் ஏதேனும் அரசியல் காரணங்கள் உண்டா? என்பது குறித்து ஆராயப்பட  வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது கேட்டுக் கொண்டுள்ளார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், வாக்காளர்களைப் பதிவு செய்கின்ற விசேட ஏற்பாடுகள் சட்டமூலமானது 2009ஆம் ஆண்டு, மே மாதம் 18ஆம் திகதிக்கு முன்பதாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து வலுக்கட்டாயமாக இடம்பெயரும் நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள், தங்களது தொடக்க நிரந்தர வதிவிடங்கள் சார்ந்த தேர்தல் மாவட்டத்தில் வாக்குரிமைக்கான உரிமையைப் பிரயோகிப்பதற்கான நிலையை உறுதிப்படுத்துவதாக அமைகின்ற இந்தச் சட்டமூலமானது வரவேற்கத்தக்கதாக அமையப் பெறுகின்றது என்பதில் சந்தேகமில்லை.
இன்று எமது மக்களில் கணிசமான தொகையினர் இடம்பெயர்ந்த நிலையில் எமது நாட்டுக்குள்ளும், இந்தியா உட்பட வெளிநாடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.
இலங்கையினுள் இடம்பெயர்ந்து தற்போது நலன்புரி நிலையங்களிலும், உறவினர்கள், நண்பர் வீடுகளிலும், வாடகை வீடுகளிலுமாக வாழ்ந்து வருகின்ற பல ஆயிரக் கணக்கான மக்கள் இதுவரையில், மீளக் குடியேற்றப்படாத நிலை காணப்படுகின்றது. இதற்கு முக்கியக் காரணம், இம் மக்களது தொடக்க நிரந்தர வதிவிடங்களில் படையினர் மற்றும் காவல்த்துறையினர் நிலை கொண்டிருப்பதாகும்.
இம் மக்கள் தங்களது தொடக்க நிரந்தர வதிவிடங்களை விடுவிக்கக் கோரி அகிம்சை வழியிலான தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், இந்தப் போராட்டங்களுக்கு இதுவரையில் எவ்விதமான சாதகமான பதில்களும் கிடைக்காத நிலையே காணப்படுகின்றது. எமது மக்களது நிரந்தர வதிவிடங்களை விடுவித்துக் கொடுப்பதற்கு பொறுப்பானவர்கள், தங்களது பொறுப்புகளிலிருந்து தவறி வருவதானது, மிகவும் துரதிஷ;டவசமான நிலையாகவே காணப்படுகின்றது.
அந்த வகையில் மக்களது போராட்டங்கள் வீதிக்கு வரும் முன்பதாகவே, அம் மக்களது தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுக்க இயலாதவர்கள், அம் மக்கள் தமது தேவைகள் நிமித்தமாகப் போராட்டங்களை மேற்கொள்கின்ற நிலையில் அதனுள் புகுந்து கொண்டு தமது சுயலாப அரசியலை தொடரும் போக்குகளே காணப்படுகின்றன.
இத்தகைய நிலையில் பார்க்கின்றபோது, இந்த மக்கள் தங்களது வாக்குரிமைக்கான உரிமையை தங்களது தொடக்க நிரந்தர வதிவிடங்களில் மேற்கொள்ள இயலாத நிலையிலேயே இருந்து வருகின்றனர் என்பது குறித்தும் நாம் அவதானங்களைச் செலுத்த வேண்டும்.
அதே நேரம், இடம்பெயர்ந்து எமது நாட்டுக்குள் வாழ்ந்து வருகின்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களைப் போன்றே வெளிநாடுகளிலும் மேற்படி மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.  இந்த புலம்பெயர் மக்களுக்கும் எமது நாட்டில் இடம்பெறுகின்ற முக்கியத் தேர்தல்களின்போது வாக்களிப்பதற்கான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நான் தொடர்ந்தும் முன்வைத்து வருகின்றேன்.
அந்த வகையில், தற்போதைய நிலையில் சுமார் 10 இலட்சத்திற்கும் அதிகமான எமது மக்கள் புலம்பெயர்ந்த நிலையில், இந்தியா உட்பட வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.
மேற்படி மக்கள் எமது நாட்டிலிருந்து புலம்பெயர்ந்தபோது, எமது நாட்டில் வாக்களிக்கக் கூடிய வயதினை எட்டியிருப்பின், அவர்களுக்கு எமது நாட்டிலே நடைபெறுகின்ற ஜனாதிபதித் தேர்தல்கள், பொதுத் தேர்தல்கள் மற்றும் மாகாண சபைகளுக்கானத் தேர்தல்கள் போன்றவற்றில் வாக்களிக்கக்கூடிய வசதிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையே நான் வலியுறுத்தி வந்துள்ளேன்.
கடந்த கால யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் போன்றவை காரணமாகவும், ஏற்கனவே எமது பகுதிகளில் அபிவிருத்திச் செயற்பாடுகள் புறக்கணிக்கப்பட்டிருந்த நிலையிலும், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பல்வேறு அபிவிருத்தி நிலைகளை இன்னும் எட்ட வேண்டிய நிலையிலேயே உள்ளன. அதே நேரம், எட்டப்பட வேண்டிய அபிவிருத்தியானது எமது மக்களின் வாழ்வாதாரங்களுடன் தொடர்புடையதாக அமைய வேண்டிய கட்டாய நிலைமைகளும் காணப்படுகின்றன.
இத்தகையதொரு நிலையில் தற்போது குடியிருக்கும் மக்களின் தொகையினைப் பொறுத்தே மாவட்டங்களுக்கான நாடாளுமன்ற பிரதிநிதிகளின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படுவதால், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் நாடாளுமன்ற உறுப்பினர்களது தொகை குறைப்பு என்பது எமது பகுதியினதும், மக்களினதும் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கும், எமது பகுதிகளை மீளக் கட்டியெழுப்புவதற்கும் பெரிதும் பாதகமாகவே உள்ளது.
எனவே, நான் தொடர்ந்து வலியுறுத்தி வருவதைப் போல், புலம்பெயர் மக்களுக்கும் எமது முக்கியத் தேர்தல்களில் வாக்களிக்கக்கூடிய வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து இந்த அரசு அவதானம் செலுத்த வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன்.
நீதித்துறை ஒழுங்குகள் குறித்து இங்கு வாதப் பிரதிவாதங்கள் இடம்பெறுகின்ற நிலையில் சில கருத்துக்களைத் தெரிவிக்கலாமென விரும்புகின்றேன்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்ததாக தெரிவிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களில் ஐந்தாவது சந்தேக நபர் அனுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து சிறைச்சாலை காவலர்களால் அண்மையில் தாக்கப்பட்டுள்ளார் எனத் தெரிய வருகின்றது. இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் கடந்த 29ஆம் திகதி நீதிமன்ற வெளிநடப்பு செய்திருந்ததுடன், கௌரவ நீதி அமைச்சர் அவர்களுக்கு மகஜர் ஒன்றினையும் அனுப்பியுள்ளனர் எனவும் தெரிய வருகின்றது.
இத்தகைய சம்பவங்கள் வவுனியா சிறைச்சாலையிலும் தொடர்வதாகவே தெரிய வருகின்றது. கைதியொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவமும் வவுனியா சிறைச்சாலையில் ஏற்கனவே இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அனுராதபுரம் சிறைச்சாலையில் சந்தேக நபர் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் சில சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவே மக்கள் மத்தியில் உணரப்பட்டு வருவதை இந்தச் சபையின் அவதானத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.
மேற்படித் தாக்குதல் செயற்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிய வருகின்ற நிலையில், இதன் பின்னணியில் ஏதேனும் அரசியல் காரணங்கள் உண்டா? என்பது குறித்து ஆராயப்பட  வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
மேற்படி குறித்த நாடாளுமன்ற உறுப்பினரைக் கொலை செய்வதற்கு முயற்சித்ததாகக் கூறப்பட்டு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரம், குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் மீதான கொலை முயற்சி என்ற கதையில் எவ்விதமான உண்மைகளுமில்லை என அதே நாடாளுமன்ற உறுப்பினர் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற கட்சியின் இன்னுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்தச் சபையில் பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார்.
புனர்வாழ்வு அளிக்கப்பட்டதோடு வேறு எவ்விதமான வாழ்வாதார உதவிகளும் இன்றிய நிலையில் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள்  பலரும் மிகவும் பாதிக்கப்பட்டதொரு நிலையிலேயே இன்னமும் வாழ்ந்து வருகின்ற நிலையில், அவர்கள் மீதான பல்வேறு அதிகாரத் தரப்பினரது கெடுபிடிகள் மற்றும் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதையும் காணக்கூடியதாகவுள்ளது. எனவே, மேற்படி சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மைகள் கண்டறியப்பட்டு, வெளிப்படுத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
ஏனைய துறைகளிலிருந்து எமது நீதித்துறை விடுபட்டிருக்கின்றதா என்ற கேள்விக்கு இடமிருக்கக்கூடாது. விடுபட்டிருக்க வேண்டும். அதே நேரம், ஏனைய துறைகளிலிருந்து நீதித்துறை விடுபட்டிருந்தால் மாத்திரம் அதுவே நீதித்துறைச் சுதந்திரத்திற்கான உரிய, பூரண வழிமுறை எனக் கூறிவிட முடியாது. நீதித்துறையினைச் சார்ந்தோரும் சட்டத்தின் முன்னிலையில் சமமானவர்கள் என்ற நிலைப்பாடு நிலை நிறுத்தப்பட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டு விடைபெறுகின்றேன்.

Related posts: