அனுராதபுரம் சிறைச்சாலையில் பதற்றம்: தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
Saturday, March 21st, 2020அனுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகள்சிறைச்சாலையை உடைத்து தப்பிச்செல்ல முயன்றதால் அங்கு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதையடுத்து அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டுள்ள 4 பேர் இன்றையதினம் உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த கைதிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக சிறையிலிருந்த ஏனைய கைதிகள் சிறைச்சாலை கதவை உடைத்து தப்பிச்செல்ல முயற்சித்து களோபரத்தை ஏற்படுத்தியிருந்தனர்.
இந்த பதற்ற நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சிறைச்சாலை ஊழியர்கள் மற்றும் பொலிசார் முயற்சி செய்தபோதும் அது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்படாமையால் இராணுவம் வரவழைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சிறைச்சாலையை உடைத்து தப்பிச்செல்ல முயன்ற கைதிகளை கட்டுப்படுத்த இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்புகளும் ஏற்பட்டிருந்தன.
இதனால் சிறைச்சாலையில் கடும் பதற்றம் ஏற்பட்டதுடன் அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நிலைமை தொடர்பிலும் அவர்களது பாதுகாப்பு தொடர்பிலும் உறுதி செய்து தருமாறு அவர்களது உறவுகள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த சிறைச்சாலை தொடர்பான உயரதிகாரிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டதுடன் தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமைகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டதுடன் அவர்களது பாதுகாப்பை உறுதி செய்துகொள்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார்.
அத்துடன் அரசியல் கைதிகள் தொடர்பாக அவர்களின் உறவினர்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|