அந்நியச் செலாவணியில் பெரும் பங்களிப்பு செய்யும் மலையக மக்களுக்கு அனைத்து உரிமைகளும் உறுதிசெய்யப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கோரிக்கை!

19ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலப்பகுதியில் தமிழகத்திலிருந்து அழைத்து வரப்பட்டு, இலங்கையில் மலைசார்ந்த பகுதிகளில் குடியிருத்தப்பட்ட எமது மலையக மக்கள,; அரசியல் ரீதியில் உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாக இன்றும் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்தவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.
இந்த மக்கள் அடைக்கலம் நாடி இங்கு வந்தவர்கள் அல்லர். இந்த நாட்டின் முதுகெலும்பாக இருக்கின்ற – அக்கால கட்டத்திலிருந்து இன்று வரையில் இந்த நாட்டுக்கு அந்நியச் செலாவணியில் பாரியதொரு பங்களிப்பினை வழங்கி வருகின்ற பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைகளில் ஈடுபடுத்துவதற்கென்றே அழைத்து வரப்பட்டவர்கள். இதனை நாங்கள் மறந்துவிடக் கூடாது.
எனவே, இந்த மக்களுக்கு உரிய நன்றிக் கடனை – அம் மக்களுக்கான நிம்மதியான – இந்த நாட்டின் ஏனைய மக்களுக்கு சமாந்திரமான அனைத்து உரிமைகளையும் வழங்குவதனால் மட்டுமே சாத்தியமாகக் கூடிய நன்றிக் கடனை செலுத்த வேண்டியது இந்த நாட்டின் பொறுப்பாகும் – கடமையுமாகும். இதில் மறுபேச்சுக்கு இடமில்லை என்பதை இங்கு வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நடைபெற்ற பெருந்தோட்டப் பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை, பிரதேச சபைகள் மற்றும் இலங்கை ஆளணி முகாமை நிறுவகம் தொடர்பிலான சட்டமூலங்கள் குறித்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|