அநாவசிய நிறை கழிவுகளுக்கு நிரந்தரமாக விடை கொடுப்போம் – விவசாயிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் உறுதி !

வாழைக் குலை உட்பட விவசாய உற்பத்திக்களை கொள்வனவு செய்யும் போது கடைப்பிடிக்கப்படும் நிறை கழிவுகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவை ஊடாக குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட விவசாயிகள், தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அண்மையில் சந்தித்து கலந்துரையாடிய போதே இதனைத் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில், வாழை குலைகள் உட்பட விவசாய உற்பத்திகளை விவசாயிகளிடம் கொள்வனவு செய்கின்ற போது ஒவ்வொரு பத்து கிலோவிற்கும் ஒரு கிலோ வியாபாரிகளினால் கழிக்கப்படுவது தொடர்ந்து கொண்டிருப்பதை விவசாயிகள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
மேலும், வடக்கு மாகாணத்தில் மாத்திரம் கடைப்பிடிக்கப்படும் குறித்த நடைமுறையை நிறுத்துமாறு அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த விவசாய அமைச்சர் அறிவுறுத்திய போதிலும் தொடர்ந்தும் வியாபாரிகளினால் குறித்த நிறை கழிவு நடைமுறைப்படுத்துவதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புலிகளின் காலப் பகுதியில் உருவாக்கப்பட்ட நிறைக் கழிவு செயற்பாடு இன்னும் தொடர்வதை அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தார்.
மேலும், குறித்த விடயத்தை எழுத்து மூலமாக சமர்ப்பிக்குமாறும் அதனை அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வந்து, விவசாய உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கு கடைபிடிக்கப்படும் அனைத்து விலைக் கழிவுகளுக்கும் நிரந்தர தீர்வைப் பெற்றுத் தருவதாகவும் தெரிவித்தார்.
குறித்த சந்திப்பின்போது கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் வடமாகாண விவசாய பணிப்பாளர் சிவகுமார் மற்றும் கட்சியின் வலி கிழக்கு நிர்வாக செயலாளர் இராமநாதன் ஐங்கரன் அகியோர் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|