அதி வேகப் பாதைகள் அமைக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் வாகன நெரிசல்கள் குறைந்துள்ளனவா? – டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Tuesday, July 9th, 2019

அதி வேகப் பாதைகள் நாட்டில் அமைக்கப்பட்டதன் பின்னர், நாட்டில் வாகன நெரிசல்கள் குறைந்துள்ளனவா? என்ற கேள்வி எழுகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் குறைநிரப்பு மதிப்பீடு, தீவிர பொறுப்பு முகாமைத்துவ சட்டத்தின் கீழான பிரேரணை மற்றும் உற்பத்தி வரி விஷேட ஏற்பாடுகளின் கீழான கட்டளைகள் தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலிருந்து லோங் தீவுக்கு  1908ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, 1911ஆம் ஆண்டு நிறைவு செய்யப்பட்ட தனியாருக்குச் சொந்தமான 110  கிலோ மீற்றர் நீளமான அதிவேகப் பாதையே உலகின் முதலாவது அதி வேகப் பாதையாகக் கருதப்படுகின்றது.

அது முதற் கொண்டு உலக நாடுகள் பல அதிவேகப் பாதைகளை அமைத்துக் கொண்டுள்ள போதிலும்,  அதன் மூலமாக வாகன நெரிசல்களை கட்டுப்படுத்துவதற்கு இயலும் என்று கொள்ளப்பட்ட எதிர்ப்பார்ப்புகள் எதிர்மறையான விளைவுகளையே கொண்டு தந்து கொண்டிருப்பதால், மேம்பால நெடுஞ்சாலைகள் அமைக்கும் திட்டம் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது. ஆயினும் இந்த முறைமையும் குறித்த வெற்றியை ஈட்டிக் கொள்வதற்கு இயலாது போயுள்ள நிலையில்,  இப்போது பல நாடுகள் நிலக்கீழ் பாதைகளை அமைப்பதற்கு நாட்டங் கொண்டு வருகின்றன காலகட்டத்தில் இங்கே கடுகதி நெடுஞ்சாலைகள் அமைக்கின்ற திட்டம் குறித்து விவாதித்துக் கொண்டிருக்கின்றோம்.

இத்தகைய கடுகதி நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி ஏற்பாடுகளின் போது, அந்தப் பகுதிகளிலே வாழ்கின்ற மக்கள் முகங்கொடுக்க நேரிடுகின்ற பிரச்சினைகளும், அந்தந்தப் பகுதிகள் சூழல் ரீதியிலாக முகங்கொடுக்கின்ற இடர்பாடுகளும் ஏராளமானவை என்பது பலரும் அறிந்த விடயமாகும்.

கடந்த, அண்மைய காலங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போதுதான் தெற்கு கடுகதி நெடுஞ்சாலை மூலமான பாதிப்புகள் சுமார் 300க்கும் மேற்பட்ட மனித உயிர்கள் காவு கொள்ளப்பட்டதன் பின்னர் நாட்டு மக்களுக்குத் தெரிய வந்திருந்தது.

இன்றும்கூட உத்தேச கடவத்தை – கெரவலப்பிட்டிய வெளிச் சுற்று நெடுஞ்சாலைப் பணிகளுக்கென மழை நீர் கடலில் கலக்கக்கூடிய முத்துராஜவெல தரிசு நிலத்தில் ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலம் நிரப்பப்பட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில், இது கொழும்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் வெள்ள அனர்த்த அச்சுறுத்தலையே கொண்டிருப்பதாக சூழலியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அதேபோன்று மத்திய கடுகதி நெடுஞ்சாலை அமைப்பதற்கென 125 கிலோ மிற்றர் தூரத்திற்கு சுமார் 3 கோடி 45 இலட்சம் கன மீற்றர் மண் நிரப்பப்பட வேண்டியுள்ளதாக அறிய முடிகின்றது. இந்தப் பகுதிகள் நீர் ஆதாரங்களைக் கொண்ட பகுதிகள் பலவற்றினை உள்ளடக்குகின்றன. இதனால் ஏற்படக்கூடிய சூழல் பாதிப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல. வறட்சியும், அதே மடங்கு வெள்ள அனர்த்தங்களும், சூழல் சமநிலை இன்மையும் பாரியளவில் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

மண் மேடுகள் அமைத்து இத்தகைய நெடுஞ்சாலைகள் அமைக்கின்ற முறைமையானது உலகில் எந்தவொரு நாட்டிலும் இல்லாத ஓர் ஏற்பாடகவே இருப்பதாக சூழலியலாளர்கள் கூறுகின்றனர்.

மேலும், இத்தகைய பாதிப்புகள் மட்டுமல்லாது, இத்தகைய நெடுஞ்சாலைகள் காரணமாக மக்கள் தங்களது வாழ்விடங்களை, வாழ்வாதார இடங்களை விட்டும் இடம்பெயர வேண்டிய நிலைமைகள் ஏராளமாகவே இடம்பெறுகின்றன. அதற்கான இழப்பீடுகள் அம்மக்களுக்கு வழங்கப்படுவதாகக் கூறப்பட்டாலும் அவை போதியளவில் இல்லாமையும், அவர்களது மீள் வாழ்க்கைக்கு அம்மக்கள் எதிர்நீச்சல் போட வேண்டிய நிலைமைகள் ஏற்படுவது தொடர்பில் அவதானங்கள் செலுத்தப்படுவதில்லை.

ஜப்பான் ஒசாகா நகரில் மேம்பால நெடுஞ்சாலை ஒன்று 16 மாடிகளைக் கொண்ட ஒரு கட்டிடத்தின் 5ஆம் மாடியால் செல்கின்றது. குறிப்பிட்ட இந்த நெடுஞ்சாலை அமைப்பதற்கு இந்த 16 மாடி கட்டிடம் தடையாக இருந்ததால் அதனை அகற்ற அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு அக்கட்டிட உரிமையாளர் இடங்கொடுக்காத காரணத்தால், இறுதியில் இரு தரப்பினரும் ஓர் உடன்படிக்கைக்கு வந்து, அந்தக் கட்டிடத்தை அகற்றாமல் அதன் 5ஆம் மாடியின் ஊடாக அந்த நெடுஞ்சாலை செல்லக்கூடிய வகையில் அமைத்துள்ளனர் என்ற விடயத்தை இங்கே அபிவிருத்திகள் என வருகின்றபோது, ஒரு உதாரணம் என்ற வகையில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

எனவே, எமது நாட்டின் தன்மைக்கு பொருந்துகின்ற வகையில், எதிர்காலத்தில் அதிவேக ரயில் பாதைக் கட்டமைப்புகளை விரிவுபடுத்துவதற்கும், அதனுடன் இணைந்ததான மேம்பால இணைப்பு வீதிகளை அமைபதற்குமான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் உரிய அவதானங்கள் செலுத்தப்பட வேண்டும் என்ற விடயத்தை மேலும் இங்கே வலியுறுத்த விரும்புகின்றேன்.

Related posts:

கிடைக்கின்ற வாய்ப்புக்களை மக்களின் நலனுக்காக செயற்படுத்துங்கள்  - கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாகிகள் ...
முல்லைத்தீவு செம்மலைப் பகுதி மக்களின் வாழ்வாதார நிலைமையினை அவதானத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்து உதவ ...
யாழ் பல்கலை முகாமைத்துவ உதவியாளர் வெற்றிடங்கள் சுற்றறிக்கையின் பிரகாரமா நிரப்பப்படுகின்றன.– நாடாளுமன...

13ஆவது திருத்தச் சட்டத்தினூடாகவே நிலையான தீர்வை பெற்றுக்கொள்ளமுடியும் - டக்ளஸ் தேவானந்தா
வடக்கில் புனரமைக்கப்படாதுள்ள மீன்பிடித் துறைமுகங்களின் புனரமைப்பு தொடர்பில் விரைவான நடவடிக்கைள் மேற்...
முன்மொழிவுகள் யாவும் நாட்டினதும் எதிர்கால சந்ததியினரதும் நலன் கருதியே வகுக்கப்பட்டுள்ளன – அமைச்சர் ...