அடையாள அட்டை வழங்கும் வேலைத் திட்டத்தை இலகுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா அவையில் கோரிக்கை!
Wednesday, August 23rd, 2017ஸ்மாட் ஆள் அடையாள அட்டை வழங்கும் வேலைத் திட்டத்தை இலகுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்களுக்கு மொழிச் சிக்கல்கள் ஏற்படாதவாறு குறித்த ஆள் அடையாள அட்டைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆட்பதிவுச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
1954ஆம் ஆண்டில் ஸ்ரீ ஜவஹர்லால் நேரு அவர்களுக்கும், சேர் ஜோண் கொத்தலாவல அவர்களுக்கும் இடையில் செய்யப்பட்ட இந்திய, இலங்கை ஒப்பந்தத்திலேயே இலங்கைப் பிரஜைகளின் பதிவேடு ஒன்றைப் பேணுவதற்கான முதல் அத்திவாரம் இடப்பட்டது.
இது தொடர்பான சட்டமூலம் 1962ஆம் ஆண்டில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையாரின் ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போதும் மறைந்த பிரதமர் டட்லி செனனாயக்க அவர்களே அச் சட்ட மூலத்தைத் திருத்தி 1968ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இது 1968ஆம் ஆண்டின் 32ஆம் இலக்க ஆட்பதிவுச் சட்டமாக இயற்றப்பட்டது.
இச்சட்டமூலம் செயற்படத் தொடங்கியது 1971ஆம் ஆண்டு ஏப்பிரல் 5ஆம் திகதியாகும். இலங்கையின் அரசியல் வரலாற்றில் இது ஒரு முக்கியமான தினமாகும். இருப்பினும் 1971ஆம் ஆண்டு ஒக்ரோபர் 1ஆம் திகதியிலிருந்து ஆள் அடையாள அட்டைத் திணைக்களம் செயற்படத் துவங்கியது. அத் திணைக்களத்தின் முதலாவது ஆணையாளர் காலஞ்சென்ற ரி.பி.எம்.ஏகநாயக்க அவர்கள் ஆவார். அவரே ஆள் அடையாள அட்டை வழங்குவதற்கான விதிகள் அடங்கிய முதற் கைநூலைத் தயாரித்து 1977ஆம் ஆண்டு ஏப்பிரல் 5ஆம் திகதி வெளியிட்டார். அக் கைநூலில் ஏகநாயக்க அவர்கள் எழுதிய அறிமுக உரையை இளஞ்சமுதாயத்தினர் அறிந்து கொள்வதற்காக இச் சபையில் சமர்ப்பிக்கின்றேன்.
1971ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை ஏறாத்தாள 16 மில்லியன் அடையாள அட்டைகளைத் திணைக்களம் வழங்கியுள்ளது என்று அறியவருகின்றது. ஆரம்பத்தில் 18 வயதை அடைந்தவர்களுக்கே முதலில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. இவ் அட்டைகள் பரீட்சை எழுதுதல், வங்கிக் கொடுக்கல் வாங்கல்கள், தேர்தல்களில் வாக்களித்தல், கடவுச்சீட்டுக்கள் பெறுதல் ஈறாக வாழ்க்கையில் இடம்பெறும் அனைத்துக் கொடுக்கல் வாங்கல்களுக்கும் ஆதாரமான அடிப்படை ஆவணமாக கருதப்படுகின்றது. இன்று வீதி விபத்துக்கள் நடந்தால் வைத்திய சாலைகளில் நோயாளிகளை அனுமதித்தல், பொலிசாரின் குற்றத் தடுப்;பு நடவடிக்கைகள், வழக்குத் தொடருதல் போன்ற நடவடிக்கைகளுக்கும் ஆள் அடையாள அட்டைகள் அத்தியாவசியமாக உள்ளது.
1971ஆம் ஆண்டில் இருந்து கையினால் எழுதி வழங்கப்பட்ட அட்டைகள் பின்னர் தட்டச்சு இயந்திரம், கணனி என்பவற்றைப் பயன்படுத்தி தயாரித்து வழங்கப்பட்டன. இவ்வட்டைகள் நாளாந்தப் பயன்பாடு காரணமாக இலகுவாக பழுதடைந்த காரணத்தினாலும், கைதவறிவிடுவதனாலும் அடிக்கடி புதுப்பிக்கும் தேவையொன்று மக்களுக்கு ஏற்பட்டது.
இதை நிவர்த்திக்கும் முகமாகவும் நவீன முறையில் ஸ்மாட் சிப் பொருத்திய ஆள் அடையாள அட்டைகளை மக்களுக்கு வழங்குவதற்கு வழிவகை செய்யும் முகமாக ஒழுங்கு விதிகள் இச் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதை வரவேற்கின்றோம்.
ஸ்மாட் சிப் அட்டைகளை 2017ஆம் ஆண்டு ஒக்டோபரில் இருந்து வழங்கப்படவுள்ளதாகவும் அறிய வருகின்றோம். இதன்; ஆரம்பக் கட்டமாக 15 வயதைப் பூர்த்தி செய்து முதல் தடவையாக அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கும், காணாமற்போன அடையாள அட்டைகளை மீளப்பெறுபவர்களுக்கும், அடையாள அட்டையில் திருத்தங்களுக்காக விண்ணப்பித்தவர்களுக்கும் ஸ்மாட் சிப் அட்டைகளை முதற்கட்டமாக வழங்கவுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
இரண்டாம் கட்டமாக 2018ஆம் ஆண்டிலிருந்து கைவிரல் அடையாளம், புகைப்படம், உயிரியல் தகவல்களை உள்ளடக்கிய ஸ்மாட் அட்டைகளை இச் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட ஒழுங்கு விதிகளின் கீழ் மக்களுக்கு வழங்குவதற்கு ஒழுங்கு செய்யப்படுவது காலத்தின் கட்டாயத் தேவையாகும்.
இரண்டாம் கட்ட நடவடிக்கைகளுக்கு கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக விண்ணப்பப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிய வருகிறது. ஆள் அடையாள அட்டைகள் வழங்கப்படுவதான இந்தப் பரிணாம வளர்ச்சி வரவேற்கத்தக்கதே. இருப்பினும் ஏறத்தாள 15 மில்லியன் மக்களுக்கு ஸ்மாட் அட்டைகளை வழங்குவதற்கு போதிய முன் ஆயத்தங்களை ஆட்பதிவுத் திணைக்களம் செய்ய வேண்டும்.
விண்ணப்பப் படிவங்களில் தகவல்களை நிரப்புவது, புகைப்படம் எடுப்பது, சான்றுப்படுத்துவது போன்ற விடயங்கள் இலகுபடுத்தப்பட வேண்டும். பாதுகாப்பாகச் செய்யப்படல் வேண்டும். விரைவாகச் செய்யப்படல் வேண்டும். புகைப்படம் எடுப்பதற்கு எல்லாக் கிராமங்களிலும் உள்ள புகைப்படம் எடுக்கும் நிலையங்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும்.
இதற்கு ஏதுவாக இத்திணைக்களம் 09 மாகாணங்களிலும் மாகாணக் கிளைகளையும் 25 மாவட்டங்களிலும் மாவட்டக் கிளைகளையும் பிரதேச செயலர் பிரிவுகளில் அப் பிரிவுக்குப் பொருத்தமான பிரிவுகளையும் நிறுவி ஆள் அடையாள அட்டை வழங்கும் வேலைத் திட்டத்தை இலகுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்களுக்கு மொழிச் சிக்கல்கள் ஏற்படாதவாறு ஆள் அடையாள அட்டைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கின்றேன்.
இங்கு சமர்ப்பிக்கப்பட்ட ஒழுங்கு விதிகளில் ஆள் அடையாள அட்டை பெறுவதற்கான, திருத்துவதற்கான, பதிலீட்டு அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்படிவம் மிகவும் சிக்கலான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சாதாரண மக்கள் இதை பூரணப்படுத்துவதற்கு படித்தறிந்தவர்களின் உதவியையோ அல்லது இடைத் தரகர்களின் உதவியையோ நாடி சிரமப்பட வேண்டிய நிலை ஏற்படலாம். இலங்கையில் அரச நிர்வாகத்தில் உள்ள பாரிய குறைபாடானது விண்ணப்பப்படிவங்களில் தேவையற்ற கேள்விகளைக் கேட்டு பிரச்சினையை சிக்கல் படுத்துவதாகும். முன்னொரு பொழுது அரச மொழித் திணைக்களத்தின் கீழ் படிவங்கள் தயாரிக்கும் குழு ஒன்று இயங்கியது அவர்களின் முக்கியமான பணி, மொழி பெயர்ப்பு மட்டுமல்ல, படிவங்களை மக்கள் இலகுவாகப் பூர்த்தி செய்வதற்கு ஏற்றவகையில் தயாரிப்பதுமாகும். ஆள் அடையாள விண்ணப்பப்படிவங்கள் தொடர்பாக அக்குழுவினரின் ஆலோசனைகள் பெறப்பட்டனவா?
தற்சமயம் ஒழுங்குவிதிகளுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ள படிவம் மிக நீண்டதாக இருப்பதற்கான இன்னொரு காரணம், குடும்ப அங்கத்தவர்கள் அனைவரின் தகவல்களையும் கோருவதாகும். ஒரே குடும்பத்தில் இருவர் விண்ணப்பிக்கும்போது இருவரும் அக்குடும்பத்தின் விபரங்களை விண்ணப்பிக்க கோரப்படுகின்றார்கள். இது அடையாள அட்டைகளைத் தயாரித்து விநியோகிப்பதில் கால விரையத்தை ஏற்படுத்தும். இவ்வாறு தகவல்களைக் கூறுவதற்கான காரணம் பதிவுசெய்யப்பட்ட பிரஜைகளின் மத்திய தரவு நிலையம் ஒன்றை ஆள் அடையாள திணைக்களத்தின் கீழ் ஏற்படுத்துவற்காக என்று தெரியவருகின்றது.
ஆனால் இதே விதமான தரவுகளை தேர்தல் ஆணைக்குழுவும் வாக்காளர்களின் மத்திய தரவு நிலையம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, வாக்காளர் பதிவு விண்ணப்பத்தில் முழுக் குடும்பத்தின் வாக்காளர்களின் விபரங்களைக் கோருகின்றனர். மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதற்காகவும், நாளாந்த வேலைகளில் தங்களுடைய அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காகவும், தேவைக்கு அதிகமான அந்தரங்கமான தகவல்களை விண்ணப்பப் படிவங்களில் பூர்த்தி செய்யப்பட வேண்டிய சட்ட நிற்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தனிநபர்களின் அந்தரங்கத் தகவல்கள் அரச நிறுவனங்களின் கைகளில் சேகரித்து வைக்கப்படும் பொழுது, அத் தகவல்கள் வேறுநபர்கள், நிறுவனங்களின் கைகளுக்குப் போய்ச் சேராமல் பாதுகாப்பாக பேணப்பட வேண்டும். ஆள் அடையாள அட்டைத் திணைக்களத்தின் ஊழியர்கள் ஏதேனும் மோசடியான முறையில் ஒருவரின் தகவலை வெளியாருக்கு சட்டவிரோதமாக வழங்கும்போது அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை ஆட் பதிவுச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ளதா? அமைச்சர் அதை விளக்க வேண்டும்.
நான் அறிந்தவரையில் லோ ஒவ் பிரைவேசி தனி நபர்களின் சுய அந்தரங்கத் தகவல்களை பாதுகாப்பதற்கான தனியான சட்டமொன்று இலங்கைச் சட்டத்தில் இடம்பெறவில்லை. விண்ணப்பதாரி அரசையும், அரசாங்கத்தையும் நம்பியே தம்முடைய அந்தரங்கத் தகவல்களை விண்ணப்பத்தில் பதிவு செய்கின்றார்கள். ஆகவே அத் தரவுகள் பாதுகாக்கப்பட வேண்டும். பொதுவாக இலங்கையில் அத்தரவுகளைப் பாதுகாப்பதற்காக தகவல்கள்; 2000ஆம் ஆண்டின் தொழில்நுட்ப திருத்தச் சட்டம் 2008ஆம் ஆண்டின் தொழில்நுட்ப தகவல் (திருத்தம்) சட்டத்தினால் பிரிவு 43ஏ, பிரிவு 72ஏ களில் ஓரளவு பாதுகாப்பதற்கு வழிவகைகள் செய்யப்பட்ட போதும், இப்பிரிவுகளின் ஏற்பாடுகள் ஆள் அடையாள அட்டைத் தரவுகள் மோசடியான முறையில் பயன்படுத்தப்படுவதை முழுமையாக பாதுகாக்குமா? என்பதை அமைச்சர் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.
30 வருட உள்நாட்டுப் போரினால் மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு உள்நாட்டில் வெவ்வேறு இடங்களுக்கு இடம்பெயர வேண்டி ஏற்பட்டது. அவர்களின் பிறப்பு, இறப்பு, விவாக சான்றிதழ்கள் அக்காலத்தில் சேதமடைந்தன, கைதவறிப் போகவிடப்பட்டன எனவே அவற்றிற்குத் தேவையான பதிலீட்டு ஆவணங்களை குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்களுக்கும் ஏனையவர்களுக்கும் சிரமங்கள் ஏதும் இன்றி வழங்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும். நான் ஏற்கனவே இங்கு சுட்டிக்காட்டிய சட்டச் சிக்கலினால் எமது மக்களுக்கு பாதுகாப்பற்ற தன்மை ஏற்படுமா? என்ற சந்தேகம் எனக்கு உண்டு. லோ ஒவ் பிரைவேசி (டயற ழக pசiஎயஉல) சம்மந்தமான இச்சட்டச் சிக்கலைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கௌரவ பிரதமர் அவர்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.
யுத்த காலத்தில் ஏற்பட்ட இடம் பெயர்வுகளாலும், உறுதிப்படுத்தும் வசதி வாய்ப்பு இல்லாத காரணத்தினாலும், ஆள் பதிவு மற்றும், அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கான விழிப்புனர்வு வழிகாட்டல்கள் போதுமான அளவில் செய்யப்படாததால், அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளாமலும், அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமலும் இருந்து விட்டவர்களும், தமது அடையாள அட்டைகளை இலகுவாகப் பெற்றுக்கொள்வதற்கு வசதியாக ஆட்பதிவுத் திணைக்களம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர் சேவைகளை நடத்தி உதவ வேண்டும்.
யுத்தம் முடிவுக்கு வந்து 8 ஆண்டுகள் கடந்துவிட்ட போதும் இயல்பு வாழக்கைக்கு திரும்பிக் கொண்டு இருக்கும் மக்கள் பல்வேறு நாளாந்தப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேருகின்ற காரணத்தினால் அவர்கள் அத்தியாவசியமான இந்த ஆவணத்தைப் பெற்றுக்கொள்வதில் உள்ள ஆர்வம் தளர்ச்சியடைந்த நிலையில் இருப்பதாகத் தெரிகின்றது. எனவே அவர்கள் மத்தியிலும் ஆள் அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஊக்குவிப்புகளையும், வழிகாட்டல்களையும், ஆட்பதிவுத் திணைக்களம் கள நிலைக்குச் சென்று முன்னெடுக்க வேண்டும் என்றும் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இப் பாரிய வேலைத் திட்டத்திற்கு குறித்த பிரதேச சபை, பிரதேச செயலர் பிரிவு, மாவட்டம், மாகாணங்களில் இருந்து ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு தேவைப்படும் ஆளணியினரை உள்@ர் மட்டத்தில் தெரிவு செய்து அடையாள அட்டைத் திட்டத்தை விரைவாகச் செயற்படுத்த அதிகாரிகளுக்கு கட்டளையிடுமாறும் அமைச்சர் எஸ்.பி நாவின்ன அவர்களை கேட்டுக்கொள்கின்றேன்.
Related posts:
|
|