‘விக்கி’லீக்ஸ்!

Saturday, March 5th, 2016

உலகெங்கும் இருக்கும் தனது தூதரகங்களுடன் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நடத்திய இரகசிய மின்னஞ்சல் பரிவர்த்தனைகளை அம்பலப்படுத்தியதன் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ‘விக்கிலீக்ஸ்’. அதன் அதிர்வுகள் இன்னும் சர்வதேச அரசியலில் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

அந்த விக்கிலீக்ஸ் போல இலங்கையின் வடக்கு  – கிழக்குத் தமிழர்களின் அரசியலிலும் சில ‘விக்கிலீக்ஸ்’ இரகசியக் கசிவுகள் இப்போது வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. அது வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கியின் செயற்பாடுகள் குறித்து கசியத் தொடங்கியுள்ள சில புதினங்கள்தான். அப்படி முதல்வர் விக்கி குறித்து ‘லீக்’ ஆகும் (கசியும்) ‘விக்கிலீக்ஸ்’ தகவல் என்ன வென்று சற்று விரிவாகப் பார்ப்போம்….

முதல்வர் விக்கியின் ஏற்பாட்டில் தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டதும் அந்த அமைப்பு அவசரஅவசரமாகக்கூடி அரைப் பிரசவமாகவும் குறைப் பிரசவமாகவும் இனப் பிரச்சினைக்கான யோசனைத் திட்டம் ஒன்றை குறுகிய காலத்தில் வெளியிட்டமையும் தெரிந்த விடயங்கள்தாம்.

இந்தத் தீர்வு யோசனை நகல் திட்டத்தின் செய்திகள் பிரசுரிக்கப்பட்ட போதிலும் அது குறித்து புலம்பெயர் மக்கள் மத்தியில் ஆரவாரம் இடம்பெற்ற போதிலும் அந்த நகர்வு இராஜதந்திர மட்டத்தில் பெரிதும் கவனத்தில் எடுக்கப்படாத அலட்டிக் கொள்ளப்படாத விடயமாக முடிந்து போய்விட்டது என்கின்றன கொழும்பு வட்டாரங்கள்.

“இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் யுத்தக் குற்றங்கள் போன்றவை குறித்து சர்வதேச விசாரணைதேவை என்று வடக்கு மாகாண முதல்வர் விக்கினேஸ்வரன் தலைமையிலான வடக்கு மாகாணசபை திடீரென – அதிரடியாக – தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியபோது அந்த விவகாரம் கொழும்பு இராஜதந்திர வட்டாரங்களில் மிகப் பரபரப்பான விடயமாகப் பேசப்பட்டது. அதன் அதிர்வு நீண்ட நாளைக்கு கொழும்பில் நீடித்தது. ஆனால் விக்கியின் தமிழ் மக்கள் பேரவை ஸ்தாபிப்பும் அதன் செயற்பாடுகளும் தீர்வு நகல் யோசனை வெளியீடும் கொழும்பில் இராஜதந்திர வட்டாரங்களிலும் சரி  – தேசிய மட்டத்தில் அரசியல் தலைமைகள் இடையேயும் சரி – எந்தச் சலசலப்பையுமே ஏற்படுத்தவில்லை” – என்று மிகத் தெளிவாகக் கூறுகின்றார் பக்கத்து நாட்டின் மிக முக்கிய இராஜதந்திரி ஒருவர்.

இலங்கை விடயத்தில் தமது நாட்டின் சார்பில் முக்கிய பங்களிப்பை வழங்கும் அல்லது தீர்க்கமான சில தீர்மானங்களை வரையறை செய்யும் அதிகாரத்தில் இருக்கும் அந்த இராஜதந்திரி மற்றொரு விடயத்தையும் சுட்டிக்காட்டினார்.

“நாட்டின் சுதந்திர தின நிகழ்வின்போது தமிழில் தேசிய கீதம் இசைப்பட்டது. அதற்கு தமது பிரதிபலிப்பாக – நல்லெண்ண வெளிப்பாடாக – முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மதவேறுபாடுகளை மறந்து யாழ்ப்பாணம் நாக விகாரைக்குச் சென்று வழிபாடு செய்தார். அந்தச் செய்திக்கு தென்னிலங்கை ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம் முதல்வர் விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு யோசனை நகல் திட்டத்தின் வெளியீடு பற்றிய தகவல்களுக்குக் கொடுக்கப்படவேயில்லை. தென்னிலங்கையில் சிங்கள ஆங்கில ஊடகங்கள் பல அப்படி ஒரு தீர்வு யோசனை வடக்கில் – யாழ்ப்பாணத்தில் – பரபரப்பாக வெளியிடப்பட்டது என்ற செய்தி குறித்து மூச்சுக் கூட விடவில்லை.” – என்று சுட்டிக் காட்டினார் அவர்.

முதல்வர் விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் பேரவை தொடர்பான செயற்பாடுகளை இராஜதந்திர வட்டாரங்கள் – மட்டங்கள் – சந்தேகத்துடன்தான் நோக்குகின்றன. அதுதான் இதற்குப் பிரதான காரணம் என்று விளக்கமளிக்க முயல்கிறார் அந்த இராஜதந்திரி.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தருக்கும் முதல்வர் விக்கினேஸ்வரனுக்கும் இடையில் உண்மையில் கருத்து முரண்பாடுகள், அரசியல் பிணக்கு நிலை இருக்கின்றது என்று நீங்கள் நம்புகின்றீர்களா?” – என்று கேட்ட அவர் அடுத்து கூறிய தகவல் அதிர்ச்சி தருவதாக இருந்தது.

“இருவருமே சேர்ந்து – திட்டமிட்டு – அரசியல் காய்நகர்த்தல்களைச் செய்கின்றார்கள் என்றுதான் நாங்கள் கருதுகின்றோம்.” – என்று மிக உறுதியாகச் சொன்னார் அவர்.

“இலங்கை அரசியலில் இன்று ‘கிழட்டு நரி’ (ழுடன குழஒ) சம்பந்தர்தான்.” – என்பதை கண்களைச் சிமிட்டியபடி நக்கலாக எடுத்துக் கூறிய அவர் தமது நிலைப்பாட்டுக்கு ஆதாரமான சில தகவல்களையும் வெளிப்படுத்தினார்.

“முதல்வர் விக்கிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இரண்டாம் மட்டத் தலைவர்கள் சிலருடன் கருத்து முரண்பாடு – கோபதாபங்கள் – இருக்கலாம். ஆனால் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தருடன் மிக உச்ச மரியாதையுடனேயே அவர் பழகுகின்றார்; கருத்து வெளிப்படுத்துகின்றார். எந்த இடத்திலும் சம்பந்தரைப் பாதிக்கும்  விதமான கருத்துக்களை அவர் வெளியிடுவதே இல்லை. ஏன், அண்மையில் யாழ்ப்பாணம் நாகவிகாரைக்குச் சென்று தாம் வழிபாடியற்றியமை குறித்துத் தமக்கு நெருக்கமான தரப்புகளுக்கு கருத்து வெளியிட்ட முதல்வர் விக்கி சம்பந்தரின் பிறந்த நாளை ஒட்டி அவருக்காகப் பிரார்த்தனை செய்யவும் அந்த வழிபாட்டைத் தாம் பயன்படுத்திக் கொண்டார் எனக் கூறினார் என்று தமிழ் ஊடகம் ஒன்றில் செய்தி கசிந்திருந்தது.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்து சம்பந்தரின் தலைமையைப் பலவீனப்படுத்த வேண்டும் என்று விக்கி நினைப்பராயில் அவர் அதனை எப்போதோ செய்திருக்கலாம். செய்யவில்லை; செய்யவும்மாட்டார். இருவருக்கும் இடையில் முரண்பாடு உச்சத்திலிருப்பது போல வெளியில் தோன்றினாலும் இருவரும் ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில் செயற்படுகின்றார்கள் என்றே நாம் நம்புகின்றோம்.

“தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் முதல்வர் விக்கிதான். இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அந்த அமைப்பின் நகல் யோசனைத் திட்டத்தை வெளியிட்டு வைத்தவரும் அவர்தான். ஆனால் அதிலும் ஒரு விடயத்தை அவர் நாசூக்காகக் கையாண்டிருப்பதைக் கவனியுங்கள். அந்த யோசனை நகல் தமக்கு உடன்பாடானது என்றோ அல்லது அதன் தயாரிப்பில் தான் சம்பந்தப்பட்டார் என்றோ காட்டாமல் விக்கி ஒதுங்கிக் கொண்டுள்ளார். அதில் அடங்கியுள்ள விடயங்களுக்கும் தமக்கும் சம்பந்தமே இல்லை என்பதை வெளிப்படுத்துவதில் அவர் தெளிவாகவும் இருக்கின்றார்.

“அதாவது இனப்பிரச்சினைக்குத் தீர்வாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை எதிர்காலத்தில் முன் வைக்கக்கூடிய – அல்லது இணங்கி வரக்கூடிய – ஒரு திட்டத்துக்கு மாற்றான அல்லது வேறுபாடான ஒரு திட்டத்தைத் தான் முன்வைத்தார் என்ற பெயர் – பழி – தமக்கு வந்துவிடக்கூடாது என்பதில் முதல்வர் விக்கி மிகக்  கவனமாக இருக்கின்றார்.” – என்று குறிப்பிட்ட அந்த இராஜதந்திரி, தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகளைத் தாங்கள் உன்னிப்பாக நோக்கி வந்தனர் என்றும் அதன் மூலம் தெரிய வந்த சில தகவல்கள் முக்கியமானவை என்றும் சொன்னார்.

தமிழ் மக்கள் பேரவை ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் அதன் தீர்வுத் திட்டத்துக்கான நகல் யோசனை ஒன்றைத் தயாரிப்பதற்கு நிபுணர்களைக் கொண்ட உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டது. கட்சிகள், அமைப்புகள் சார்பாக அந்த நிபுணர் குழுவுக்கு பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டனர். இணைத் தலைவரான முதல்வர் விக்கி சார்பிலும் இரண்டு பிரதிநிதிகளை நியமிக்குமாறு கோரப்பட்டது. ஆனால் அவர் தனது பிரதிநிதிகளைப் பிரேரிக்காமல் வெட்டிவிட்டார்.

அவர் யாரை நியமிக்கப் போகின்றார் என்பதை அறிய பேரவைக்குள்ளும் வெளியிலும் பலர் கண்கொத்திப் பாம்பாகக் காத்திருந்தனர். அந்த நியமனத்தின் மூலம் முதல்வர் விக்கிக்குப் பின்னால் இருந்து விடயங்களை ஒப்பேத்தும் – நகர்த்தும் – அரூபக்கரம் எது என்பதைக் கண்டுபிடிக்க முடியும் என்பதுதான் இவ்விடயத்தில் பலரின் சிரத்தைக்கும் காரணம்.

ஆனால் முதல்வர் விக்கி ஒரு தந்திரம் செய்தார். தனது பிரதிநிதிகள் – தன் சார்பான நிபுணர்கள் – வெளிநாட்டில் இருக்கின்றார்கள். அவர்கள் வந்து நிபுணர் குழுவின் கூட்டத்தில் கலந்து கொள்வதோ, அல்லது வேறு ஏதேனும் வகையில் (‘ஸ்கைப்’ போன்றவை வாயிலாக) அவர்களது கருத்துக்களை உள்வாங்குவதோ கஷ்டம் என்றும் அதற்கான நேரங்களை ஒதுக்கீடு செய்து, நிபுணர் குழுவின் கூட்டத்தைக் கூட்டுவது நெருக்கடியானதாக இருக்கும் என்றும் விக்கி சாக்குப் போக்குச் சொன்னார்.

“நீங்கள் உங்கள் யோசனைத் திட்ட வரைவை – நகலை – தயார் செய்யுங்கள். பிறகு தாருங்கள். எனது கருத்தைக் கூறுகின்றேன்.” – என்றாராம் விக்கி.

இந்தப் பதிலின் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்தினார் அவர்.  ஒன்று – தன் பின்புலத்தில் இருக்கும் மூளை மையத்தை வெளிக்காட்டாமல் மறைத்துக் கொண்டார்.

மற்றது – பேரவையின் தீர்வு யோசனைத் திட்ட நகல் தனது கலந்தாலோசனையில் தயாரிக்கப்பட்டதல்ல என்ற நிலைப்பாட்டை அவர் உறுதிப்படுத்திக் கொண்டார். யோசனைத் திட்ட வெளியீட்டின் போதும், தாம் முன்னரே எழுதித் தயாரித்து வந்த உரையிலும் அதை வெளிப்படையாகக் குறிப்பிட்டு, அறிவித்து,அந்தத் தீர்வு யோசனைக்கும் தமக்கும் தொடர்பில்லை என்பதைப் பகிரங்கப்படுத்திக் கொண்டார்.

இப்படி அந்த இராஜதந்திரி உள்வீட்டுத் தகவல்களைச் சொன்னார்.

“நீங்கள் சொல்வது எல்லாம் சரி. ஆனால் சம்பந்தரும் விக்கியும் தமக்குள் இணக்கத்துடன்தான் இப்படிப் பிணக்குப்படுகின்றார்கள் என்று நீங்கள் கூறுவதற்கான காரணம் என்ன?” – இப்படி அவரிடம் வினா தொடுத்தேன்.

“இரண்டு காரணங்கள். முதலாவது – தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்டு பிடிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ்., புளொட் போன்றவையும் வெளியில் நிற்கும் கஜேந்திரகுமாரின் தமிழ் மக்கள் தேசிய முன்னணி, முன்னாள் விடுதலைப் புலிகளின் ஜனநாயகப் போராளிகள் கட்சி போன்றவையும் தீர்வுத் திட்டம் கொண்டு வரப்படும் சமயம் ஒன்றிணைந்து ஏதேனும் குழப்பம் விளைக்கலாம். அதற்கு இடமளிக்காமல் தனக்கு தோதான ஒரு தரப்பின் கட்டுப்பாட்டில் அத்தரப்பு இருப்பதை சம்பந்தர் விரும்புகின்றார். அந்த விடயம் அவரைப் பொறுத்தவரை இதுவரை சரிவந்துமுள்ளது. இன்றைய நிலையில் முதல்வர் விக்கியின் தலைமைத்துவத்தை உதறி ஈ.பி.ஆர்.எல்.எவ்வோ புளொட்டோ கஜேந்திரகுமார் அணியோ அல்லது பிற தரப்புகளோ வெளியே வந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்வுத் திட்ட நகர்வுகளுக்கு எதிராக எதுவும் சாதித்துவிடமுடியாது-சாவலாகிவிடமுடியாது என்பது – உறுதிப்படுத்தப் பட்டிருக்கின்றது. கூட்டமைப்பு ஒரு யோசனைத் திட்டத்துக்கு உடன்பட்டுப் போகும் போது அதனைத் தாமும் ஏற்கிறார் என்று முதல்வர் விக்கியும் அறிவிப்பாராயின், அச்சமயத்தில் அத்தகைய நகர்வுக்கு எதிரான எந்தப் பேரெடுப்பு நடவடிக்கையும் பிசுபிசுத்தே போகும் என்ற நிலைமையும் இப்போதே உறுதியாகிவிட்டது.

அடுத்தது – முதல்வர் விக்கி தலைமையில் இத்தகைய தீவிரப் போக்குக் குழு ஒன்று தமிழர் மத்தியில் உருவெடுத்து நிற்பது தீர்வு யோசனை தொடர்பான தமது பேரம் பேசலுக்கு மிகவும் அவசியமானது என சம்பந்தர் கருகின்றாராம்.

‘தீர்வுக்கான இணக்கம் ஒன்று வருவதற்கான ஆணையை தமிழ் மக்கள் சம்பந்தருக்கு வழங்கிவிட்டனர். அவருடன் பேசி முடித்தால் போதும் – என்ற கருத்து தென்னிலங்கை அரசியல் தலைமைக்கு இருக்குமானால்இ உப்புச் சப்பற்ற ஏதோ ஒரு திட்டத்தைத் தன் தலையில் தென்னிலங்கைத் தலைமை சுமத்திவிடும் என்று சம்பந்தர் அஞ்சுகின்றார்.

அதுவும் தமிழர் தரப்பின் ஆயுத வலிமை முறியடிக்கப்பட்டு விடுதலைப் புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் –

தென்னிலங்கையில் பேரினவாதசக்திகள் மீளவும் எழுச்சி கொள்ளும் ஆபத்திருப்பதாக தென்னிலங்கை அரசுத் தலைமையே அஞ்சும் சூழலில் –

அப்படித் தனித்து தமிழ் மக்களின் முழு ஆணை பெற்றவர் என்ற நிலையில் தென்னிலங்கை அரசுடன் தாம் பேசச் செல்வது சிக்கலானது என சம்பந்தர் நினைக்கிறார்.

“உங்கள் தரப்பில் ‘கமன்பில்லக்கள்’ ‘சிஹல உறுமயக்கள்’ இருப்பது போல எங்கள் தரப்பிலும் விக்கிகள், தமிழ் மக்கள் பேரவைகள் இருக்கின்றனர். உங்கள் பக்கத்தில் உள்ள தீவிரவாதத் தரப்புகள் போலவே எங்கள் பக்கத்திலும் தீவிரப் போக்குத் தரப்புகள் உள்ளன. நீங்கள் அவர்களைச் சமாளிக்க வேண்டும் என்பது போல நாமும் எமது தரப்பில் உள்ளவர்களைச் சமாளிக்கத்தான் வேண்டும். ஆகவே, விட்டுக் கொடுப்பு ஒரு மட்டம் வரைதான்.” – என்ற செய்தியை தென்னிலங்கை அரசுத் தலைமைக்கு  உரத்துச் சொல்லத்தான் விக்கியைத் தயார்ப்படுத்தி வைத்திருக்கின்றார் சம்பந்தர்.

எனவே விக்கியின் எழுச்சி, கூட்டமைப்புக்குள் ஒரு புரட்சி என்று கருதத் தேவை இல்லை. அதை அரசியலில் கிழட்டு நரிகளின் தந்திரோபாயமாகவும் பார்க்கலாம். – என்றார் அந்த இராஜதந்திரி.விக்கியின் திடீர்ப் புரட்சி குறித்து ஆரம்பத்தில் அதீத அக்கறையும் கவனிப்பும் காட்டிய கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் இப்போது அதில் அதிகம் சிரத்தை காட்டாமல் தவிப்பதற்கு இதுதான் உண்மையான காரணமோ…? தெரியவில்லை. எதற்கும் காலம் பதில் சொல்லும். அதுவரை காத்திருப்பதே நல்லது.

 

Related posts: