தேவாவின் முகநூல் சொல்லும் வரலாற்று தொடர்- “ஈழப் போராட்டத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள்” – பாகம் 05

Tuesday, April 5th, 2016
அரசியலை முடக்கிய ஆயுதங்கள்

கடந்த நான்காவது தொகுப்பில், இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஒரு பொன்னான வாய்ப்பு என்று டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்திருந்தார்.அதற்காக அவர் கூறுகின்ற காரணங்களாவன, வடக்கு கிழக்கு இணைந்த ஒரு அதிகார அலகாக தமிழர்களிடம் கிடைத்ததிருந்தது.

இந்திய அமைதிகாக்கும் படையினர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்பாக நிலைகொண்டிருந்தார்கள். அது மாத்திரமன்றி, இலங்கைப் படைகளை அதிகமாக நடமாட விடாமல் முகாம்களுக்குள்ளேயே முடக்கியும் வைத்திருந்தார்கள்.

பணம், வளம் என்று இந்தியா தேவையான அனைத்தையும் அள்ளி வழங்கிய அதேவேளை மேலும் வழங்குவதற்கும் இந்தியா தயாராகவும் இருந்தது. இந்த வாய்ப்புக்கள் கிடைத்திருந்தபோது அதற்கு முன்னர்வரை உரிமைப் போராட்டத்தின் பெயரால் புலிகள், சக தமிழ் இயக்கங்கள் மற்றும் தமிழ் மக்கள் ஆகியோரின் இழப்புக்களும் மிகவும் குறைவாகவே இருந்தது. அப்பொது புலிகள் கூட தமது தரப்பில் 652பேரே களப்பழியாகியிரந்ததாக உரிமை கோரியிரந்தார்கள்.

இலங்கை இந்திய ஒப்பந்த காலம் வரையான இழப்புக்களுக்கு ஒரு நியாயம் இருந்தது. அந்த இழப்புக்களின் தியாகங்களே இலங்கை இந்திய ஒப்பந்தத்தையும் ஏற்படுத்தியிருந்தது. அதற்கு பின்னர் நடந்த அழிவுகளும், இழப்புக்களும் அநாவசியமானவை. அவை தடுத்து நிறுத்தப்பட்டிருக்க வேண்டியவை.

பின்னர் நடந்து முடிந்தவை அதற்கு சான்று பகர்கின்றன.
எனவே இலங்கை இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ஆயுதப் போராட்டத்தை நிறுத்தி, மாகாண சபையை தமிழ் மக்களின் அரசியல் இலக்கு நோக்கி நகர்த்தியிருக்க வேண்டும்.

அதைச் செய்திருந்தால், எமது மக்கள் இத்தனை உயிர் அழிவுகளையும், இழப்புக்களையும், இடப்பெயர்வுகளையும் சந்தித்திருக்க மாட்டார்கள், முள்ளிவாய்க்கால், நந்திகடல் என அழிவுகளை நோக்கி தமிழ் இனம் இழுத்துச் செல்லப்பட்டிருக்க மாட்டார்கள் என்பதே டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கருத்தாக இருக்கின்றது. இப்படி பிற்காலத்தில் நடக்கப்போவதை முன் உணர்ந்து கூறிய தீர்க்க தரசியாகவே டக்ளஸ் தேவானந்தா அவர்களை நான் பார்க்கின்றேன்.

இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலை அடுத்து 1989ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்தத் தேர்தலில் போராட்டியிடுவதற்காக தமிழர் விடுதலைக் கூட்டணியின் (T.U.L.F) தலைமையில் ஈ.பி.ஆர்.எல்.எப். (E.P.R.L.F), ரெலோ (T.E.L.O), மற்றும் ஈ.என்.டி.எல்.எப் (E.N.D.L.F) ஆகிய இயக்கங்களும் இணைந்திருந்தன.

இந்தக் கட்சிகளை கூட்டாக சேர்த்து வைத்ததில் பின்னணியாக செயற்பட்டவர் அப்போது இலங்கைக்கான இந்திய தூதுவராக இருந்த டிக்சிட் அவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்தக் கூட்டுக்கு சமாந்திரமாக விடுதலைப் புலிகளின் பின்னணியுடன் ஈரோஸ் (E.R.O.S) களம்; இறங்கியிருந்தது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமையிலான கூட்டுக் கட்சியினர், வடக்கு கிழக்கில் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படும் ஆசனங்களை பங்கிட்டுக் கொண்டார்கள்.

அப்படி பங்கிட்டுக் கொண்டதில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டதில் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகத்திற்கு ஆசனம் வழங்கப் போவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும், தமிழ் மக்களின் தேசியத் தலைவருமான அமிர்தலிங்கம் அவர்கள் அப்போது தெரிவித்தார்.

தேசியத் தலைவர் அமிர்தலிங்கம் அவர்கள் அவ்வாறு கூறியதற்கு ஒரு காரணம் இருந்தது. டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இந்தியாவில் இருந்தாலும், அவர் இலங்கைக்குத் திரும்பி ஆயுத வன்முறையற்ற நடைமுறைச்சாத்தியமான அரசியல் வழிமுறை ஒன்றை முன்னெடுக்க தயாராகி வருவதை தேசியத் தலைவர் அறிந்திருந்தார்.

அவற்றுக்கு செயல்வடிவம் கொடுக்க டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விரைவாக இலங்கைக்கு திரும்பிவர வேண்டும் என்பதை விரும்பியிருந்தார். அதை மனதில் வைத்துக் கொண்டே பாராளுமன்றத் தேர்தலில் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடம் கொடுக்க வேண்டும் என்று தேசியத் தலைவர் அமிர்தலிங்கம் அவர்கள் விரும்பினார்.

ஜனநாயக அரசியலுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தடையையும், தாக்குதல்களையும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கையில் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் துணிச்சலான ஒரு முயற்சியை வகுத்துக் கொண்டிருப்பதையிட்டு தேசியத் தலைவர் அமிர்தலிங்கம் அவர்கள் மகிழ்ச்சி கொண்டிருந்தார்.

அடிக்கடி டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் நேரடியாகவும், தொலைபேசியிலும் உரையாடுவதால் இருவருக்குமிடையே நல்ல உறவு இருந்துவந்தது.ஆனாலும் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு பாராளுமன்ற ஆசனம் பங்கிடும் தேசியத் தலைவரின் கோரிக்கையை சக தமிழ் கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதை அவர்கள் எதிர்த்தார்கள்.

அதற்குக் காரணம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மீது எப்போதுமே தமிழ்க் கட்சிகளுக்கு ஒரு அரசியல் பயம் இருந்து வந்ததுதான்.

அதற்குக் காரணம், சக தமிழ் இயக்கக் கட்சிகள் மாகாண சபைத் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆதரவை சரியாக பயன்படுத்தி மக்களை பாதுகாக்கவும், அரசியல் தீர்வுநோக்கி மாகாண சபையை நகர்த்தவும் தவறியிருந்தன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இந்திய படையினரின் செயற்பாட்டில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பங்கெடுத்திருந்தன.

அதுமட்டுமல்லாமல், சமூக விரோத செயல்களிலும் இவ்வியக்கங்கள் தாராளமாக ஈடுபட்டன. இவ்வாறான செயற்பாடுகளை வெளிப்படையாகவும், துணிச்சலாகவும் எதிர்க்கின்றவராகவும், அதை விமர்சிக்கின்றவராகவும், தனது கடுமையான உழைப்பின் காரணமாக மக்களை அணி திரட்டக்கூடியவராகவும் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இருந்தார்.

ஆகையால் டக்ளஸ் தேவானந்தா அவர்களை இந்தியாவிலிருந்து வரவழைக்கவே கூடாது என்று அவர்கள் எண்ணினார்கள்.

1989ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரான தமிழர்களின் தேசியத் தலைவர் அமிர்தலிங்கம் அவர்களை புலிகள் சுட்டுக் கொலை செய்தார்கள்.

அவரைச் சந்திப்பதற்காக, கூட்டணியின் உறுப்பினர்களான யோகேஸ்வரன், மாவை சேனாதிராசா ஆகியோர் ஊடாக தேசியத் தலைவர் அமிர்தலிங்கம் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அமிர்தலிங்கம் அவர்களின் இருப்பிடம் சென்று உரையாடுவதுபோல் பாசாங்கு செய்துவிட்டு, அவரை புலிகள் சுட்டுச் சரித்தார்கள்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு முன்னர் சக தமிழ் இயக்கங்களை போட்டித் தன்மை காரணமாக தடைசெய்தும், கொலை செய்தும் அழித்த புலிகள், பின்னர் தேசிய நீரோட்டத்தில் கலந்து கொண்டு ஜனநாயக வழிமுறை ஊடாக தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வைக்காண முற்பட்ட அனைவரையும் துரோகிகள் என்ற எழுதப்படாத அறிவித்தலை புலிகள் விடுத்திருந்தார்கள்.

இவ்வாறான நெறுக்கடியான பொழுதிலேயே டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தாயகம் திரும்ப ஆயத்தமானார். அப்போது இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

டக்ளஸ் தேவானந்தா அவர்களோ, 1989ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முடியாத போதும் இலங்கைக்கு திரும்புவதற்கான வேலைகளை துரிதமாக முன்னெடுத்தார்.

அதற்காக தனக்கு மிக நெருக்கமான தோழர்களை முதலில் இலங்கைக்கு அனுப்பிவைத்த டக்ளஸ் தேவானந்தா அவர்கள், தானும் இலங்கைக்கு வருவதற்கான ஆயத்தங்களையும், அதற்குத் தோதான புறச்சூழலையும் ஏற்படுத்துமாறும் அதற்கான திட்டத்தையும் வகுத்துக் கொடுத்திருந்தார்.

அந்தத் திட்டங்களுக்கு அமைவாக ஈ.பி.டி.பி கட்சிப் பதிவு, மற்றும் இலங்கையில் தங்கியிருப்பதற்கான இடத்தை ஒழுங்கு செய்வது, பழைய தோழர்களை அணி திரட்டுவது போன்ற ஏற்பாடுகளை செய்வதற்காக தோழர் அசோக் (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார்) தலைமையில் இலங்கை வந்திருந்த தோழர்களும், இலங்கையில் இருந்த டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தகப்பனார் அமரர் கதிரவேல் அவர்களும், தீவிரமாக ஈடுபட்டிருந்தார்கள்.

இவர்களுடன் தற்போது வடக்கு மாகாண சபையில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் தோழர் தவராசா அவர்களும் இணைந்து பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

(தொடரும்)

 

Related posts: