தேவாவின் முகநூல் சொல்லும் வரலாற்று தொடர்- “ஈழப் போராட்டத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள்” – பாகம் – 4

Monday, March 28th, 2016

குருதி விற்று, வாங்கப்பட்டது உணவு

சிறையிலிருந்த டக்ளஸ் தேவானந்தா அவர்களையும் சிறையில் இருக்கும் தோழர்களையும் பார்வையிட வருகின்ற, தோழர்களும், நண்பர்களும், உறவினர்களும், வாங்கிவருகின்ற கச்சான், கடலை மற்றும் உணவுப் பொருட்களை அது அளவில் எவ்வளவாக இருந்தாலும் அதை தன்னுடன் இருக்கும் தோழர்களுக்கு பங்கிட்டுக் கொடுக்க வேண்டும் என்று டக்ளஸ் தேவானந்தா கூறுவார்.

பங்கிடும் பொறுப்பை தோழர் நிக்சன் (முன்னல் உமாபதி பாஸ்கரன்) அவர்களிடம் ஒப்படைத்திருந்தார்.

அங்கு சிறையில் இருந்த போதும், பின்னர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும், அதன் பின்னராக மத்திய அமைச்சராக இருந்தபோதும், இப்போது மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்றபோதும், டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனக்காக விஷேட சமையல் மற்றும் உணவு தயாரிப்பை செய்ய அனுமதிப்பதில்லை.

தன்னுடன் இருக்கும் தோழர்களுக்கு என்ன உணவு தயாரிக்கப்படுகின்றதோ அதையே தனக்கும் உணவாக சாப்பிடுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கின்றார்.

எத்தனை பதவிகள், வசதிகள் தேடி வந்தபோதும், மரப் பலகையிலேயே உறங்குவதும், வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை அத்துடன் அவருக்கு மிகவும் விருப்பமான அந்த இறப்பர் முள்ளுச் செறுப்பும்தான் அவரின் எளிமையான வாழ்வின் அடையாளங்களாக இருக்கின்றது.

இந்தியச் சிறையில் இரண்டு வருடங்கள் இருந்துவிட்டு விடுதலையாகி வெளியில் வந்தபோது, தன்னுடன் இருந்த தோழர்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கும், அவர்களுக்கு உணவளிப்பதற்காகவும் கடுமையாக போராட வேண்டியிருந்தது.

தெரிந்த தமிழக அரசியல் பிரமுகர்கள், தமிழக அரசு ஆகியோரிடம் உதவி கேட்டு நேரடியாகச் செல்வார்.

அப்போது இவருடைய முயற்சிகள் காரணமாக சக தமிழ் இயக்கங்கள், கட்சிகளுக்கு சிறிய அளவில் தமிழக அரசு பண உதவிகளையும் செய்தது. அதிலும், விடுதலைப் புலிகள், ஈரோஸ் ஆகிய இயக்கங்களுக்கு பெருந்தொகைப் பணத்தை தமிழக அரசு வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

சில பொழுதில் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் சில தோழர்களும் இரத்தத்தை வழங்கி அதற்காக கிடைக்கும் பணத்தைக் கொண்டும் தோழர்களுக்கு உணவு வழங்கியிருக்கின்றார்கள்.

இப்படித்தான் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனக்குள் தலைமைப் பண்பை வளர்த்தார். தோழமை வளர்த்தார்.

இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படுவதற்கு முன்னர், பரந்தன் இராஜன் (ஞானசேகரன்) தலைமையிலான புளொட் அமைப்பினரோடு, ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப்பும் சேர்ந்து ஈ.என்.டி.எல்.எப். (ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி) என்ற கூட்டமைப்பு ஒன்றினை ஸ்தாபித்திருந்தார்.

இந்த கூட்டமைப்பில் இருந்த இரு தரப்புக்கும் இந்திய அரசாங்கம் தனித் தனியே ஆயுதங்களை வழங்கியிருந்தது. அதே கால கட்டத்திலேயே இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தாகி இருந்தது.

அதன் பின்னர் ஈ.என்.டி.எல்.எப்பில் இருந்த புளொட் அமைப்பினர் இலங்கைக்கு வருகை தந்து, ஈ.என்.டி.எல்.எப்பாக தம்மை உரிமை கோரி மனித உரிமை மீறல்களிலும், சமூக விரோதச் செயல்களில் ஈடுபடத் தொடங்கினார்கள்.

அவர்களின் செற்பாடுகள் ஈ.என்.டி.எல்.எப் கட்சியின் கொள்கைக்கும் செயற்பாடுகளுக்கும் ஏற்புடையதாக இருக்கவில்லை.

இதனால் ஈ.என்.டி.எல்.எப் இயக்கத்தில் இருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பான டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும், பரந்தன் ராஜன் தலைமையிலான புளொட் அமைப்பினருக்குமிடையே வேறுபாடுகள் தோற்றம் பெற்றதால், அதிலிருந்தும் தன்னுடன் இருந்த தோழர்களுடன் விடுபட்டு, தன்னுடன் வருவதற்கு தயாராக இருந்த ஈ.என்.டி.எல்.எப் புளொட் அமைப்பின் முற்போக்கு சக்திகளையும் இணைத்துக் கொண்டு 1987ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் இருந்து கொண்டே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஸ்தாபித்தார்.

இந்திய படைகள் வருவதற்கு முன்னரே இலங்கையில் செயற்பட்ட சக தமிழ் இயக்கங்களை புலிகள் தடை செய்திருந்தார்கள்.

பல சக இயக்க உறுப்பினர்களை கொலையும் செய்திருந்தார்கள். புலிகளின் சிறைகளில் பல சக இயக்க உறுப்பினர்கள் சித்திரவதைப் படுத்தப்பட்டார்கள்.

பல இயக்கங்களின் தலைவர்களும், சில உறுப்பினர்களும் இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருந்தார்கள்.

அவ்வாறான சூழலிலையே இந்திய அமைதி காக்கும் படைகளும் இலங்கைக்கு வருகை தந்திருந்தார்கள்.

இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலுக்கு முன்னர், ஒரு இடைக்கால நிர்வாகத்தை ஏற்படுத்தி அதை தம்மிடம் ஒப்படைக்குமாறு விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்தார்கள்.

இடைக்கால நிர்வாகத்திற்கு தலைமை ஏற்றுச் செயற்படுத்துவதற்கு இலங்கை அரச நிர்வாக உத்தியோகத்தர்கள் மூன்று பெயர்களை சிபாரிசு செய்து தருமாறு முன்னாள் ஜனாதிபதி ஜெயவர்தனா புலிகளிடம் கேட்டிருந்தார்.

புலிகளும் மூன்று பேரின் பெயர்களை பரிந்துரை செய்திருந்தார்கள்.

புலிகள் கொடுத்த அந்தப் பெயர்ப்பட்டியலைப் பார்த்த ஜெயவர்தனா, தனக்கு மிகவும் விசுவாசியாகவும், நம்பிக்கையானவராகவும் இருந்த, தற்போது வடக்கு மாகாண சபையில் தன்னை தீவிர தமிழ்த் தேசியவாதியாக காட்டிக் கொள்ளும் சபை முதல்வர் சி.வி.கே சிவஞானத்தையே தலைமை நிர்வாகியாக நியமிக்க முடியும் என்று அறிவித்தார்.

ஜெயவர்தனாவின் அறிவிப்பை புலிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. தாம் வழங்கிய பட்டியலானது, முன்னுரிமை அடிப்படையிலேயே குறிப்பிடப்பட்டிருப்பதாகவும்.

அது ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால், தாம் மாகாண சபையை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்றும் அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

புலிகளின் கோரிக்கையை ஜெயவர்தனா ஏற்றுக் கொள்ளவில்லை.

புலிகள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்நத பத்மநாதனையே தெரிவு செய்ய வேண்டுமென கேட்டபோதும், ஜெயவர்தனா அதை மறுத்ததற்குக் காரணம், பத்மநாதன் மட்டக்களப்பின் மேலதிக அரசாங்க அதிபராக இருந்து கொண்டு, புலிகளுக்கு ஆதரவாக இருந்ததாலும், சிறையில் தடுத்து வைக்கப்பட்டவராக இருந்ததாலும், ஜெயவர்தனா ஏற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அவ்விடயத்தில் புலிகள் பிடிவாதமாக இருந்ததற்கு காரணம், தமக்கு விசுவாசமானவர்களை நியமிக்காமல், ஜெயவர்தனா தனக்கு விசுவாசமானவரை நியமிக்க முற்பட்டதே இடைக்கால நிர்வாக முறைமை குழம்பிப் போனதற்கான காரணமாகும்.

இந்த நாட்டில் தமிழர்களுக்கு எதிரான ஜூலை வன்முறையை தூண்டிவிட்டவர் என்றும், தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை ஒடுக்க எந்தப் பேயோடும் கூட்டுச் சேர்வேன் என்றும் கூறிய ஜனாதிபதி ஜெயவர்தனாவின், நம்பிக்கை மிகுந்த விசுவாசியாக இருந்த சி.வி.கே சிவஞானம்தான் இன்று தமிழ்த் தேசியம் பேசி நம்மை புல்லறிக்கச் செய்கின்றார்.

இது காலக் கொடுமைதான்.

அதைத் தொடர்ந்து மாகாண சபையை முறைமையை தாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும், அதையும் மீறி தேர்தலில் போட்டியிடுவதை தாம் தடுத்து நிறுத்த அனைத்து வழிமுறைகளையும் பிரயோகிக்கத் தயங்கப்போவதில்லை என்றும் புலிகள் எச்சரித்திருந்தார்கள்.

ஆனாலும் புலிகளின் எச்சரிக்கையும் மீறி, கிழக்கில் ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் ஈ.என்.டி.எல்.எப், முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிட்டன.

ஈரோஸ் இயக்கம் புலிகளின் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருந்ததால் போட்டியிடவில்லை.

அதேவேளை வட மாகாணத்தில்; ஈ.பி.ஆர்.எல்.எப் தவிர்ந்த வேறு எவரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவில்லை.

அப்படி எவரும் போட்டியிடுவதை ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தினர் விரும்பியும் இருக்கவில்லை.

அவ்வாறான முயற்சிகளை தடுக்கின்ற முயற்சிகளிலும் ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தினர் செயற்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன

இதனால், வடமாகாணத்துக்கான சபை உறுப்பினர்களை போட்டியின்றியே ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தினர் பெற்றுக் கொண்டிருந்தனர்.

அப்படி மாகாண சபை அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டவர்கள். அதை தமிழ் மக்களின் அரசியல் இலக்கு நோக்கி முன்னகர்த்தியிருக்க வேண்டும்.

மாகாண சபைக்கு இந்திய அரசு பின் பலமாக இருந்த வாய்ப்பை பயனுள்ள வகையில் பயன்படுத்தியிருகக் வேண்டும். அதை அவர்கள் செய்யவில்லை என்றும் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அடிக்கடி கூறுவார்.

(தொடரும்)

Related posts: