‘கிளீன் செக்-மேட்’ வைத்திருக்கின்றார் என பத்தி எழுத்தாளர் வசிட்டன் தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வுத்திட்ட முன்மொழிவு தொர்பான கட்டுரையில் தெரிவித்தள்ளார். கூட்டமைப்புக்கு ‘கிளீன் செக்-மேட்’! வைத்தது தமிழ் மக்கள் பேரவை

Saturday, March 5th, 2016

01.02.2016 திங்கட்கிழமை

தமிழ்க் கூட்டமைப்பின் பிரதான கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி. புலிகளின் காலத்தில் பதுங்கிக் கிடந்தபுலிகளின்ஏவல் நாய்களாக செயற்பட்டஅதன் தலைவர்கள், புலிகளின் அழிவுக்குப் பின்னர் தங்களை பிரபாகரன் நிலைமைக்கு கற்பனை செய்து நடக்கத் தொடங்கிவிட்டதால்தான் ஆரம்பித்தது இந்த விபரீதங்கள் எல்லாம் என தமிழ்க் கூட்டமைப்பில் என்ன குறைபாடுகள் பிரதமானமாக இருக்கின்றனவோ, அவற்றைச் எல்லாம் சுட்டிக்காட்டி முதலமைச்சர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமுக்கியமாக சம்பந்தன், சுமந்திரன் கூட்டணிக்கு – ‘கிளீன் செக்மேட்வைத்திருக்கின்றார் என பத்தி எழுத்தாளர் வசிட்டன் தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வுத்திட்ட முன்மொழிவு தொர்பான கட்டுரையில் தெரிவித்தள்ளார். 

கூட்டமைப்புக்கு ‘கிளீன் செக்-மேட்’!

வைத்தது தமிழ் மக்கள் பேரவை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு – முக்கியமாக சம்பந்தன், சுமந்திரன் கூட்டணிக்கு – ‘கிளீன் செக்-மேட்’ வைத்திருக்கின்றார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்.

தமிழ்க் கூட்டமைப்பில் என்ன குறைபாடுகள் பிரதமானமாக இருக்கின்றனவோ, அவற்றைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், அந்தக் குறைபாடுகள் அற்றவகையில் சில விடயங்களை ஒப்பேற்றியதன் மூலம் தனது சாதுரியத்தை நிலை நிறுத்தியிருக்கின்றார் என்று கூறலாம்.

தமிழ்க் கூட்டமைப்பின் பிரதான கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி. விடுதலைப் புலிகளின் காலத்தில் பதுங்கிக் கிடந்த – புலிகளின் ‘ஏவல் நாய்’களாக செயற்பட்ட – அதன் தலைவர்கள், புலிகளின் அழிவுக்குப் பின்னர் தங்களை பிரபாகரன் நிலைமைக்கு கற்பனை செய்து நடக்கத் தொடங்கிவிட்டதால்தான் ஆரம்பித்தது இந்த விபரீதங்கள் எல்லாம்.

பிரபாகரனாவது ஒரு பலம் பொருந்திய இராணுவக் கட்டமைப்பின் தலைவர். இராணுவக் கட்டமைப்பு ஒன்றை நடத்துபவர் அந்தப் பாணியிலேதான் அதனை முன்னெடுக்க வேண்டும்; முன்னெடுக்க முடியும். இராணுவ இயக்கத்தை அரசியல் கட்சிப் பாணியில் – ஜனநாயக வழியில் – நடத்த முடியாது. அங்கு ஜனநாயகம் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது; எதிர்பார்க்கவும் கூடாது.

ஆனால், ஜனநாயகக் கட்சி என்று கூறிக் கொள்ளும் தமிழ்க் கூட்டமைப்பும் – அதன் பிரதான அம்சமான இலங்கைத் தமிழரசுக் கட்சியும் – ஜனநாயக மார்க்கத்தைத் தாண்டி, வேறு வழி பயணிக்கின்றன. அக்கட்சியின் தலைவர்கள் – குறிப்பாக சம்பந்தர், சுமந்திரன், மாவை சேனாதிராஜா போன்றோர் – தங்களை ஜனநாயகக் கட்சி ஒன்றின் காவலர்கள் என்று வெளியில் படம் போடுவார்கள். ஆனால் நடந்து கொள்வது ஏனோ இராணுவ சர்வாதிகள் போல்தான்.

அதுதான் – அந்தப் போக்குத்தான் – முதலமைச்சர் விக்னேஸ்வரன் என்ற சிறு விதையில் இருந்து தமிழ் மக்கள் பேரவை என்ற விருட்சம் விஸ்வரூபம் எடுக்க உரமளித்து என்பதே இன்று புலனாகும் உண்மை.

இலங்கைத் தமிழரசுக் கட்சியை எடுத்துக் கொள்வோம். ஒரு பெரிய ஜனநாயக இயக்கம் போல அதனைக் காட்டிக் கொள்வார் அதன் தலைவர் மாவை சேனாதிராசா. ஆனால் கட்சிக்குள் அவர் நடந்து கொள்வதோ முற்றிலும் சர்வதிகாரப் பாணிதான்; தந்தை செல்வாவின் வழிக்கு முற்றிலும் முரணான முறையில்தான்.

ஏதோ ஜனநாயக மரபின் உச்சிக் கொப்பில் நிற்பது போல கட்சியின் தேசிய மாநாட்டைக் கூட்டுவார். கட்சியின் கீழ் மட்டத்திலிருந்து கருத்துக்களை உள்வாங்கி கட்சி நிர்வாகிகள்  தெரிவு செய்யப்படுகின்றார்கள் என்பது போல ஒரு மாயை காட்டுவார். ஆனால் அப்படி ஏதும் நடப்பதில்லை. கட்சி மாநாட்டு மேடையில் வைத்து தனக்கு விருப்பமானவர்களை கட்சி நிர்வாகிகளாக மாவை சேனாதிராசா அறிவிப்பார். அவருக்கு விருப்பமானவர்கள்தான் – அவருக்குப் பிடித்தமானவர்கள்தான் – ‘ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட’ (?) கட்சி நிர்வாகிகள் என்று மற்றவர்கள் கருதிக் கொள்ள வேண்டியதுதான்.

வடக்கில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்குள் புகுந்து விளையாடி, தின்று ஏப்பம்விட்ட ‘பெருச்சாளி’ ஒன்றுதான் மாவைக்குப் பிடித்தமான கட்சிப் பொருளாளர். கட்சி மாநாடுகளின் கட்சியின் வரவு – செலவுக் கணக்குகளைக் காட்டாத அந்தப் பிரகிருதி கூட மாவையின் விருப்பின் பேரில் ‘ஜனநாயக முறையில் ‘ தெரிவான பொருளாளராக அறிவிக்கப்படுவார்; மாவை விரும்பும்வரை அவரே பொருளாளார்.

இப்படி ஜனநாயகத்தின் பேரால் சம்பந்தரும், சுமந்திரனும், மாவையும் மேற்கொண்ட சர்வாதிகாரமே தமிழ் மக்கள் பேரவையின் பிறப்பாக்கத்துக்குப் பிரதான காரணம் என்பதை தற்போதைய அரசியலின் பார்வையாளர்கள் யாவரும் ஒப்புக் கொள்வர்.

ஆறு தசாப்த கால போராட்டங்களின் விளைவாக – அளப்பெரும் தியாகங்களையும் சொல்லொணாத் துயரங்களையும் சுமந்த போராட்டங்களின் பெறுபேறாக – தமிழர்களுக்குக் கிடைக்க வேண்டிய – அல்லது கிடைக்கக் கூடிய – தீர்வு எத்தகையது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை கூட ஜனநாயகத்தின் பெயரால் தங்களிடம் மட்டுமே விட்டு வைத்திருக்கப்பட்டுள்ளது என்று சம்பந்தர் – சுமந்திரன் குழு தீர்மானித்துச் செயற்பட்டதன் முரண் நகையே தமிழ் மக்கள் பேரவை.

இந்த விடயத்தில் ‘சம்பந்தன் – சுமந்திரன்’ கூட்டுக்குள் மாவையின் பெயர் அதிகம் சிக்கிக் கொள்ளவில்லை. வெறுமனே இவ்விடயம் சம்பந்தமாக இடம்பெறும் உள்வீட்டுக் குசுகுசுப்புக்குள், தலையைக்காட்டி விடுவதுடன் மட்டும் மாவையின் பங்களிப்பு அடங்கி விடுகின்றது.

அதற்கும் காரணம் உண்டு என்கின்றன விடயமறிந்த வட்டாரங்கள். தீர்வு, யோசனை, அதிகாரப் பகிர்வு, அரசமைப்பு சரத்துக்கள் ….. இப்படி மூளைக்குக் காத்திரமான விடயங்களை கையாளும் – அல்லது விவாதிக்கும் – தகைமையோ, தலையோ மாவையிடம் இல்லை என்பதுதான் உண்மை. அதனால் அந்த விடயத்துக்குள் அதிகம் சிக்காமல் – சிக்குவதற்கான தகைமை, ஆளுமை இல்லாததால் – விலகி நிற்கின்றார் அவர்.

ஆனால், சம்பந்தனும் சுமந்திரனும் ஈழத் தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் ஏகபோக உரிமை தங்களிடம் மட்டுமே விட்டு வைக்கப்பட்டுள்ளது என்ற போக்கில் மமதையுடன் விடயங்களைக் கையாள்வது வெளிப்படையானது.

அதுவே தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி அலைகளைத் தோற்றுவித்துள்ளது.

அந்தக் காரணத்தில்தான் தமிழ் மக்கள் பேரவை உருக்கொண்டது என்பதும் அப்பட்டமான உண்மை.

இந்தப் பின்புலத்தில் இன்னும் சில ஒளிவு, மறைவான சம்பவங்களும் உள்ளன.

சம்பந்தர் – சுமந்திரன் கூட்டு, தென்னிலங்கையில் மைத்திரி – ரணில் அணியுடன் காய்களை நகர்த்தி எப்படியோ அதிகாரத்துக்கு வந்துவிட்டது.

மைத்திரி – நிறைவேற்று அதிகார ஜனாதிபதி; ரணில் – பிரதமர்;  சம்பந்தர் – எதிர்க்கட்சித் தலைவர்.

இந்த முக்கூட்டுத் தரப்பு தங்களுக்குள் மூடுமந்திரமாக நகர்த்தும் புதிய அரசமைப்பு ஏற்பாடுகள் பற்றிய செய்திகள் அரசல்புரசலாக வெளிவந்தமையே தமிழர் தரப்பில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.

சம்பந்தரையும் சுமந்திரனையும் நேரில் அழைத்து சில விடயங்களைத் திட்டவட்டமாகவும், தெளிவாகவும் வெளிப்படையாகவும் பிரதமர் ரணில் விக்கிரசிங்க கூறிவிட்டார் என்பதை நம்பிக்கையான கொழும்பு அரசியல் உயர்வட்டாரங்கள் அடித்துக் கூறி உறுதி செய்கின்றன.

புதிய அரசமைப்பில் –

சமஷ்டி கிடையாது.

வடக்கு – கிழக்கு இணைப்பு சாத்தியமே இல்லை;

மாகாணங்களுக்கு சுயாட்சி என்ற கதையே கிடையாது.

– இந்த மூன்று விடயங்களையும் ரணில் மிக உறுதியாக சம்பந்தர் – சுமந்திரனிடம் தெளிவுபடுத்திவிட்டார்.

“அப்படி இந்த மூன்று விடயங்களும் இப்போதைக்குக் கிடைக்கும் எனக் கனவு கூடக் காணாதீர்கள். தெற்கில் ஏற்பட்டுள்ள தற்போதைய அரசியல் கொந்தளிப்பு நிலையை எதிர்கொண்டு தாண்டுவதே இப்போது மிக முக்கிய விடயம். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கும் புதிய அரசமைப்பை நிறைவேற்றுவதே தற்போதைக்கு பிரதான விவகாரம். அதற்கு முட்டுக்கட்டையாக வரக்கூடிய மேற்படி அதிகாரப் பகிர்வு விடயங்களை பேச்சுக்குக் கூட பரிசீலிக்க முடியாது. இப்போதைக்கு இவை இல்லாத அரசமைப்பை நிறைவேற்றி நடைமுறைக்குக் கொண்டு வருவோம். பின்னர், அரசியல் சூழ்நிலை சாதகமாக வருமானால் – அப்போதைய நிலையைக் கருத்தில் எடுத்து – நடைமுறைக்கு வரும் புதிய அரசமைப்பில் திருத்தங்களைக் செய்வதன் மூலம் அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகளைப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்.” – என்று ரணில் கூறிவிட்டர்.

” இந்த விடயத்தில் தமிழர் தரப்பை – உங்கள் மக்களை – சமாளிப்பது உங்களின் பொறுப்பு.” – என்றும் கூட பிரதமர் ரணில் தெரிவித்துவிட்டாராம்.

“எங்கள் மக்களை நான் பார்த்துக் கொள்ளுகிறேன்.” – என்று சுமந்திரன், பிரதமர் ரணிலிடம் உறுதியளித்தார் என்றும் கொழும்பு வட்டாரங்கள் கூறுகின்றன.

கட்சியின் பெயரையே ‘சமஷ்டிக் கட்சி’ என்று வைத்துக் கொண்டு –

கடந்த தேர்தலிலும் கூட ‘அடைந்தால் மகாதேவி; இல்லையேல் மரணதேவி!’ என்ற போக்கில் சமஷ்டி, வடக்கு – கிழக்கு இணைப்பு, சுயாட்சி; என்ற கோஷங்களை தேர்தல் விஞ்ஞாபனத்தில் பிரதான சுலோகங்களாக வைத்து, அதன் மூலம் வாக்குகளை அள்ளிக் கொண்டு –

பதவிகளைச் சுருட்டிக் கொண்டவர்கள், தீர்வு விடயத்தில் மக்கள் கருத்தை ஜனநாயக முறையில் உள்வாங்காமல், எதேச்சாதிகாரமாகவும், தென்னிலங்கைக்கு விலை போகும் விதத்திலும், இரகசியமான முறையில் காய்களை நகர்த்துவது கண்டு கொதித்து எழுந்திருக்கின்றார் முதல்வர் விக்னேஸ்வரன்.

அதன் விளைவுதான் தமிழ் மக்கள் பேரவை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் சிலரின் ஜனநாயக விரோத – சர்வாதிகார – போக்கினால் தீர்வு விடயத்தில் ஒட்டுமொத்தத் தமிழினத்துக்கும் ஏற்பட்டுவிடக்கூடிய அனர்த்தத்தை உய்த்துணர்ந்து கொண்ட தமிழ் புத்திஜீவிகள் பலரும் அந்த முயற்சிக்கு முண்டு கொடுக்க முன் வந்தனர்.

கூட்டமைப்பின் எதேச்சாதிகாரத்துக்கு எதிராக ஏதேனும் செய்தாகவேண்டும் என்ற அதீத ஆர்வக் கோளாறினால் அந்தப் பேரவை முயற்சி அரைகுறைப் பிரசவமாகவே அரங்கேறியிருக்கின்றது என்பது உண்மைதான். ஆனால் அதற்கு மறுபுறத்தில் சில நல்ல அம்சங்கள் இருக்கின்றமையையும் நாம் மறந்துவிட – அல்லது மறுத்துவிட – முடியாது.

தமிழ்க் கூட்டமைப்பு ஈழத் தமிழ் மக்களின் ஏகோபித்த அரசியல் சக்தி என்று கூறினாலும் கூட, விரும்பும் எந்த தமிழ் அரசியல் தரப்பும் அதில் இணைத்து விட முடியாது. சம்பந்தர், சுமந்திரன், மாவை போன்றோர் விரும்பினால் மட்டும் யாருக்கும் இடம்; அங்கத்துவம்; ‘சீட்’ – எல்லாம்.

ஆனால் தமிழ் மக்கள் பேரவை அப்படியல்ல. வருகின்றவர்கள் எல்லோரையும் – அவர்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவராயினும், எந்தப் புத்திஜீவி அல்லது அரசியல் தரப்பைச் சார்ந்தவராயினும் அவர்களுக்குத் கதவு திறந்தே இருக்கிறது என்கிறது பேரவை.

டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான் போன்றோருக்கும் பேரவையின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று அதன் இணைத் தலைவர்களுள் ஒருவரான முதல்வர் விக்னேஸ்வரன் ஏற்கனவே பகிரங்கமாக அறிவித்திருக்கின்றமை மறக்கக்கூடியதல்ல.

தமிழ்க் கூட்டமைப்பு அரசியல் தீர்மானங்கள் எடுப்பது ஜனநாயக முறையில் அல்ல; தலைவர்களின் விருப்புக்கு அமைய மட்டுமே.

ஆனால் பேரவையில் நிலைமை முற்றிலும் மாறானது. எல்லா விடயங்களிலும் அனைத்துத் தரப்பினரின் கருத்துக்கள் உள்வாங்கப்படுகின்றன. ஒட்டியும், வெட்டியும் சூடான கருத்துப் பரிமாற்றங்களுக்கு இடமளிக்கப்படுகின்றது. முழு அளவில் ஜனநாயக முறைமை ஓங்கி ஒலிக்கின்றது.

தமிழர்களின் – ஒரு தேசிய இனத்தின் – அரசியல் ரீதியான வரலாற்றுத் தலைவிதியைத் தீர்மானிப்பதில் அனைத்து மக்களின் கருத்துக்களும் உள்வாங்கப்படுவது அவசியமானது; பிரதானமானது. அப்படியில்லாமல் ஒரு சிலரின் மூடுமந்திரமான நடவடிக்கைகள் மூலம் ஒட்டு மொத்தத் தமிழினத்தின் மீதும் ஒரு கட்டாய தலைவிதி திணிக்கப்படுவதைத் தகர்த்தெறியும் ஆரம்பப் புள்ளியாகவே பேரவை முகிழ்ந்திருக்கின்றது.

அந்த வகையில் பேரவையின் பிறப்பாக்கமும், குறுகிய காலத்தில் அதன் செயற்பாடுகளும், பெறுபேறுகள் அமைந்திருக்கின்றன என்பது ஏற்கப்பட வேண்டியதே.

இதனையே பேரவையின் தீர்வு நகல் யோசனை தொடர்பான முன் வரவை வெளியிட்டு வைத்து பேரவையின் இணைத் தலைவர்களுள் ஒருவரான முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரையும் அமைந்திருக்கின்றது.

முதல்வர் விக்கி உரை

 “தமிழ் மக்களின் எதிர்காலமே எமது கரிசனையாகும். இங்கு வெளியிடப்படும் திட்ட வரைவு மட்டுமே தமிழ் மக்களின் ஒரேயொரு தீர்வு என்று நாங்கள் கூறவில்லை; கூறவும் முடியாது. பலவிதமான தீர்வுகளைப் பலரும் முன்வைக்கலாம். ஆனால் இதுவரை காலமும் எமது அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் வண்ணம் தீர்வுத் திட்டங்களை உருவாக்கி மக்களிடையே பரப்பி மக்களின் கருத்துக்களை அறிய எவருமே முன்வந்ததில்லை. தமிழ் மக்கள் பேரவை அத்தகையதொரு மகத்தான கைங்கரியத்தில் ஈடுபட்டிருப்பது சிலருக்கு ஒரு வேளை மனத்தாக்கத்தைக் கொடுத்திருக்கலாம். தாங்கள் அதைச் செய்யவில்லையே என்ற ஒரு மனக் குறையை அது, அவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கலாம்.

“ஆனால் தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றிய கருத்துரைகள்,தீர்மானங்கள் கட்சி ரீதியாக மட்டுமே வெளிவரவேண்டும் என்று எதிர்பார்ப்பது வருத்தத்திற்குரியது. மக்களுக்காகக் கட்சிகள் இருக்கின்றனவே ஒழிய, கட்சிக்காக மக்கள் இருக்க முடியாது. கட்சிகள் மக்கள் மனமறிந்து நடந்து கொள்ள வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டோம் என்ற ஒரே காரணத்திற்காக மக்கள் நலம் சார்ந்த விடயங்களில் மக்களின் மனமறிய முற்படாமல் தான்தோன்றித்தனமாகச் செயற்படக் கூடாது. கடந்த கால கட்சி அனுபவங்களை முன்வைத்து தமிழ் மக்களின் வருங்கால வாழ்வைப் பாழடித்து விடாதீர்கள் என்று யாவரிடமும் தயவாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

 “தமிழ் மக்களின் புத்திஜீவிகள், தமது மக்கள் சார்பாக நடவடிக்கைகள் எடுத்து தமிழ் மக்களுக்கு நன்மை தரக்கூடிய அரசியல் வழிமுறைகளை எடுத்தியம்புவது எந்த வித்திலும் பிழையென்று யாராலும் கூற முடியாது. உண்மையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் மற்றைய சகல கட்சிகளும் சேர்ந்து தமிழ் மக்கள் பேரவையை  ஊக்குவிக்க வேண்டுமேயொழிய எதிர்ப்பைத் தெரிவிக்கக் கூடாது.

“கட்சிக்கான விசுவாசம் என்பது சிலரின் கண்களை மூடிவிட்டது. ஆனால் வடகிழக்கு மாகாண மக்களின் வருங்காலமே முக்கியம். வழி வழியாக வரவிருக்கும் எமது வாரிசுகளின் வருங்கால வாழ்க்கையே எமக்கு முக்கியம். அதற்காக எந்த ஒரு கடினமான பாதையில் பயணிக்கக்கூட நாங்கள் தயங்கக் கூடாது.  அரசாங்கங்கள் தயாரிக்கும் அரசமைப்பில் தமிழ் மக்களின் தேவைகள், அபிலாசைகள், நோக்குகள், உரிமைகள் யாவையும் உள்ளடக்கப்படாவிடில் அத்தகைய அரசமைப்பு ஒருபோதும் நன்மை பயக்கப் போவதில்லை.

“உதாரணத்திற்கு 1981ஆம் ஆண்டில் பேசப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகளே எமக்குப் போதும் என்று கட்சி ரீதியாக நாங்கள் கூறினால் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று நாங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

“இன்றைய கால கட்டத்தில் அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் வலியுறுத்தல்களுக்குக் கட்டுப்பட்டு திணறிக் கொண்டிருக்கின்றது. அரசாங்கத்தினுள் பிளவுகள் ஏற்படத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் ‘எதைத் தந்தாலும் தாருங்கள் நாம் அதை ஏற்றுக் கொள்வோம்’ என்ற மனோபக்குவம் எங்களிடம் இருப்பது சரியென்று எனக்குப் படவில்லை.

 “எமது தொடர் பாரம்பரியம் 2000 வருடங்களுக்கு மேலானது. இதனை மனதில் நிறுத்தி வடகிழக்கு மாகாணங்களில் வாழும் எமது மக்களின் சரித்திர ரீதியான உரிமைகளைப் பாதுகாக்கும் வண்ணம் அரசமைப்பு அமைய வேண்டும் என்பதே எமது அவா.

“அவற்றை மனதில் முன்னிறுத்தியே இந்த வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது என்று தயாரிப்புக் குழு கூறியுள்ளது. அதனைப் பரிசீலித்துப் பாரப்பது எமது கடப்பாடாகும். சில இடங்களில் முரண்பாடுகள் காணப்படலாம். ஒவ்வாத தன்மை எழக்கூடும். மேலதிக ஏற்புக்கள் தேவை என்று மனதிற்குப் படலாம். இவை அனைத்தும் மக்களால் பரிசீலிக்கப்பட்டுத் தயாரிப்புக் குழுவிற்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும். நான் கூட அவ்வாறான எனது கருத்துக்களை வெளியிடுவேன். இந்த வரைவை யார் தயாரித்தார்கள் என்பதிலும் பார்க்க எந்தளவுக்குக் குறித்த வரைவு எமது தமிழ் மக்களின் உள்ளக் கிடக்கைகளை, எதிர்பார்ப்புக்களைப் பிரதிபலிக்கின்றது என்பதே முக்கியம்.

“எமது வரைவு முற்றிலும் மாற்றப் படவேண்டும் என்று கூட மக்கள் விரும்பலாம். அத்தகையதொரு நிலை  வந்தாலும் அதை நாம் ஏற்றுக் கொள்வோம். காரணம் இந்த செயற்பாட்டில் வெளிப்படைத்தன்மை அவசியம். ஜனநாயக வழிமுறை அவசியம். தமிழர் நலம் பேணும் ஆத்மார்த்த எதிர்பார்ப்பும் அவசியம். கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, மக்கள் நலம் தேடும் ஒரு புனித கைங்கரியத்தில் நாம் யாவரும் ஈடுபட்டுள்ளோம் என்பதை நாம் மறத்தலாகாது.

 “எமது தமிழ் மக்கள் பேரவை பல நல்ல நடவடிக்கைகளுக்கு முன்னோடியாகப் பரிணமித்துள்ளது. எமது தமிழ் மக்களிடையே அரசியல் யாப்பு ரீதியான சிந்தனைகளை மேலோங்கச் செய்துள்ளது. அதாவது வெறும் கட்சி அடிப்படையில் சிந்திக்காது தமிழ் மக்களின் தூரகால நலம் பற்றிச் சிந்திக்க வைத்துள்ளது.

“எமது தமிழ் மக்கள் பேரவை எந்தக் கட்சிக்கும் சார்பாகவோ எதிராகவோ நடக்க முன்வராததால் அவர்கள் வெளிக்கொண்டு வந்திருக்கும் வரைவை மக்கள் யாவரும் சுதந்திரமாகவும் இதய சுத்தியுடனும் பரிசீலிக்க வழி வகுத்துள்ளது. பல்கட்சியினர் பலர் சேர்ந்து கலந்துறவாடியதால் கட்சிகளுக்கு அப்பால் நின்று கடமையாற்ற வழி அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்து அரசியல் ரீதியாக இதுவரை செயற்பட்ட தமிழ் மக்களின் கட்சிகள் யாவும் மக்கள் மனோநிலைக்கு மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டிய ஒரு நிலையை எழுப்பியுள்ளது. அரசமைப்பு மாற்றங்கள் எவ்வளவு முக்கியமானவை, எத்துணை தொடர் விளைவுகள் கொண்டவை, எந்தளவு கடமையுணர்ச்சியுடனும் கண்ணியத்துடனும், கரிசனையுடனும் பரிசீலிக்கப்பட வேண்டியவை என்பது இப்பொழுது சகலராலும் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

“அடுத்ததாக, பெரும்பான்மை தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களுக்குச் செயலுரு கொடுத்துள்ளது இந்த வரைவு என்று கூறலாம். அதாவது எமது தேர்தல் மேடைகளில் சில சொற்களைப் பாவித்துக் கைதட்டல் வாங்கிய காலம் போய் அச்சொற்களின் தாற்பரியம் என்ன, தகைமைகள் என்ன, தத்துவங்கள் என்ன என்றெல்லாம் அலசி ஆராய ஒரு சந்தர்ப்பம் அளித்துள்ளன தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகள். ஆகவே சொற்களுக்குச் செயலுரு கொடுக்கத் துணைபுரிந்துள்ளது தமிழ் மக்கள் பேரவை. தேசியம் என்றால் என்ன, சுயாட்சி என்றால் என்ன, சமஷ்டி என்றால் என்ன என்று மக்கள் கேட்டு அவற்றிற்கான பதிலைப் பெற்றுக் கொள்ள வழி அமைத்துத் தந்துள்ளது தமிழ் மக்கள் பேரவை.

“மேலும் அரசாங்கமானது யாவரிடமும் புதிய அரசியல் யாப்பு வரைவிற்கான கருத்தறியும் ஒரு செயற்பாட்டில் தற்போது ஈடுபட்டிருக்கும் போது எமது செயற்பாடுகள் அதற்கு ஒத்திசைவாக நடந்தேறி வருவது திருப்தியை அளிக்கின்றது. எந்த ஒரு தனி நபரும், சங்கமும், மக்கள் குழுவும், ஏன் கட்சிகளுங்கூட தமிழ் மக்கள் பேரவையால்  தயாரிக்கப்படும் கருத்தாவணத்தை அடிப்படை ஆவணமாகப் பாவிக்க நாம் வழி அமைத்துக் கொடுத்துள்ளோம். மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் எமது தமிழ் மக்கள் தலைவர்கள் கூட தமிழ் மக்களின் ஏகோபித்த கருத்து என்ன என்பதை ஆராய்ந்தறிந்து அதனை வெளிக்கொண்டு வரவும் தயங்காதிருப்பது எமக்கு மன மகிழ்வைத் தருகின்றது.

“எமது செயற்பாடு தமிழ்ப் பேசும் மக்கள் கருத்தறிந்து செயற்படும் ஒரு நிலைக்கு அரசாங்கத்தை அழைத்துச் சென்றால் அதுவே எமது வெற்றியென்று கருதலாம். ‘பதின்மூன்றாவது திருத்தமே தீர்வு, அதற்கு மேல் எதுவுந் தரமுடியாது, சமஷ்டியை வழங்க முடியாது’- என்றெல்லாம் கூறும் ஆளுங்கட்சி அவற்றிற்கப்பால் சென்று எமது மக்கள் மனம் அறிய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. கட்சிகளை மையமாக வைத்து இப்பிரச்சனையை அணுகாமால், களநிலையை அறிந்து, கருத்துக்கு முதலிடம் கொடுத்து, சர்வதேச தமிழ்ப் பேசும் மக்களின் ஒருமைப்பாட்டுடனும் எமது தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடனும் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் – அதாவது வடகிழக்கு மாகாணத் தமிழரும், முஸ்லிம்களும், மலையக மக்களும் – நிலையான ஒரு அரசியல் தீர்வைப் பெற எமது இந்த கைங்கரியமானது வழி வகுக்கட்டும்.” – என்று கூறினார் முதல்வர் விக்னேஸ்வரன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்சியாகப் பதிவு செய்வதில் தொடங்கி, பல திட்டங்கள், செயற்பாடுகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பகிரங்கமாக அறிவித்து ஆரம்பித்துள்ள போதிலும் அவை எவையும் குறித்த காலத்துக்குள் செயலுருப் பெறவே இல்லை.

ஆனால், தமிழ் மக்கள் பேரவை ஆரம்பித்து ஒரு குறுகிய காலத்துக்குள்ளேயே, பல தரப்பு புத்திஜீவிகளையும் சிந்தனையாளர்களையும் ஒன்றிணைத்து – பல தரப்புக் கருத்துக்களையும் ஜனநாயக ரீதியில் உள்வாங்கி – சரியோ, பிழையோ தீர்வுக்கு முன்மாதிரியான, காத்திரமான ஒரு நகல் வரைவை வெளியிடவும் செய்திருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒப்பிடுகையில் இதுவும் பேரவைக்கு ஒரு ‘பிளஸ் பொயிண்ட்’தான்.

Related posts: