தேவாவின் முகநூல் சொல்லும் வரலாற்று தொடர்- “ஈழப் போராட்டத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள்”……பாகம் – 02

Thursday, March 17th, 2016

இந்திய மண்ணில் உறக்கம் தொலைந்தது  இயக்கத்தில் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், துப்பாக்கி கையில் இருக்கின்றது என்பதற்காக ஆடு, மாடுகளை சுடுவதற்காகப் பயன்படுத்தவில்லை.

பொது எதிரியிடமிருந்து எமது மக்களையும், இயக்க உறுப்பினர்களையும் பாதுகாப்பதற்காகவும், இலக்கை நோக்கிச் செல்வதற்காகவுமே ஆயுதங்களைச் சுமந்திருந்தாரே தவிர யாரையும் சுட்டுக் கொலை செய்யவேண்டும் என்பதற்காக அவர் ஆயுதங்களை விரும்பியவராக இருக்கவில்லை.

ஆயுதம் என்பது யாருடைய கையில் இருக்கின்றது என்பது தொடர்பாக டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அடிக்கடி ஒரு உதாரணக் கதை கூறுவார்.

அதாவது ‘ஒரு வைத்தியரிடம் இருக்கும் கத்தியானது, உயிரைக் காப்பாற்றுவதற்காக பயன்படுத்தப்படும். அதே கத்தி ஒரு கொலைகாரனின் கையில் இருந்தால், அது உயிரைப் பறிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் என்பதைக் கூறும் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், தனது கையில் இருந்த ஆயுதமானது வைத்தியரின் கையில் இருக்கும் கத்திக்குச் சமமானது என்றும் கூறுவார்.

இயக்கங்களுக்கிடையே முரண்பாடுகள் ஏற்பட்டிருந்ததைப் போலவே, இயக்கங்களுக்குள்ளேயும் முரண்பாடுகள் தலைதூக்கியிருந்தன. ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கமும் அதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை.

அவ்வாறானதொரு சூழலிலேயே 1986 ஆம் ஆண்டு தோழர் பத்மநாபா அவர்களையும், ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்க முக்கியஸ்தர்களையும் இந்தியாவில் சந்தித்து உள்ளியக்க முரண்பாட்டை பேசித் தீர்ப்பதற்கும், மக்களையும், தாயகத்தையும் விடுவிக்கும் வரை சக இயக்கங்களுடன் குறிப்பாக புலிகள் இயக்கத் தலைமையுடன் கலந்துரையாடி, பொது இணக்கப்பாட்டை தோற்றுவிப்பது தொடர்பாக கலந்துரையாடுவதற்காகவும், இந்திய அரசோடு கள நிலைமைகள் தொடர்பான ஒரு கருத்துப் பறிமாற்றத்தை மேற்கொள்வதற்கும், ஆயுதச் வெளிச்சந்தையில் ஆயுதக் கொள்வனவைச் செய்வதற்காகவும் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பின்தளத்திற்கு (இந்தியாவுக்குச்) சென்றிருந்தார்.

அங்கிருந்து செயற்பட்ட சில ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்க உறுப்பினர்கள் தமது சுய இலாபங்களுக்காக டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்;கும், தோழர் பத்மநாபா அவர்களுக்கும் இடையே ஒரு விரிசலை ஏற்படுத்தியிருந்தார்கள்.

அந்த நிலைமையானது, ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்துக்குள் ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தவும் இடம் கொடுக்கவில்லை. புலிகளுடன் ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்துகின்ற முயற்சிக்கும் அவர்களே தடையாகவும் இருந்தார்கள்.

இதேவேளையில் இலங்கையிலும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் தோழர்களில் பெரும்பான்மையானவர்கள் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் செயற்பாட்டையும், அணுகு முறையையும் ஆதரித்து நின்றனர்.

ஈ.பி.ஆர்.எல்.எப் உள்ளியக்கப் பிரச்சனை தீர்ந்தும், தீராத நிலையிலும் நாபா அணி, தேவா அணி (டக்ளஸ்) என்ற செயற்பாடு ஈ.பி.ஆர்.எல்.எப் புக்குள் மெல்லத் தலைதூக்கியது.

ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்துக்குள் இரு அணி செயற்பாடு வெளிப்பட்டிருந்தபோதும், டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தரப்பில் சக இயக்கங்கள் தங்களது உள்ளியக்க பிரச்சனையை தீர்ப்பதற்காக பயன்படுத்திய கொலை செய்யும் பொறிமுறையைப் போல் ஒரு செயற்பாட்டை அவர் எந்தச் சந்தர்ப்பத்திலும் பயன் படுத்தியதுமில்லை ஆதரவளித்ததுமில்லை.

ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்துக்குள் ஏற்பட்டிருந்த முரண்பாட்டை தீர்த்துக் கொண்டிருந்த அந்த முறைமையானது, ஏனைய இயக்கங்களிலிருந்து முன்மாதிரியாகவும், ஆரோக்கியமாகவும் அமைந்திருந்தது.

பின்னர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வேறாக செயற்பட்ட காலத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்துக்குள் உள்ளியக்க முரண்பாடுகளை தீர்ப்பதற்கான ஆயுதமாக கொலைகள் செய்தல் பொறிமுறையை பிரயோகித்ததை வரலாறு அறியும்.

ஒருவேளை தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் தோழர் பத்மநாபா அவர்களும் தொடர்ந்தும் ஒன்றாக இருந்திருந்தால், பத்மநாபா அவர்களை புலிகள் நெருங்க டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இடம் கொடுத்திருக்காமல் அவரைப் பாதுகாத்திருப்பார் என்ற கருத்து இன்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் தோழர்களிடையே நிலவுகின்றது. துரதிஷ்ட்டவசமாக ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்துக்குள் இருந்த சில சதிகாரர்களின் பங்களிப்போடு புலிகள் தோழர் பத்மநாபா அவர்களை கொலை செய்தார்கள். இறுதிக் காலங்களில் தோழர் பத்மநாபாவுடன் இருக்க முடியாவிட்டாலும் அவரின் இழப்பு இன்னும் மிகுந்த வேதனைக்குரியதாகவே இருப்பதாக டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கூறுவதை பல தடவைகள் கேட்டிருக்கின்றேன்.

தமிழ் மக்கள் அரசியல் உரிமைகள் பெற்று, கௌரவத்தோடும், அச்சமின்றியும் ஒளிமயமானதுமான வாழ்வை தாயக மண்ணில் வாழ்வதற்கான தீர்வொன்றை நோக்கிய போராட்டமொன்றை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டியதன் அவசியமானது ஒரு உந்துதலையும், உணர்வையும் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு கொடுத்து அவரை இந்திய மண்ணில் இருக்கவிடாமல் துரத்தத் தொடங்கியது.

இந்தியாவில் தங்கியிருந்த நாட்களில் சதா ஒவ்வொரு நொடியும் மீண்டும் இலங்கைக்கு போகவேண்டும் என்பதையும், எப்படியாவது போகவேண்டும் என்பதையிட்டும் திட்டம் தீட்டிக்கொண்டே இருப்பதோடு மட்டுமல்லாமல் தன்னோடு இருக்கும் தோழர்களையும் இலங்கைக்கு அழைத்து செல்வதற்கு எவ்வாறான ஆயத்தங்களைச் செய்ய வேண்டும் என்பதையும் சிந்தித்துக் கொண்டே இருப்பார்.

அப்படி ஒரு நாளில்தான் பரபரப்பாக பேசப்பட்ட சூளைமேட்டுச் சம்பவம் நடைபெற்றது. அன்று 1986ஆம் ஆண்டு பதினோராம் மாதம், முதலாம் திகதி, தீபாவளிப் பண்டிகை. அன்றைய நாளிலும் அரசியல் வேலைகளின் நிமிர்த்தம் வெளியில் சென்றிருந்த டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வழமைபோல் அரசியல் வேலைகளின் வெளியில் சென்றிருந்த டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பகல் வேளையில் நண்பர் ஒருவரின் வீட்டுக்கு சென்று பகல் உணவையும் உண்டுவிட்டு, இலண்டனில் இருக்கும் அவரது அண்;ணன் விஜியானந்தா அவர்கள் தனக்கு தொலைபேசியில் அழைப்பார் என்று ஏற்கனவே தகவல் தெரிவித்திருந்ததால், அவருடன் தொலைபேசியல் உரையாடுவதற்காக சூளைமேட்டின் மற்றுமொரு பகுதியில் அமைந்திருந்த ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைமை அலுவலகத்திற்கு சென்றிருந்தார்.

அங்கு சென்ற டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் அலுவலகத்திலிருந்த தோழர் ஒருவர் சூளைமேட்டின் மற்றொரு பகுதியில் இருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தின் அலுவலகத்தில் இருந்த தோழர்களுக்கும், அந்த கிராமத்தில் புதிதாகக் காணப்பட்டவர்களுக்குமிடையே (வன்முறையில் ஈடுபடுவதற்காக திட்டமிட்ட வகையில் வெளியிலிருந்து அழைத்து வரப்பட்டிருந்த குண்டர்களுக்கும்) இடையே வாய்த்தர்க்கமும் கைகலப்பும் ஏற்பட்டு அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் அந்த அலுவலகத்திலிருந்து வருகை தந்த தோழர் ஒருவர் கூறியதாகத் தெரிவித்தார்.

அந்தத் தகவலைத் தொடர்ந்து, இலண்டனில் இருந்து டக்ளஸ் தேவானந்தா அவர்களது அண்ணனின் தொலைபேசி அழைப்பிற்குக் காத்திருக்காமல், பிரச்சனை நடந்துகொண்டிருப்பதாகச் செல்லப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் அலுவலகத்தை நோக்கிச் சென்றார்.

டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அந்த இடத்துக்குச் சென்றபோது, அலுவலகம் அமைந்திருந்த அந்த வீதியில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.

அவர்களில் சிலர் வன்முறையிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மேலும் சிலர் ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்களுடன் இழுபறியிலும், தர்க்கத்திலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

தோழர்களுக்கு ஒரு பிரச்சினை என்றாலும் இயக்கதிற்கு ஒரு பிரச்சினை என்றாலும் பொது மக்களுக்கு ஒரு பிரச்சினைகள் என்றாலும் பிரச்சினைகளைக் கண்டு ஓடிஒழிந்து கொள்ளும் நபராகவோ, தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பவராகவோ, டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எப்போதும் இருந்ததில்லை. அந்தக் குணாம்சம் காரணமாகத்தான் அந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட போது அங்கு விரைந்து சென்றிருந்தார்.

அவர் அந்த சம்பவ இடத்திற்குச் சென்றபோது அங்கு சில ஈ.பி.ஆர்.எல்.எப். முக்கியஸ்தர்களையும் கூட்டத்தோடு கூட்டமாக நின்றிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

இருந்தும் அங்கு சென்ற டக்ளஸ் தேவானந்தா அவர்கள், அங்கு பிரச்சினையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இரு தரப்பினரையும் அமைதிப் படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.

ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்களை அலுவலகத்துக்குள் செல்லுமாறு கூறியபோது அவர்கள் அலுவலக வளவுக்குள் செல்லுகின்ற வேளையில் அங்கு கூடியிருந்த வன்முறைக்கும்பல் கையில்; கிடைத்த கட்டைகள், கற்கள், கம்பிகள் மற்றும் போத்தல்கள் என்பவற்றால் தொடர்ந்து தாக்கிக்கொண்டிருந்தனர்.

தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த கும்பலை நோக்கி டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கைகூப்பிக் கும்பிட்டபடி தாக்க வேண்டாம் என்றும், அமைதியாக இருக்குமாறும், கேட்டுக் கொண்டார்.

கும்பிட்டபடி நின்ற டக்ளஸ் தேவானந்தா அவர்களை, அந்த வன்முறைக் கும்பலில் சிலர், டக்ளஸ் தேவானந்தா அவர்களைத் தாக்கத்தொடங்கினார். அந்த தாக்குலில் முன் பற்கள் உடைந்து டக்ளஸ் தேவானந்தா படுகாயமடைந்தார்.

மறைக்கப்பட்ட உண்மைகள் தொடரும்…………!

Related posts: