அரசை பதவியிலமர்த்தியதாக தம்பட்டம் அடிப்பவர்கள் வடக்கு, கிழக்கு மக்களுக்கும் எதுவும் செய்யவில்லை  – ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கூறுகிறார்!

Tuesday, October 25th, 2016

தாங்களே இந்த அரசாங்கத்தை பதவிக்கு கொண்டுவந்ததாக தம்பட்டம் அடிக்கின்றனர். இருந்தும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுக்கொடுப்பதில் கூட்டமைப்பினர் எதுவித அக்கறையும் காட்டுவதாக தெரியவில்லை. நாங்கள் அதிகாரத்தரப்புடன் இருந்தபோது வடக்கு, கிழக்கு யுவதிகளுக்கு வழங்கப்பட்ட தொழில் வாய்ப்புடன் ஒப்பிட்டு பார்க்கும்போது இந்த 2 வருடத்தில் எந்தவொரு தொழிற்பாடும் வழங்கப்படவில்லை. அபிவிருத்தியை எடுத்துக் கொண்டாலும் இதே நிலைதான் என்று ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா வீரகேசரி வார வெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு தெரிவித்தார்.

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா  வீரகேசரி பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலை எமது இணையத்தள வாசகர்களுக்காக பதிவிடுகின்றோம். அவரது செவ்வி முழுமையாக கீழே தரப்படுகின்றது.

கேள்வி: நல்லாட்சி அரசாங்கம் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு பெற்று தருவதாக வாக்குறுதியளித்தவற்றை பெற்றுக்கொடுத்துள்ளதா?

பதில்: நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்கள் சார்ந்த கொள்கைகளை முன்வைத்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் சரியாக செயற்படுகின்றனர். ஆனால் அதை முன்னெடுக்கவேண்டிய தமிழ்த் தலைமைகள்தான் கோணாங்கித்தனமாக செயற்படுவதை நாம் பார்க்கின்றோம். எமக்கு ஆட்சியாளர்களுடன் சேர்ந்து வேலைகளைச் செய்த அனுபவம் இருக்கின்றது. அந்த வகையில் இன்றைய தமிழத்; தலைமைகள் சரியாக கையாள முடியாமல் அல்லது விரும்பாமல் மேலும் முறையாகக் கையாள்வதற்கு ஆட்களில்லாத நிலையிலேயே இருப்பதை நாம் இன்று பார்க்கக்கூடியதாகவுள்ளது.

கேள்வி: இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாண இளைஞர், யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்கும் நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கின்றன?

பதில்: வடக்கு மாகாண சபை எவ்வளவோ அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். மாகாண சபையென்பது காமதேனு பசுவைப்போன்றது. காமதேனு பசு கேட்பது அனைத்தையும் கொடுக்கும். ஆனால் இப்போதைய ஆட்சியாளர்கள் எதுவித அக்கறையும் இல்லாமல் செயற்படுகின்றனர். குறிப்பாக ஆற்றலும் இருக்கவேண்டும். அக்கறையும் இருக்கவேண்டும். அப்போதுதான் மக்களுக்காக சேவைகளைச் செய்ய முடியும். எங்களிடம் இந்த மாகாணசபை மக்களால் ஒப்படைக்கப்பட்டிருக்குமானால் மூன்றிலிருந்து ஜந்து வருடங்களுக்குள் வடமாகாணத்தில் தேனும் பாலும் ஓடியிருக்கும்.

வடமாகாணத்தை வளமான பிரதேசமாக மாற்றிக்காட்டியிருப்போம். நாங்கள் அதிகாரத்தில் இருக்கும்போது ஓரளவு அதை செய்துகாட்டியிருக்கிறோம். பொருளாதார மத்திய நிலையம் எந்த நிலையில் இருக்கின்றது என்பதைப் பாருங்கள். அது குரங்கின் கையில் கிடைத்த பூமாலையின் நிலையில் இன்று இருக்கின்றது. வடமாகாணசபையிலுள்ள தங்களது அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றனர். வடமாகாண சபையில் இதுவரை முன்னூற்றுக்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. சீனி என்று ஒரு தாளில் எழுதினால் இனிக்கப்போவதில்லை. கையில் தர வேண்டும் அல்லது வாயில் போடவேண்டும். வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி மீண்டும் திறைசேரிக்கே திரும்பிச் செல்கின்றது. ஊழல் நடக்கின்றதென அவர்களே தங்களது ஆட்களைப் பார்த்துக் கூறுகின்றனர்.

இவர்களுக்கு ஆற்றலும் இல்லை அக்கறையும் இல்லை. சுயலாப அரசியலுக்காக செயற்படுவதும் கருத்துச் சொல்வதுமாகவே காலத்தைக் கடத்துகின்றனர். எங்களுடைய தேசியத்திற்கும் அவர்களுடைய தேசியத்திற்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், நல்ல கொழுப்பிற்கும் (கொலஸ்ட்ரோல்) தீய கொழுப்பிற்கும் உள்ள வேறுபாடாகும். தீய கொழுப்பு உடம்பில் கூடினால் என்ன நடக்கும்? ஆளையே கொன்று விடும். இதுதான் கடந்த காலத்தில் நடந்தது. தங்களது அரசியலுக்காக அதைக்கொண்டு வந்தனர். இப்போதும் அதைத்தான் கொண்டுவர முயற்சிக்கின்றனர். நாங்களும் தேசியத்தோடு இரத்தமும் சதையுமாக நடைமுறை சாத்தியமாக வழிமுறையில் சென்றவர்கள்.

கடந்த காலங்களில் எம்மீது பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. அவை இன்றுவரை நிரூபிக்கப்படாமல் இருக்கின்றன. அரசியல் உள்நோக்கத்துடன் அக்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளனவே ஒழிய, அதில் எந்தவித உண்மையும் இல்லை.

கேள்வி: வடக்கு, கிழக்கு கடந்த முப்பது வருட காலமாக கொடூர யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசமாகும். அங்குள்ள இளைஞர், யுவதிகள் தொழில் வாய்ப்பின்றி இருக்கின்றனர். அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இது குறித்து ஏதாவது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதென நீங்கள் நினைக்கின்றீர்களா?

பதில்: அவர்கள் இணக்க அரசியல் நடத்தி வருகி;றனர். நாங்கள் இணக்க அரசியல் நடத்தும்போது எம்மைப் பார்த்துக் கேலி செய்தனர். நாங்கள் யாருடன் இணக்க அரசியல் நடத்தினோம்? யுத்தத்தை முன்னின்று நடத்திய அரசாங்கத்துடன். கட்டாந்தரையில் கறப்பது போல் நாங்கள் இணக்க அரசியலை மேற்கொண்டோம். இப்போது பசுந்தரையில் கறக்க முடியாமல் இருக்கின்றார்கள் என்றால் அவர்களுக்கு அக்கறையுமில்லை ஆற்றலுமில்லை என்றே கூறவேண்டியுள்ளது. விக்னேஸ்வரன் எங்கிருந்தவர்? அவருக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம்? ஒன்றுமில்லை. அவர் ஒரு அரசாங்க உத்தியோகத்தர். அந்த உத்தியோகத்திலிருந்து அனுபவித்தவர்.

ஓய்வுகாலத்தில் தனது வாழ்க்கையை அனுபவிப்பதற்காக அரசியலுக்கு வந்திருக்கிறார். அவர் ஒன்றுமே செய்யவில்லை. அந்தப் பதவியிலிருந்து எவ்வளவோ செய்திருக்கலாம். சமீபத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் ஆசிரியர் நியமனம் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினையைத் தீர்க்க கல்வியமைச்சுக்கு சென்றுள்ளார். அப்போது கல்வி அமைச்சரும் அமைச்சின் செயலாளரும் அமைச்சில் இருக்கவில்லை. நான்கு மணித்தியாலம் காத்திருந்து பிரச்சினையை தீர்த்துக்கொண்ட பின்னரே திரும்பி வந்துள்ளார். ஆனால் இவர்களுக்கு அந்த உணர்வும் இல்லை.

கேள்வி: அரசாங்கத் தொழில் வழங்கும்போது இன விகிதாசாரப்படி தொழில் வழங்கும்படி தமிழ்;கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து அரசாங்கத்தை வலியுறுத்தலாமல்லவா? ஜனாதிபதி பிரேமதாஸவின் ஆட்சிக்காலத்தில் இன விகிதாசார அடிப்படையில் தொழில் வழங்கும்முறை அமுலில் இருந்தது. சில அமைச்சர்கள் தனது இனத்தை சார்ந்தவர்களுக்கு மாத்திரம் சமீபத்தில் தொழில் வழங்கியுள்ளனர். இது தொடர்பாக கூட்டமைப்பும் பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே இன விகிதாசார அடிப்படையில் தொழில் வழங்கும்படி அரசாங்கத்தை வலியுறுத்தலாம் அல்லவா?

பதில்: எம்மைப் பொறுத்தவரையில் நாம் அதை செய்துகொண்டிருக்கின்றோம். இன விகிதாசாரப்படி தொழில் வழங்க வேண்டும் என்பது குறித்து எமக்கு மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அவர்கள் முன்வருவதாக இல்லை. 19ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டபோது  அத்திருத்தம் தமிழில் எங்களுக்கு தரப்படவேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால் சுமந்திரன், காலதாமதம் ஆகிறது ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார். சமந்திரன் யார்? அவருக்கும் போராட்டத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கின்றது. இவர்கள் உள்ளே வந்தால் இதுதான் நடக்கும். ஜயர் வரும்வரை அமாவாசை காத்திருக்காது என்பதுபோல் நாங்கள் அவர்களுக்காக காத்திருக்க முடியாது. இவர்களிடம் பொய்த்தனமே இருக்கின்றது.

அரசியலுக்காகவும் தங்களது சுயலாபத்துக்குமாகவே அவர்களது நடவடிக்கைகள் இருக்கின்றன. பகிரங்கமாக கருத்துக்களை தெரிவித்த போதும் அதை அரசாங்கத்திடம் எடுத்துரைப்பதில்லை. எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் அதைச் செய்துகொண்டிருக்கின்றோம். தாங்களே இந்த அரசாங்கத்தை பதவிக்கு கொண்டுவந்ததாக தம்பட்டம் அடிக்கின்றனர். நாங்கள் அதிகாரத்தரப்புடன் இருந்தபோது வடக்கு, கிழக்கு இளைஞர் யுவதிகளுக்கு வழங்கப்பட்ட தொழில் வாய்ப்புடன் ஒப்பிடுகையில் இந்த இரண்டு வருடத்தில் தொழில்வாய்ப்பு வழங்குவது பூஜ்ஜியமாகவே காணப்படுகின்றது. அபிவிருத்தியை எடுத்துக்கொண்டாலும் இதே நிலைதான்.

கேள்வி: இக்காலகட்டத்தில் வடக்குகிழக்கு மாகாணங்களில் எதுவித அபிவிருத்தி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றா கூறுகின்றீர்கள்?

பதில்: இதற்குக் காரணம் தமிழ் தலைமைகளே. அவர்கள் தங்களது நலன்களையும் கவனத்திற்கொண்டு தங்களுக்கான வாகனங்களைப் பெறுவதிலும் எதிர்க்கட்சி தலைமைப் பதவியை பெறுவதற்கும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் பதவியை பெறுவதிலும் ஒருங்கிணைப்பு குழுக்களின் இணைத்தலைமைப் பதவிகளை பெறுவதிலுமே பெரும்பாலும் அக்கறைகாட்டி வருகின்றனர். தங்களது சுயநலன்களை முன்னிறுத்தி செயற்படுகின்றனரே தவிர மக்களின் நலநன கருத்திற்கொண்டதாக தெரியவில்லை.

கேள்வி: வடக்கு,கிழக்கு மாகாணங்களில் 30 வருடகால யுத்தத்துக்கு பின்னர் தற்போது தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை. அத்துடன் சுயதொழில் வாய்ப்புக்களும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டதாக தெரியவில்லை. தமிழ் கட்சி என்ற ரீதியில் நீங்கள் பாராளுமன்றத்தில் இது குறித்து குரல் எழுப்பலாம் அல்லவா?

பதில்: விரலுக்குத்தக்க வீக்கம் என்பதுபோல் எமது சக்திக்கு ஏற்பவே நாங்கள் செயற்பட வேண்டும். கடந்த காலத்தில் யுத்தம் நடத்திய, யுத்தத்தை வென்ற அரசாங்கங்களுடன் நாங்கள் செயற்பட்டு வந்துள்ளோம். இது மிகவும் சிரமமான விடயம். அப்போதைய நிலைமை கட்டாந்தரையில் கறப்பது போல் இருந்தது. அப்படியும் நாங்கள் அதை செய்து கொடுத்துள்ளோம். இப்போது பசுந்தரையாக காட்சியளிக்கிறது. இப்போது அதை கறக்க முடியாமலும் கறக்க விரும்பாமலும் இருக்கின்றார்கள். எங்களைப் பொறுத்தவரை எங்களது பங்கை நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம்.

இலங்கை – இந்தியா ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் போது புலிகள் தங்களில் 651பேர் களப்பலியானதாக தெரிவித்தனர். அப்படி நடந்ததுதான் எமக்கு இலங்கை – இந்தியா ஒப்பந்தம் கிடைத்தது. அதற்கு முன்னர் செய்துகொண்ட பண்டா – செல்வா ஒப்பந்தத்திற்கு என்ன நடந்தது? செல்வா – டட்லி ஒப்பந்தத்திற்கு என்ன நடந்தது? அதன் பின்னர் எத்தனையோ ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன. ஆனால் ஒன்றுமே சரிவரவில்லை. இலங்கை – இந்தியா ஒப்பந்தம்தான் இன்றும் நிலையாக இருக்கின்றது. அதை நாங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதிலிருந்துதான் ஆரம்பிக்கப்பட வேண்டும். இதைத்தான் நாங்கள் ஆரம்பத்திலிருந்தே கூறிவந்துள்ளோம்.

கேள்வி: நீங்கள் அமைச்சராக இருந்த முன்னயை அரசாங்கமே 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள அதிகாரங்களை அமுல்படுத்தவிடாமல் தடுத்தது?

பதில்: கரைப்பவர் கரைத்தால் கல்லும் கரையும் என கூறுவதுபோல் தமிழ்த் தலைமைகள் சரியாக செயற்படவில்லை. அவர்கள் மக்களின் வாக்குகளை அபகரித்துக்கொண்டு இருக்கின்றார்களே தவிர வேறொன்றும் செய்யவில்லை. எங்களுக்கு அந்த பலத்தை தந்திருந்தால் அதாவது பத்து ஆசனங்களை தந்திருந்தால் எங்களால் தமிழ் மக்களுக்கு மேலும் பலதைச் செய்திருக்க முடியும். நாங்கள் ஏற்கனவே சேவையைச் செய்து காண்பித்துள்ளோம். எமது பலம் அதிகரிக்க அதிகரிக்க மேலும் பலதைச் செய்திருக்க முடியும். மக்கள் எங்களுக்கும் ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்துப் பார்க்க வேண்டும். வடக்கில் அமைக்கப்படவிருந்த பொருளாதார மத்திய நிலையம் இன்றும் இழுபறி நிலையிலேயே காணப்படுகின்றது.

கேள்வி: இந்த அரசாங்கம் தேர்தலின் போது வாக்குறுதியளித்தது போல் வடக்கு கிழக்கில் மீள்குடியேற்றம், வீடமைப்புத் திட்டங்கள், கைப்பற்றப்பட்ட காணிகளை மீள மக்களிடம் கையளித்தமை போன்ற விடயங்களில் இதுவரை மேற்கொள்ளப்பட்டவை குறித்து நீங்கள் திருப்தி அடைகின்றீர்களா?

பதில்: இந்த அரசாங்கத்தை குறை கூற நான் தயாராக இல்லை. நாங்கள்தான் இந்த அரசாங்கத்தை நெறிப்படுத்த வேண்டும். அரசாங்கத்தை பதவியில் அமர்த்தினோம் என்று தம்பட்டம் அடித்தால் மாத்திரம் போதாது. தங்களது சொந்த நலன்கருதி தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்பவர்கள் ஏன் மக்களது தேவைகளை பெற்றுக்கொடுக்க முடியாது. தமிழ் மக்களின் பிரச்சினையை ஒரு பேசும் பொருளாக தங்களது சுயநல அரசியலுக்காக வைத்துக் கொண்டிருக்கின்றனரே தவிர மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து முடிக்கும் எண்ணம் அவர்களுக்கு இல்லை.

65,000 பொருத்து வீட்டுத் திட்டம் வந்தது. பொருத்து வீடுகளில் குறைபாடுகள் இருக்கலாம் ஆனால் ஓலைக்குடிசையில் இருப்பவர்கள் மழையில் நனைவதற்;கும் தகர கொட்ட கையில் இருப்பவன் வெயிலில் காய்வதற்கும் பதிலாக இந்த பொருத்து வீட்டுத்திட்டம் அவர்களுக்கு ஒரு மாளிகை போல் இருக்கும். இதை யார் எதிர்ப்பது? நல்ல வசதியுடன் வாழ்பவர்கள் தான் இந்த வீட்டுத்திட்டத்தைத் தற்காலிகமாகவாவது ஏற்றுக் கொள்ளுங்கள் என்றுதான் நாங்கள் கூறுகின்றோம். இறுதியில் எமது மக்களுக்கு ஒன்றுமே கிடைக்கபோவதுமில்லை.

நேர்காணல் எஸ்.கணேசன்

(நன்றி வீரகேசரி)

DD3 copy

Related posts: