ஹர்த்தால் மட்டும் தீர்வைப் பெற்றுத் தராது!

Saturday, April 29th, 2017

ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்தவர்கள் கொழும்பில் ஓய்வில் இருந்துகொண்டு, கடையடைப்பு விபரங்களை விசாரித்துக் கொண்டிருந்தார்கள். அரசியல் பேதங்களுக்கு அப்பால் அனைவரும் ஒன்றினைந்து ஹர்த்தாலை வெற்றிகரமாக நடத்தி முடிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள்.

ஹர்த்தாலுக்கான அழைப்பை யார் விடுத்தார்கள் என்பதில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அழைப்புக்கான நோக்கம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பல மாதங்களாக தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் நீதிக்கான போராட்டத்திற்கு ஆதரவளிப்பது என்பதால் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் தமது தார்மீக ஆதரவை வழங்கியது.

வடக்கு கிழக்கு மாகாணத்தில் கடைகள் மூடப்பட்டு, மக்கள் நடமாட்டம் தவிர்க்கப்பட்டு ஹர்த்தால் வெற்றிகரமாகவே நடந்து முடிந்தது. ஆனால் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நடத்தும் போராட்டம் இன்னும் தொடர்கின்றது. இதுதான் யதார்த்தம்.ஹர்த்தாலுக்கு அழைப்புவிடுத்து அரசியல் நடத்தியவர்கள், எந்த மக்களின் போராட்டத்திற்கு வலிமைசேர்க்க அதைச் செய்தார்களோ, அந்த மக்களுக்கு தீர்வு கிடைக்க அரசாங்கத்தை நோக்கி பகிரங்கமான கோரிக்கைகளை முன் வைக்கவில்லை.

மக்கள் தாமாகவே முன்னெடுக்கும் போராட்டங்களில் பகுதி நேரமாகக் கலந்து கொள்வதும்,அவர்களுக்கு உணவுப்பார்சல்களை வாங்கிக் கொடுத்துவிட்டு, தாமும் மக்களின் போராட்டத்திற்கு தமது பங்களிப்பைச் செய்வதாக பாசாங்கு செய்கின்றார்கள்.போராட்டக் கூடாரத்திற்குள் வந்து இருந்துகொண்டு தம்மோடு உணவு உண்பதாகக் காட்டிக் கொள்கின்றவர்களையும், மக்களின் போராட்டத்திற்கு அரசாங்கம் தீர்வை வழங்காதுவிட்டால் போராட்டம் வெடிக்கும் என்று முழக்கம் இடுபவர்களையும், இரவில் போராட்டக்காரர்களை சந்தித்து போராட்டவடிவத்தை “அப்படிமாற்றலாம், இப்படிமாற்றலாம்” என்று அறிவுரை கூறுவதுபோல் காட்டிக்கொண்டு நடிப்பவர்கள் தொடர்பாகவும் மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும்.

இவர்கள் தொடர்ந்து தமிழ்மக்கள் போராடவேண்டும் என்றும், தாயக மண்ணில் பிரச்சினைகள் தீராப்பிரச்சினையாக நீடிக்கவேண்டும் என்றுமே விரும்புகின்றார்கள். அவ்வாறான ஒரு நிலையற்ற சூழல் நிலவுகின்றபோதே தாம் தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டும், தமிழர் ஒற்றுமை என்று முழங்கிக் கொண்டும் அரசியல் நடத்த முடியும் என்று விரும்புகின்றவர்கள் என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்திக் கொண்டே இருக்கின்றது.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும், கோரிக்கைகளுக்கும் தீர்வுகிடைக்க வேண்டுமாக இருந்தால், அதற்காகபோராட வேண்டியவர்கள், கொழும்பில் அரசின் கோட்டைக்குள் தாம் நடத்தம் இணக்க அரசியல் எனும் ஆயுதத்தைப் பயன்படுத்திமக்களுக்காகப் போராடவேண்டும். மத்தியில் இருப்பதுயுத்தம் நடத்தும் அரசுஅல்ல. இவர்களாலேயே ஆட்சிபீடம் ஏற்றப்பட்டபுதிய ஆட்சிஎன்பதால், இவர்கள் தமது முழு பலத்தையும் மக்களின் நலனுக்காக பயன்படுத்தவேண்டும்.

அதைச் செய்யாமல் தென் கொழும்பில் இணக்க அரசியல் என்று விருந்துகளில் மகிழ்ந்து மயங்குவதும், வடக்கு கிழக்கில் தமிழ் மக்களிடையே கருத்தக் கூறும்போது “அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம்” என்றும்,“அரசுக்கு எதிராகப் போராட்டம் வெடிக்கும்” என்றும் கூறுவதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்தும் சாணக்கிய அரசியலா? என்பதை தமிழ ;மக்கள் சிந்திக்கவேண்டும்.
ஆசிரியர்