போலித் தமிழ்த் தேசியவாதிகளுக்கு தன்மானத் தமிழர்கள் பதலளிக்க வேண்டும்!

Saturday, May 6th, 2017

“இரண்டு வாரத்திற்குள் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்க அரசியல் தீர்வை முன்வைக்கும்” என்று நம்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சம்மந்தன் மே மாதம் முதலாம் திகதி தெரிவித்தார். அவரின் காலக்கெடுவில் ஒருவாரம் இனிதே நிறைவு பெற்றுவிட்டது.

இன்னும் ஏழு நாட்கள் இருக்கின்றது. ஆகவே அரசியல் தீர்வு மீது தீராத காதலுடன் இருக்கும் தன்மானத் தமிழர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிற்போக்குத் தனத்தையும்,நம்பிக்கைத் துரோகத்தையும் சரி என்று வாதிட்டுக் கொண்டு கூட்டமைப்பினால்தான் அரசியல் தீர்வைப் பெற்றுத்தர முடியும் என்றும் கூறுகின்ற சத்தியவான்களும் சம்மந்தன் கூறிய எஞ்சியிருக்கும் ஏழு நாட்களையும் எண்ணுவதற்கு தயாராக இருக்க வேண்டும்.

ஏன் என்றால் சம்மந்தன் இறுதியாக நடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது தமக்கு தமிழ் மக்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் 2016ஆண்டுக்குள் அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவதாகவும்,அரச படைகளின் வசமிருக்கும் தமிழ் மக்களின் காணி, நிலங்களை மீட்டுத் தருவதாகவும் வாக்குறுதி கொடுத்திருந்தார்.

பிறகு 2016ஆம் ஆண்டுக்குள் அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவதாக கூறியதானது, தனது “கணிப்பு” என்று கூறினார். அதேபோல் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா,“நூறு நாட்களுக்குள் படையினர் வசமிருக்கும் தமிழ் மக்களின் நிலத்தை மீட்டுத் தருவதாகவும் இல்லாவிட்டால் போராட்டம் வெடிக்கும்” என்று கூறினார்.

தமது சொந்த நிலத்தை மாவை பெற்றுத் தருவார் என்று நம்பிய இடம்பெயர்ந்த மக்கள் நாட்களை எண்ணிக்கொண்டிருந்தனர். இறுதியில் “காலச்சூழல் போராட்டத்திற்குப் பொறுத்தமாக இல்லை” என்று கூறி சொந்த நிலம் திரும்புவதற்குக் காத்திருந்த மக்களின் நம்பிக்கையில் மாவை மண்ணை அள்ளிப்போட்டார்.

இவ்வாறாக வாக்குறுதிகளையும், உணர்ச்சிப் பேச்சுக்களையும் கூறி தமிழ்மக்களை நம்பச் செய்து, ஏமாற்றியும், நம்பிக்கைத் துரோகம் செய்தும் வருகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், அரசாங்கத்துடன் இரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தி தமக்கான சொகுசு வாகனங்களையும், தமது குடும்பத்துக்கு சுக போகங்களையும் பெற்றுக்கொண்டிருக்கின்றார்களே தவிர, தமிழ்மக்களுக்கு எதையும் இவர்கள் பெற்றுத் தரவில்லை என்ற கோபத்தில் தமிழ்மக்கள் கொதித்துப் போயிருக்கின்றார்கள்.

இனிமேல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நம்பிக்கொண்டு, ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதில் பிரயோசனம் இல்லை என்ற தீர்மானத்திற்கு வந்திருக்கும் தமிழ்மக்கள்,போர்க்குற்றத்தை சர்வதேச பொறிமுறை ஊடாக விசாரணை செய்யவேண்டும் என்றும், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக நியாயம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும், அரசியல் தீர்வு பெற்றுத் தரப்பட வேண்டும் என்றும் தமிழ்மக்கள் ஆங்காங்கே தீர்வுக் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை நடத்தத் தொடங்கியிருக்கின்றார்கள்.

எமது மக்கள் தாமாகவே போராட்டங்களை நடத்தும்போது, தமிழ்மக்களின் ஏகபோக தலைமைகள் தாமே என்று கூறிக்கொண்டும், கோட்டும் சூட்டும் போட்டுக் கொண்டும் இராஜதந்திரிகளுடன் கை குழுக்கி,விருந்துகளில் மயங்கிக் கிடக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கும்.

ஆகையால் மக்கள் வீதியில் இறங்கிப் போராடும் நிலைமையை உடனடியாக தடுத்துநிறுத்தவதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் செய்ய கூட்டமைப்பு திட்டம் தீட்டியுள்ளது. அதற்காக புதிய வாக்குறுதிகளை வழங்குவது, அரசியலில் புதிய நகர்வுகளைச் செய்வதுபோல் நாடகமாடுவது என பல யுக்திகளை அரங்கேற்றத் தொடங்கியுள்ளார்கள்.

புதிய வாக்குறுதிதான் இரண்டு வாரத்திற்குள் அரசியல் தீர்வு அரசாங்கத்தால் முன்வைக்கப்படும் என்ற சம்மந்தனின் நம்பிக்கை. முன்னாள் புலிகளை தமிழரசுக் கட்சியில் இணைத்துக்கொள்ள தமிழரசுக் கட்சி தீர்மானித்திருப்பதாகக் கூறியிருப்பதானது,அரசியல் நாடகம். இந்த நாடகத்தையும், அதில் மறைந்திருக்கும் குள்ளநரித்தனத்தையும் புரிந்து கொண்டதால்,“புலிகளுக்கு நரிகள் தலைமை தாங்குவதா?” என்ற பதிலை தமிழரசுக் கட்சிக்கு முன்னாள் புலிகள் பகிரங்கமாகக் கொடுத்து, தமிழரசுக் கட்சியின் மூக்கில் ஓங்கிக் குத்திவிட்டதாகும்.

இதேபோல் தமிழ்மக்களும் தொடர்ந்தும் தமக்கு ஒற்றுமையின் பெயராலும், தமிழ்த் தேசியத்தின் பெயராலும் நம்பிக்கைத் துரோகத்தையும், ஏமாற்றத்தையும் செய்து கொண்டு,தமது தலைமைகள் என்று சுத்துமாத்து அரசியல் செய்து கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உரிய பதிலடியை வழங்க வேண்டும்.

நம்பிக்கைத் துரோகிகளினதும், ஏமாற்றுப் பேர்வழிகளினதும் முகத்திரையை கிழித்து,உண்மையான மக்கள் சேவகர்களையும்,மக்களை நேசிப்பாளர்களையும் அரங்கிற்கு கொண்டுவருவதே மானமுள்ள தமிழனின் கடமை என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உணர்த்த வேண்டும்.

ஆசிரியர்

Related posts: